கூகிள் ப்ளே ஸ்டோருக்கு போட்டியாக சீனாவின் ஒரு தனி ப்ளே ஸ்டோர்
அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும், சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும் பொருளாதார ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் பல மறைமுகப் போட்டிப் போட்டு வருவது நாம் எல்லோருக்கும் தெரியும். அதிலும் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், ஸ்மார்ட்போன் துறைகளில் யார் ஆதிக்கம் செய்யப்போகிறார் என்கிற போட்டி தான் இரு நாடுகளுக்கும் மத்தியில் வர்த்தகப் போட்டி உருவாக்கக் காரணமாக இருந்தது என்றால் மிகையாகாது.
வர்த்தகப் போர், கொரானா வைரஸ் எனப் பல தடைகளைச் சந்தித்து வரும் நிலையிலும் உலகளவில் அனைத்து பிரிவும் ஆதிக்கம் செய்து வரும் கூகிள் நிறுவனத்துடன் நேரடியாகப் போட்டிப் போடும் வகையில் ஒரு தனி ப்ளே ஸ்டோரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள்.
இன்று உலகளவில் விற்பனையாகும் ஸ்மார்போன்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன் சீன நிறுவனங்களுடையது தான். ஆனால் ஸ்மார்ட்போன் டெக்னாலஜி, அதற்கான சேவைகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என மற்ற எல்லாவற்றிலும் ஆதிக்கம் செய்வது அமெரிக்க நிறுவனங்கள் தான் அதிலும் குறிப்பாகக் கூகிள் நிறுவனம். இந்த ஆதிக்கத்தை உடைக்கப் பலரும் தனித்தனியாக முயற்சி செய்த நிலையில் அனைவரும் தோல்வியை மட்டுமே சந்தித்தனர். இந்நிலையில் சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைவரும் ஒன்று கூடி புதிய ப்ளே ஸ்டோரை உருவாக்க உள்ளனர். கூகிள் நிறுவனத்தை எதிர்க்க அங்காளி பங்காளி அனைவரும் இணைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது
கூகிள் பிளே ஸ்டோரின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் சீனா தவிர வெளிநாடுகளில் இருக்கும் ஆண்டுராய்டு டெவலப்பர்களுக்குத் தனித் தளத்தை உருவாக்கி அதில் அனைவரையும் தங்களது ஆண்டுராய்டு ஆப்களைப் பதிவேற்றம் செய்து மிகப்பெரிய App Store-ஐ உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தைச் சீனாவின் சியோமி, ஹூவாவே டெக்னாலஜிஸ், ஒப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் தலைமை தாங்கி நடத்த உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மார்ச்-ல் துவக்கம் இப்புதிய தளத்தை Global Developer Service Alliance (GDSA) எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இத்தளத்தில் சீனாவை தாண்டி வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவரும் கேம்ஸ், மியூசிக், மூவிஸ் மற்றும் இதர பல தரப்பட்ட ஆப்-களையும் பதிவேற்றம் செய்து பட்டியலிடலாம். இது புதிய ஆண்டுராய்டு டெவலப்பர்கள் மட்டும் அல்லாமல் சின்னச் சின்னச் சேவைகளை அளிக்கும் நிறுவனங்களும் பெரிய அளவில் உதவி செய்யும். இந்த மாபெரும் தளத்தை வருகிற மார்ச் மாதம் இந்த 4 பெரும் நிறுவனங்கள் அடங்கிய கூட்டணி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Comments