இது அனன்யா பக்கம் -Small acts of kindness go a long way

இது அனன்யா பக்கம்


 


இன்று


 கனிவான செயல்கள் என்றும் மனநிறைவே


    இப்பொழுதெல்லாம் பார்க்கும் எல்லாமே மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. பல முக்கியமான விஷயங்களுக்கு எல்லோரும் படு அலட்சியமாக இருப்பதாக படுகிறது. அனவாஸ்யமாக ஹார்ன் அடிப்பது, அனாவஸ்யமாக அடுத்தவர்களை எரிச்சலூட்டுவது, பயமுறுத்துவது, அடுத்தவர்கள் கஷ்டப்பட்டால் எனக்கென்னவென்கிகற ஹோதாவில் நடந்து கொள்வது. பச்.


மூன்று விஷயங்களை கவனித்தேன். மஹா ஆச்சர்யப்பட்டேன்.


       ஓ எம் ஆர் SRP Toolஸில் ஒரு பாட்டி 19b பஸ்ஸை பிடிக்க ட்ரைவருக்கு கை காட்டிக்கொண்டே நடக்க முடியாமல் வேகமாக வந்தார். ட்ரைவர் பொறுமையாக காத்திருந்து பாட்டி ஏற முடியாமல் ஏற, திரும்பிப்பார்த்துக்கொண்டு காத்திருந்தார். ”ஒக்காரும்மா” என்றார். பாட்டியோ ”டிக்கெட் எடுக்கணும்பா” என்ற வாரே கண்டக்டரை தேடிக்கொண்டிருந்தார். காலை ஆறு மணி. பெரிய கூட்டமில்லாததால் கண்டக்டர் உடனே, “ நானே வர்றேம்மா, உக்காருங்க” என்றார். பாட்டி உட்காரவும் அவரிடமே வந்து இடம் கேட்டு டிக்கெட் கொடுத்தார். மஹானுபாவர்.        மதர் தெரஸாவுடன் அவுட்டிங். பஸ்ஸில் போய் பல காலம் ஆனபடியால்,”பஸ்ஸில் தான் போகணும்” என்றார். சரிம்மா. ”இந்தோ நிக்கறதே, இந்த பஸ்ஸை பிடிக்க முடியுமா?” என்றேன். ”ஓ பிடிக்கலாமே” என்றபடி தள்ளாடி, ஓட்டமும் நடையுமாக அம்மா ஓடி வரும் வரை பஸ் மூணு ஸ்டாப்பிங் தாண்டி போயிருக்கலாம் ஆனாலும் , ட்ரைவர் அதி பொறுமையாக நின்று அம்மாவை ஏற்றிக்கொண்டார். மஹானுபாவர்.


       இந்த விஷயத்தை சொல்வதற்கு எதுற்கு இளைய தலைமுறையை திட்டுகிறேன்னு நீங்கள் என்னைக் கேட்கலாம். OMRல் எந்த ஸ்டாப்பிங்கில் பஸ் நின்றாலும் என்னமோ எல்லாரும் படு நிதானமாக அடிப்பிரதக்ஷிணம் வைத்துக்கொண்டு நடந்து வருவது. பஸ்ஸில் எல்லோரும் காத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தால், இவர் ரோட்டை கிறாஸ் பண்ணிக்கொண்டு அன்ன நடையில் படு கேஷுவலாக நடந்து வந்து ஏறுவார்கள். துளி சுறுசுறுப்போ, பதட்டமோ இருக்கவே இருக்காது. ஒரு நாள், ஒரு கண்டக்டர் ஒரு இளம் பெண்ணை நன்றாக திட்டினார். ”நாள் பூரா வண்டி இங்க நிக்காதும்மா, வேகமா ஏறு.” பெருமையாக சிரித்துக்கொண்டு அலட்சியமாக அந்த பெண் போய் அமர்ந்தார்.


              குப்பாயி அம்மா இப்போதெல்லாம் படப்பை போய்விட்டார். அங்கிருந்து வாரத்தில் சில நாட்கள் இங்கே வருவார் வீட்டு வேலை செய்ய. ”கிருஷ்ணா காலேஜ் கிட்ட பஸ்ஸு வர்ல, அதேன் ரோட்டுல பைக்ல வந்த ஒருத்தரு கிட்டே கேட்டேன். தாம்பரத்துல பைக்குல கூட்டிட்டு வந்து விட்டாரு. எங்கம்மா போகறீங்கன்னாரு. வீட்டு வேலை செய்ய மாம்பலத்துக்கு போறேன்னேன். அதுக்கு சொல்றாரு, “இந்த வயசுல தினைக்கும் படப்பைலேந்து தி நகருக்கா வேலைக்கி போகறீங்க? ஆமாங்க , என்னைய பார்த்துக்க யாருமில்லை அதேன் வேலைக்கு வர்றேன் “என்றார் முகமெல்லாம் புன்னகையோடு. ”எதுனா தேவைப்பட்டா சொல்லுங்கம்மா, நான் செய்யறேன்” என்றாராம். ஆஹா. அப்படியா சொன்னார்? அக்கறையாக ஒரு விசாரணை போதுமானதாக இருக்கிறது முதியவர்களுக்கு. அவ்வளவு சந்தோஷம் குப்பாயி அம்மாவுக்கு. மஹானுபாவர்.


சட்டென்று எனக்கு கண்கள் பனித்தாலும், அடுத்தவர்களின் நிலைக்கு கவலைப்படும் இதயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முதியவர்களை கனிவோடு நடத்தும் கண்டக்டர்களும் ட்ரைவர்களும், ஆட்டோக்காரர்களும் பைக்கில் லிஃப்ட் கொடுக்கும் நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. Thank you, Universe!


Small acts of kindness go a long way.


---அனன்யாமகாதேவன்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்