தமிழ்த் திரைப்பட உலகில் வெற்றி வரலாற்றை படைத்த விசு

இயக்குனர் திரை எழுத்தாளர், 
நாடக ஆசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநர்  என்று பல முகங்கள் கொண்ட விசு அவர்கள் மறைந்து விட்டார்.


    அவர் இயக்கிய படங்களான மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் ஆகிய இரு படங்களும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.


           மறக்க முடியாத கிளைமாக்ஸ் காட்சிகள் என்று பட்டியலிட்டால் அதில் கட்டாயம் இடம்பெறும் காட்சி சம்சாரம் அது மின்சாரம் கிளைமாக்ஸ் காட்சி. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைவதை எதிர்ப்பதமாகவே சொல்லிப் பழக்கம் நமக்கு. ஆனால் இதுதான் சரியான முடிவு என்று ஏற்றுக்கொள்ள வைத்திருப்பார் அக்காட்சியில். அது வெறும் ட்விஸ்ட் அல்ல.  லாவகமாகக் கையாளும் திறமை மட்டுமல்ல... அதில்  யதார்த்தத்தின் பிரதிபலிப்பு இருந்தது.


'         குடும்பம் ஒன்று சேரும் நேரத்தில் ஏம்மா இப்படிப் பேசறே?' என்ற கேள்விக்கு 'இன்னொரு முறை இந்த வலியை என்னால் தாங்க முடியாது மாமா... ஒட்டிடுத்தே ஒழிய ஒட்டுன தழும்பு எப்பயும் தெரிஞ்சுக்கிட்டே இருக்கும்... தூரத்திலிருந்தே ஒருத்தர ஒருத்தர் நல்லாயிருக்கியான்னு கேட்டுப்போம்... ' என்று மூத்த மருமகளான லட்சுமி அதில் பேசும்போது திரையரங்கமே ஆரவாரத்துடன் கைதட்டியது. அதிலிருந்த நடைமுறை உண்மைதான் அதற்குக் காரணம் . பீம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகிய இயக்குநர்களின் விழுமியங்களை வைத்துக்கொண்டு காலத்தின் கருத்தோட்டத்தையும் கூறிய காட்சி அது. 


          படம் முழுக்க பட்டாசாய் வசனங்கள் வெடித்துக் கொண்டே இருக்கும். அந்தப் படத்தில் மட்டுமல்ல... அவரது எல்லாப் படங்களிலும். அது அவரது பலம்.  விசுவல் மீடியம் அவருக்கு ஏற்றார் போல் விசு மீடியமானது.


        கதையின் மையக் கருத்தைப் பார்வையாளர்களை நிறைந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வைப்பதுதான் ஒரு திரைக்கதை வசனகர்த்தாவின் பணி. அதில் விசு அவர்கள் ஒரு நிபுணர். 


           நடிகர்களுக்கு ஏற்ற பாத்திரங்களை வழங்கி அவர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட இயக்குனர் விசு அவர்கள்.
'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் பாத்திரங்கள் எல்லாமே அவரது கைபட்டுப் பரிமளித்தன. அதில் வரும் விசு, லட்சுமி, மனோரமா, சந்திரசேகர் ஆகியோரின் பாத்திரங்களை தமிழ்த் திரைப்பட ரசிகர்களால்
மறக்க முடியுமா? 


            தன்னை மையக் கதாபாத்திரமாக வைத்துக் கதை எழுதி அதைத் திரைப்படமாக எடுத்து அதற்கொரு வியாபார மதிப்பையும் உருவாக்கிக்கொண்ட துணிச்சல் மிக்க இயக்குனர் விசு அவர்கள். சில படங்களுக்கு அவரே தயாரிப்பாளரும் கூட. அதற்கு அவரது திரைக்கதை வசனமே பலமாக இருந்தது. 


           தலைப்பிலேயே தனக்கொரு பாணியை ஏற்படுத்திக் கொண்டார். குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, வரவு நல்ல உறவு, பெண்மணி அவள் கண்மணி எனத் தலைப்பிலேயே இது விசு படம் எனத் தெரியவைத்தார்.


                தான் இயக்கிய படங்களில் குடும்பப் பிரச்சினைகளை நகைச்சுவையோடு அலசி அவற்றுக்கு அழகான தீர்வுகளைச் சொன்னார். பிரச்சினையின் பல கோணங்களையும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் பேசி அனைவரும் ஏற்கும் முடிவுக்குக் கொண்டு வருவார். அவரது இந்தத் திறன் தான் பின்னாளில் அவர் நடத்திய "அரட்டை அரங்கம்' நிகழ்ச்சிக்கு அடிப்படை ஆனது.


                இயக்குனராக வருவதற்கு முன் அவர் கதை வசனம் எழுதிய படங்கள், திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'நல்லவனுக்கு நல்லவன்'. தெலுங்கு படமொன்றின் ரீமேக். அவரது எழுத்தாற்றலுக்கு ஓர் உதாரணம். ரஜினியின் மாபெரும் வெற்றிப் படமான 'மிஸ்டர் பாரத்' - தும் அவரது திரைக்கதைதான். 


                  இன்னும் நிறைய உண்டு. இயக்குனர் கே. பாலசந்தரின் தில்லுமுல்லு, நெற்றிக்கண் படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். 'பட்டினப்பிரவேசம்' எனும் விசுவின் மேடை நாடகத்தை பாலசந்தர் இயக்கினார். முக்தா சீனிவாசன் இயக்கிய ' அவன் அவள் அது ' 'கீழ் வானம் சிவக்கும்' ஆகியவற்றுக்குத் திரைக்கதை, இயக்குனர் துரை இயக்கி ரஜினி நடித்த 'சதுரங்கம்' படத்துக்குக் கதை வசனம் ..... என நீண்டுகொண்டே போகும் அப் பட்டியல்.


              மேடை நாடகங்களில் சாதித்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முத்திரை பதித்தவர். அவரது அரட்டை அரங்கமும் மக்கள் அரங்கமும் பல 'டாக் ஷோ' க்களுக்கு முன்னோடி. 


                    அவர் இயக்காத பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.நான் இயக்கிய 'தித்திக்குதே' படத்தில் அரட்டை அரங்கம் நடத்தும் விசுவாகவே நடித்தார். 'ஆனந்தம்' படத்திற்கு நான்தான் வசனம் எழுதினேன் என்று கூறியதும் தோளில் தட்டி ஆசிர்வதித்தார். இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு நடுவே அவரது திரைக்கதை அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். நினைவில் அவை மீண்டெழுகின்றன


        இப்போது.கடைசியாக சில மாதங்களுக்கு முன் கவிஞர் நெல்லை ஜெயந்தா நடத்திய காவியக் கவிஞர் வாலி  பிறந்தநாள் விழாவில் அவரைப் பார்த்தேன். அருமையாகப் பேசினார். அவரிடம் நான்தான் பேச இயலவில்லை. மேடையில் இருந்து இறங்கி உடனே புறப்பட்டு விட்டார். ஆரோக்கியமாகவே தெரிந்தார். இன்னொரு முறை பேசிக் கொள்ளலாம் என தூரத்திலேயே நின்றுவிட்டேன். இனி அந்த தூரத்தைக் கடக்க இயலாது.


போய் வாருங்கள் சார்.
தமிழ்த் திரைப்பட உலகம் எப்போதும் உங்கள் வெற்றி வரலாற்றை மறக்காது.



- பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,