நந்திக்கு காப்பரிசி


நந்திக்குக் காப்பரிசி எதற்கு?

        தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ‘‘பயப்படாதீர்கள்!’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!’’ என்றார்ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார். அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால்,விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ‘‘ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வசாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?’’ என எகத்தாளமாகப் பேசினார்.உடனே சிவபெருமான், ‘‘நந்தி! இங்கு வா!’’ என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ‘‘இதை முகர்ந்து பார்!’’ என்றார். நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார்.கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார். உலகின் அனைத்து ஜீவராசி களுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ‘‘ஸ்வாமி! நந்திக்குஇப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!’’ என வேண்டினாள்.‘‘உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!’’ என்றார் சிவபெருமான். அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார். அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.முந்தி வரம் தரும் நந்தி தரிசனம் என்பார்கள். ‘நந்தியின் நாமம் நமசிவாயவே’ எனப் பாடிப்பரவி யுள்ளார் திருஞானசம்பந்த பெருமான். நந்திஎன்பதற்கு வளர்வது என்று பொருள். ஞானத்திலும், குணத்திலும் உயர்ந்தவர்களை நந்திகள் என்றழைப்பது உண்டு. நம் வாழ்வு செழிக்க, ஞானம் வளர இறைவனின் திருவருள் தேவை. நந்தி தரிசனம் அதற்கு உதவும். பிரதோஷம், சனி பிரதோஷமாக வருவது மிகவும் விஷேசம்.பிரதோஷம் அன்றுஉரிய நேரத்தில் சிவாலயம் சென்று வணங்குவதுடன், நம் வாழ்வு செழிக்க நந்தியையும் வணங்கி, அவர் மூலம் சிவனாரிடத்து வரம்பெற்று மகிழ்வோம்.

நந்தியின் நல்லருளை பூரணமாகப் பெற்று மகிழ ஏதுவாக, நந்தியெம் பெருமான் குறித்த சிறப்பு தகவல்களும் ,தலங்களும். .

* திருவையாறு புராணம் திருமழப்பாடியில் சிலாதல முனிவருக்கு மகனாகத் தோன்றிய சைலாதி என்பவரே, தனது ஒப்பற்ற தவத்தால் நந்தியாகும் பேறு பெற்றார் என்கிறது.*

திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாண விழா சிறப்பு மிக்கதாகும். நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் ஆகும் என்பது சொல்வழக்கு. இதற்கேற்ப நந்தி கல்யாணத்தைத் தரிசிக்க இந்தத் தலத்தில் பெரும் கூட்டம் கூடும்.

* நந்தி திருமணம் முடிந்து சுமார் ஒருமாத காலத்துக்குப் பிறகு, முனிவர்களின் ஆசியைப் பெறுவதற்காக சுற்றிலும் உள்ள ஆசிரமங்களுக்கு மணமக்களை ஐயாறப்பர் அழைத்துச் செல்வார். அவை: திருவையாறில் சிலாதர் ஆசிரமம், திருப்பழனத்தில் கவுசிகர் ஆசிரமம், திருச்சோற்றுத் துறையில் கவுதமர் ஆசிரமம், திருவேதிக் குடியில் வியாசராசிரமம், திருக்கண்டியூரில் சதாதய ராச்சிரமம், திருப்பூந்துருத்தியில் காசியபராசிரமம், திருநெய்த்தானத்தில் பிருகு முனிவராசிரமம் ஆகியன.*

தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் நந்திதேவரின் வரலாற்றை விவரிக்கும் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை சோழர்காலத்து கலைப்பணியாகும்.

* மயிலாடுதுறையில் அருள்மிகு மயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் குடைவரையில் திருமணக் கோலத்துடன் அருளும் அதிகார நந்தி தேவரைக் காணலாம்.*

திருக்கழுக்குன்றம், மயிலை ஆகிய தலங்களில் வெள்ளியாலான அதிகார நந்தி வாகனங்கள் உண்டு. திருக்கழுக்குன்றத்தில், சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் காலையில் வேதகிரீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வலம் வருகிறார்.* திருவையாறு புராணத்தில் நந்திதேவர் சிவனாரை வேண்டி குரங்கு முகம் பெற்றதாக தகவல் உண்டு. காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் குரங்கு முகத்துடன் கூடியவராக அதிகார நந்தியை அமைத்து வழிபடுகின்றனர்.

* நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் தில்லை. திருவலம் தலமும் நந்தி விலகி அமர்ந்த தலமாகும். திருவைகாவூரில் நந்தியெம்பெருமான் திரு முகத்தை சற்றே திருப்பிவைத்திருப்பார்.*

கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் சென்றால், அங்குள்ள பசவன்குடி நந்தி கோயிலுக்குச் செல்லாமல் வரக்கூடாது என்பார்கள். ‘பஸவ’ என்ற கன்னட சொல்லுக்கு ‘நந்தி’ என்று பொருள். ஆமாம், இந்தத் தலத்தின் சிறப்பம்சம் நந்திதான். சுமார் 16 அடி உயரம், 21 அடி நீளத்தில் பிரமாண்டமாகக்காட்சி தருகிறார் இங்குள்ள நந்தியெம்பெருமான்.இன்றைக்கும் இந்த நந்தியெம்பெருமானுக்காக இப்பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, வருடம் தோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்களன்று நிலக்கடலைத் திருவிழா நடத்துகிறார்கள். இதனால் நிலக்கடலை அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை.இங்குள்ள நந்தி பகவான், ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரரை தரிசிக்கும் நிலையில், இமயமலை இருக்கும் வடதிசை நோக்கி காட்சிதருவது சிறப்பம்சம். நந்தியின் வலக்காலின் அடியில் தபேலா போன்றஓர் இசைக் கருவி இருக்கிறது. அதன் அடியில் ஒரு தாமரைப்பூ. அதன் அடியில் தான் ‘ரிஷபா நதி’ என்றொரு நதி உற்பத்தியாகி காசி-கங்கையில் சங்கமமாவதாக ஐதீகம்.

நெல்லை- தூத்துக்குடி சாலையில்,நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக் கோயிலில் குதிரை முகத்துடன் திகழும் நந்தியைத் தரிசிக்கலாம்.*


மஞ்சுளாயுகேஷ்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,