கவிதைபக்கங்கள் - உனது முகவரியில் எனது மனசு 

கவிதைபக்கங்கள்


உனது முகவரியில் எனது மனசு 


உன் மெளனச் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்க்கிறது எனது காதல் தீ
உன் பார்வைத் துளிகளால் எனது இருள் கழுவி 
உன்னால்தான் வெளிச்சமாக்க முடியும் 
எனது வனம் உனது மழையின்றி வேர்களால் பிரார்த்தனை புரிகிறது 


தூர்ந்து போன ஒரு நதியின் சுவடாய் 
எனது மணல் காய்ந்து சரசரக்கிறது 
உனது காதற் பாதத்திலிருந்து ஊற்றுப்பொங்க
மரணித்துப் போகுமே எனதான வரட்சி 


வெற்றுக் கோப்பையான என் காலத்தில் 
ஒரு பசுவாய் வந்து நீ பால் பொழிவாயானால்
என் தாகம் தொடருமே தீர்ந்தும் தீராமலும் 


ஒரு மீனாய் 
ஒற்றைச் சிறகுகொண்டு ஒரு வெள்ளைப் பறவையாய்   
நீ ஒரு கொக்காய் நீந்திவருவாயென்றுஉனது ஆற்றோரம் 
நான் நிற்கிறேன் 


ஒரு மரத்தில் அணில் பழுத்துத் தொங்க
எனது கனி ஏறிவருகிறது  
 பறித்துச் சுவைக்கவேண்டுமென்று


எனது காதல் நண்டு அடம்பிடிக்கிறது 
உனது கடற்கரை கேட்டு 


என்னை ஞானியாக்குகின்ற 
உனது அழகும் காதலுந்தான் எனது ஏழாம் அறிவு கடந்த ஞானம்


உன் காதல் பல்கலைக்கழகம் 
நுழைவுச் சீட்டுக் கிடைக்கும் வரையும் 
எனது உயிர் பரீட்சை எழுதுகிறது
அதன் பெறுபேற்றில் தெரிந்திடும் உனது முகமும் முகவரியும் 


ராஜகவி ராகில்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை