டெல்லி போலிஸை அலறவிட்ட சாகேத் கோகலே

பெரும் குழப்பத்தில்   டெல்லி காவல்துறை.


பிப்ரவரி 2 அன்று, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், ``தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்!" என்று முழக்கமிட்டுப் போராட்டம் நடத்துவதற்குக் காவல்துறை அனுமதி வாங்கியுள்ளார் செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான சாகேத் கோகலே. அவருக்கு அனுமதி வழங்கியதே டெல்லி காவல்துறையின் பெரும் குழப்பத்துக்குக் காரணம்.


           டெல்லியில் தற்போது மாநிலத் தேர்தல் பிரசாரங்கள் அனல் பறக்கின்றன. பி.ஜே.பி-க்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் ஒன்றில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ``தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்!" என்று முழக்கமிட்டார். அவருடன் சேர்ந்து அப்பகுதி பி.ஜே.பி-யினரும் அதையே முழக்கமாக வெளிப்படுத்தினர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதால்  அனுராக் தாக்கூரை நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.


                   எனினும் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் அனுராக் தாக்கூர் பேசியிருக்கிறார் எனவும், அவர்மீது காவல்துறை நடவடிக்கை தேவை எனவும் பல்வேறு குரல்கள் எழுந்தன. அனுராக் தாக்கூர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், அனுராக் தாக்கூர் கூறியது போலவே, டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டார்.


                   இந்த நிகழ்வு  அனுராக் தாக்கூரின் கருத்துக்கு ஆதரவாக டெல்லி காவல்துறை செயல்படுகிறது என்ற சர்ச்சை எழுந்தது. டெல்லியைச் சேர்ந்த செயற்பாட்டாளரான சாகேத் கோகலே டெல்லி காவல்துறை, இணையமைச்சருக்கு ஆதரவாக செயல்படுவதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்த விரும்பினார்


. இதையடுத்து, அவர் டெல்லியின் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்குச் சென்று, ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதிப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறும் கடிதம் அளித்திருந்தார். அந்தக் கடிதத்தில் அவர், ``தேசத்துரோகிகளைத் துப்பாக்கியால் சுடுங்கள்!" என்று அனுராக் தாக்கூர் கூறிய அதே முழக்கத்தைப் போராட்டத்தில் கூறப் போவதாகக் கூறியிருந்தார். காவல்துறை அந்த முழக்கத்துக்கு அனுமதியும் அளித்தது.


இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் விவரிக்கும் சாகேத் கோகலே, ``காவல் நிலையத்தில் காவலர்கள் `குடியுரிமை திருத்தத்துக்கு எதிரான போராட்டமா?' என்று கேட்டனர். `இல்லை, மதவாத சக்திகளுக்கு எதிராகவும், ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராகவும் போராட்டம்' என்று கூறினேன். காவலர்கள், `ஜாமியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம்' என்று அதைப் புரிந்துகொண்டார்கள். எனக்குப் போராட்டம் நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை. அனுராக் தாக்கூரின் சர்ச்சைக்குரிய முழக்கத்தைக் காவல்துறை அங்கீகரிக்கிறது என்பதை எழுத்துபூர்வமாக வாங்கவே நான் இதைச் செய்தேன்" என்று கூறியுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி