பேராசிரியர் எனும் திராவிட இயக்க வரலாற்றுக் களஞ்சியம்.
பேராசிரியர் எனும் திராவிட இயக்க வரலாற்றுக் களஞ்சியம்.
*
தமிழ் மொழி
தமிழ் நாடு
தமிழ்ப் பண்பாடு
தமிழ் இலக்கியம்
தமிழ்நாட்டு வரலாறு
எனத் தமிழ் உணர்வின் உருவமாக,
தமிழின் கருவூலமாக
தமிழியக்கியமாக
நடமாடிய
பேராசியர் க. அன்பழகன்
விடைபெற்றுவிட்டார்.
கும்பகோணத்திலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும்
பொதுக் கூட்டங்களில் மணிக் கணக்கில் அவர் பேசிய கூட்டங்களை நின்றபடியே கேட்டிருக்கிறேன்.
பொதுக் கூட்ட மேடைகளில் வள்ளுவரையும், இளங்கோவையும், தொல்காப்பியரையும், சங்கப் புலவர்களையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்துவார்.
பாவேந்தர் பாரதிதாசனின்
'பாரடா உன்னோடு பிறந்த மானுடப் பட்டாளம்' என்ற கவிதையை உணர்ச்சி பொங்கக் கூறுவார். மயிர்க் கூச்செறியும்.
"உன்வீடு - உனது பக்கத்தின் வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்; ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
எங்கும் பாரடா இப்புவி மக்களைப்!
பாரடா உன மானிடப் பரப்பைப்!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்களட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
இந்தப் பாடலைச் சொல்லி முடிக்கிறபோது பந்தலின் கீழ் நடக்கிற மாநாடோ, வெட்டவெளியில் நள்ளிரவில் நடக்கிற பொதுக்கூட்டமோ கூடியிருக்கும் மக்கள் மத்தியில் ஏற்படும் உணர்வெழுச்சி வார்த்தைகளைத் தாண்டியது.
சோவியத் கவிஞன் ரசூல் கம்சுதேவை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர்தான். 'நாளை என் தாய்மொழி அழிந்துவிடும் என்றால் நான் இன்றைக்கே செத்துவிடுவேன்' என்ற அவனது வாசகத்தை நமக்குச் சொல்லுகிறபோது தாய்மொழிப் பற்று நமக்குள் வேர்பிடிக்கும்.
திராவிட இயக்கப் பொதுக் கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகள் என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். பேராசிரியர் போன்ற அறிஞர்களின் உரைகளே அதற்குக் காரணம்.
கலைஞரோடு அவர் கொண்ட நட்பு உலகத்தின் மாபெரும் நட்பு இலக்கணங்களை எல்லாம் தாண்டியது. கலைஞரை ஒரு தலைவர் என்பதைத் தாண்டி ஓர் அறிஞராக, கவிஞராக, கதாசிரியராக, உரையாசிரியராக, பேச்சாளராக அவர் எவ்வாறு ரசித்தார் என்பதற்கு கலைஞரின் நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகளே சாட்சி.
ஒரு மனிதரை இழக்கிறபோது அவரோடு சேர்ந்து அவரது நினைவுக் களஞ்சியத்தையும் நாம் இழக்கிறோம். அதுவும் ஒரு தலைவர் என்றாலோ அது பன்மடங்கு பெரியது.
அந்த வகையில் ஒரு வரலாறு நம்மை விட்டுப் பிரிகிறது. அந்த இடத்தை நிரப்புவதற்கு உணர்வும் அறிவும் செறிந்த அறிஞர்களை உருவாக்குவது திராவிட இயக்கத்தின் தேவை. காலம் அதை நிறைவேற்றட்டும்.
பேராசிரியர் அவர்களுக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன்.
- பிருந்தா சாரதி
Comments