உலக கதை சொல்லல் தினம்

உலக கதை சொல்லல் தினம்


20.3.2020


 


   இன்று உலகம் முழுதும் கொண்டாடப்பட வேண்டிய இந்த ‘கதை-சொல்லல் தினம்’  கொரனா என்ற கொடிய தொத்து நோய் பாதிப்பால் திணறிக் கொண்டிருக்கிறது.  



 ‘கதை-சொல்லல் தினம்’ 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தோன்றி  சில ஆண்டுகளிலேயே கைவிடப்பட்டு, பின் மேற்கு ஆஸ்திரேலியா-வில் வசித்த ‘கதை சொல்லிகள்’ மூலம் 1997-ல், மீண்டும் உயிர்பெற்றது. இக்கால கட்டத்தில், தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இத்தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாயிற்று.  


 


சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளை எந்த நேரத்திலும்   தூங்க வைக்க பாட்டிமார்கள், தாய்மார்கள், அத்தைகள், பெரியவர்கள் என பலரும் கதைகளை சொல்லுவார்கள்.  ஆனால், அறிவியல் வளர்ச்சியின் தாக்கம், கதை சொல்லும் பழக்கம் முற்றிலும் கரைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.


 


புத்தகங்கள், திரைப்படங்கள், இசை, மதங்கள், ஓவியங்கள், என நாம் பெயரிட்டுள்ள அனைத்துமே “கதை சொல்லல்” என்னும் கலையின் ஓர் அம்சமாக வளர்ந்தவையே! நமது மதிப்பீடுகள், ஆசைகள், கனவுகள் இவற்றையெல்லாம் அடிப்படையில் கொண்ட இந்த ‘கதை சொல்லல்’ கலை, வழிவழியாக நம் முன்னோர்கள் சொன்ன வாய்வழி கதைகளே!


 


இந்தக் ‘கதை சொல்லல்’ கலை அல்லது வழக்கத்தின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது? முதல் கதை யார், யாருக்குச் சொன்னது? –என்பவை எல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்புகள் இல்லை. இந்த ‘கதை சொல்லல்’ வழக்கம், அக்காலத்தில் நிகழ்ந்த தோல்வியின் காரணங்களை விளக்குவதன் பொருட்டுத் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அல்லது அச்சப்படும் நேரத்தில் பிறரை அமைதி படுத்தவோ, சந்தேகங்களைத் தீர்க்கவோ பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உத்தியாக இருக்கலாம்.


 


பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த வீரச்செயல்கள் மற்றும் மற்றைய செய்திகளைச் சுவைபட கூறும் திறன் படைத்தவரை மிக உயரிய மரியாதை அளித்து வந்தனர். இவர்கள் கூறும் கதைகளை மக்கள் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கேட்க விரும்பினர். 


 பூசாரிகள், நீதிபதிகள், மற்றும் ஆட்சியாளர்கள் அப்பழங்குடி மக்களை வழிநடத்த இக்கதை சொல்லல் கலையை திறம்படக் கையாண்டு மிக முக்கியமாகக் கருதி வந்துள்ளனர்.


 


மனிதன் எழுதக் கற்றுக்கொள்ளும் முன், அவன் எதைச் செய்யவும் தனது நினைவுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இதன் பொருட்டு அவன் ஒரு நல்ல கேட்பாளனாக இருக்க வேண்டியிருந்தது. நல்ல கேட்பாளர்களை உருவாக்கும் பொறுப்பு, நயம்பட கதைச் சொல்பவரை சார்ந்திருந்தது. எனவே, கதை சொல்லிகள் மக்களிடையே பெரும் மரியாதைக்குரியவர்களாக வலம் வந்தனர். நல்ல கதை சொல்லிகள் எப்போதும் தங்களது கதைகளின் வழியாக, பார்வையாளர்களை எளிதில் கவரக்கூடிய திறன் பெற்றிருந்தார்கள்.


 


மக்கள் பயணித்த இடங்களுக்கெல்லாம் இக்கதை சொல்லிகள் சொன்ன கதைகளும் கூடவே பயணித்தன. இவ்வாறாக ஓர் இடத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை, அக்கதையைக் கேட்பவரின் வாயிலாக, தூர தேசத்தில் உள்ளவர்களுக்கும் பரவத் தொடங்கின. மீண்டும் அவர்கள் தங்களுடைய வசிப்பிடங்களுக்குத் திரும்பும்போது, தாங்கள் பார்த்த அவ்விடத்தினைப் பற்றிய பல புதிய கதைகளையும் தங்களுடனே  சேர்த்து கொண்டு வந்தனர்.


 


புராணக் கதைகள், தேவதைக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக்கதைகள், சாகசக் கதைகள், பேய் கதைகள், புனைவுக் கதைகள் என வெவ்வேறு பெயர்களைக் கொண்ட கதைகள், மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது, புதுப்புது உருவங்கள் பெற்று மீண்டும் புதுப்புது கதைகளாக உருவாக்கம் பெறுகின்றன.


 


எவ்வாறாயினும், தலைமுறைகள் கடந்து நிற்கும் இக்கதைகள் நமது முன்னோர்களின் விவேகத்தையும், ‘கதை சொல்லல்’ உத்தியையும் நன்கு பிரதிபலிக்கின்றன. உண்மையில், இந்த ‘கதை சொல்லல்’ கலை மனித குலத்தை விவரிக்கவும், பிணைக்கவும் உதவும் கலை என பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களும், உளவியலாளர்களும் நம்புகின்றனர்.


உற்றுநோக்கின், இவ்வுலகில் வாழும் ஜீவராசிகளில் மனித இனத்திற்கு மட்டுமே கதைகளைப் புனையவும், கதை சொல்லிகளாக இருக்கவும் திறன் அமைந்திருக்கிறது.  வருங்காலத்தில், கரோனா உள்ளிட்ட அனைத்தும் உண்மை வரலாற்றுக் கதைகளாக மாறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


வளர்க உலக கதை சொல்லல் தினம்


-- செ. ஏ .துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,