முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா திருவாரூரில்  நடந்தது.


 


விழாவுக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட் கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி ரங்கநாதன் தலைமை தாங்கினார்.


 


விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


 


ஜெயலலிதாவின் ஆசியுடன் விவசாயிகளை பாதுகாக்கக்கூடிய சட்ட முன்வடிவை முதல்-அமைச்சராக நான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு பெருமை அடைகிறேன். ஒரு விவசாயியான நான் முதல்-அமைச்சராக இருந்து விவசாயிகளின் துயரங்களை அறிந்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


 


கோடி, கோடியாக பணம் சம்பாதிக்கலாம். ஆனால் மனநிறைவு கிடைக்காது. மனநிறைவோடு வாழக்கூடிய பாக்கியத்தை இறைவன் விவசாயி ஒருவனுக்குத்தான் வழங்கி இருக்கிறார்.


 


விவசாயியாகிய நான், முதல்-அமைச்சராக இருந்தாலும் இங்கே உள்ளே அத்தனை பேரையும் முதல்-அமைச்சராகத்தான் பார்க்கிறேன். உங்கள் மனதில் என்ன உணர்வு உள்ளதோ அதே உணர்வு எனக்கும் இருக்கிறது. முதல்-அமைச்சர் பதவி வரும், போகும். ஆனால் உணர்வு என்பது எப்போதும் உள்ளத்தில் இருக்கும்.


 


எனக்கு முன்பு பேசியவர்கள் கூறும்போது ஆளுபவர்கள், உழவர்களாக இருக்க வேண்டும் அல்லது உழவு பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது உண்மைதான். 65 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பூமி தமிழ்நாடு. விவசாயம் பற்றி தெரிந்தவர்கள் தமிழகத்தை ஆண்டால்தான் அவர்களது பிரச்சினைகளை தீர்க்க முடியும்.


 


விவசாயிகளின் நிலையை உயர்த்த வேண்டும். அவர்களுக்கு இரட்டிப்பு வருமானத்தை வழங்க வேண்டும் என்பதற்காக எனது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. எந்தெந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்க முடியுமோ அதையெல்லாம் திட்டமாக தீட்டி செயல் வடிவம் கொடுத்து வருகிறோம். விவசாய பணிகள் முழுவதையும் நான் கற்றுக்கொண்ட காரணத்தினால் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டாவை அறிவித்து சட்டமுன்வடிவை கொண்டு வந்தேன்.


 


இங்கே மேடையில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் அனைவரும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக உரிமைக்குரல் கொடுத்து கொண்டிருந்தோம். அந்த காலக்கட்டத்தில் போலீசார் பல்வேறு வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்தனர்.


 


இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.


 


இன்றைய தினம் அது முடிவுக்கு வந்துவிட்டது. உங்கள் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


 


பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் குறித்து இன்னும் சிலர் சந்தேகத்தை எழுப்புகிறார்கள். அண்மையில் கூட தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஒருவர், நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை கொண்டு வர மத்திய அரசுக்கு தான் உரிமை இருக்கிறது. எப்படி மாநில அரசு இதை நிறைவேற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார். விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதைப்போல இந்த சட்டம் கொண்டு வந்தது சிலருக்கு பிடிக்கவில்லை.



சட்டம் நிறைவேற்றப்பட்டதும் பிடிக்கவில்லை. அதனால் தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். இதை விவசாயிகள் தெரிந்து கொண்டால் போதும். யார் விவசாயிகள் பக்கம் உள்ளார்கள் என்பதை நீங்கள் உணர்வு பூர்வமாக தெரிந்து கொள்ளுங்கள். இன்றைக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டு உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் தி.மு.க.வினர் சந்தேகம் கிளப்புகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் எப்படி கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


 


மத்திய சுற்றுச்சூழல் மந்திரி, மாநில அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என தெளிவாக சொல்லி விட்டார். டெல்டா பகுதி விவசாயிகள் இனி அச்சப்பட தேவையில்லை. எந்த காலத்திற்கும் இந்த சட்டம் உங்களுக்கு துணை நிற்கும்.


 


இவ்வாறு அவர் கூறினார்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி