தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது



  • சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9-ந்தேதி நடந்த விழா ஒன்றில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து அதற்கான பணிகள் நடந்து வந்தன.

     

    நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை கூடி, முதல்- அமைச்சரின் அறிவிப்புக்கு ஒப்புதல் வழங்கியது.

     

    இதைத்தொடர்ந்து சட்ட சபையில் நேற்று இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

     

    சட்டசபையில் நேற்று காலை கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

     

    இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

     

    காவிரி ஆற்றுப்படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. இது, மாநிலத்தில் உணவு தானிய மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதுடன் மாநிலத்துக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. சமீபகால ஆண்டுகளில் சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள், இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர் விளைவாக பாதித்து, மாநில உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டு உள்ளது.

     

    இம்மண்டலத்தில், வேளாண்மையை பாதுகாக்கும் பொருட்டு, சில நடவடிக்கைகளை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக விவசாயிகளின் நலனுக்காக சேவை செய்வதற்கும், பண்ணை உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், பண்ணை நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உயர்மட்ட குழு ஒன்றினை அமைக்கவும் இந்த சட்ட முன்வடிவு விழைகிறது.

     

    இந்த சட்டம் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் என வழங்கப்பெறும். இது உடனடியாக, நடைமுறைக்கு வருதல் வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கறம்பக்குடி வட்டாரங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள் இதில் அடங்கும்.

     

    எந்தவொரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 2-ம் இணைப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அதாவது, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை, செம்பு உருக்காலை, அலுமினியம் உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் ஒத்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளடங்கலான இயற்கை வாயுகளின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயற்பாட்டையோ மேற்கொள்ளுதல் ஆகாது.

     

    இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம் குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றை பாதித்தலாகாது.

     

    இந்த விதிகளை மீறுகிறவர்கள் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்க வழி செய்யப்படுகிறது.

     

    இந்த சட்டத்தின் நோக்கங் களை நிறைவேற்றுவதற்கு முதல்-அமைச்சரை உள்ளடக்கிய 24 பேர் கொண்ட அமைப்பு அமைக்கப்படுகிறது. இது ‘வேளாண் மண்டல அதிகார அமைப்பு’ என்ற பெயரில் செயல்படும். இதில் முதல்-அமைச்சர் தலைவராக இருப்பார். துணை முதல்- அமைச்சர், நிதி, சட்டம், வேளாண்மை, சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகம், தொழில் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் ஆகிய துறைகளின் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், அரசு செயலாளர்கள், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அரசால் முன்மொழியப்படலாகும் நாடாளுமன்ற உறுப்பினர், 2 சட்டமன்ற உறுப்பினர், 3 விவசாய பிரதிநிதிகள், வேளாண் அறிவியல், தோட்டக்கலை அறிவியல், கால்நடை மற்றும் விலங்கியல் துறையில் ஒவ்வொன்றிலும் ஒரு நிபுணர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

     

    அதிகார அமைப்பின் தலைமையிடமானது சென்னையில் இருத்தல் வேண்டும். அதிகார அமைப்புக்கு உதவுவதற்காக மாவட்ட கலெக்டர் களை தலைவராக கொண்டு அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட அளவிலான குழு அமைக்கப்படும்.

     

    அதிகார அமைப்பு பின்வரும் செயற்பணிகளை செய்தல் வேண்டும். உணவு பாதுகாப்புக்கான உள்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் அடிப்படையிலான மற்றும் அது சார்ந்த தொழிலகங்களின் மேம்பாட்டினை எளிதாக்குதல். வேளாண் நிலங்களை பாதுகாத்து, விவசாய பொருளாதாரத்துக்கு நிலைத்தன்மையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றை உள்ளடக்கி செயல்படும்.

     

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. பின்னர் இந்த சட்ட மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

     

    அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்த மசோதாவை வரவேற்கிறோம், ஆனால் இந்த மசோதாவில் திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய டெல்டா பகுதிகள் விடுபட்டு உள்ளது. வேளாண் நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றக்கூடாது என்று கூறப்படவில்லை. நடை முறையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து, உண்மையிலே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும். எனவே இந்த சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

     

    அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

     

    ஆனால் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக் காததை கண்டித்து அவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளியேறினார்கள்.

     

    இதைத்தொடர்ந்து, சட்ட மாசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி