மாசி மகம் ஸ்பெஷல்

மாசி மகம் ஸ்பெஷல் ! 


மாசிமகம் தினத்தில் நிகழ்வுற்றதாக புராணங்கள் கூறும் சில சம்பவங்கள் !


1. மயிலாடுதுறைக்கு  அருகிலுள்ள திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.


2. இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.


3. கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்.
அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள். அப்போது, "திருநல்லூர்  கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். அவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.


4. தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். அதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமையவளை வளர்க்க வேண்டும். அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவனும் அவன் கேட்டபடி அருளினார். அந்த வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான் தட்சன்.


5. மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது. அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.


6. வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மகம் நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப் பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.


பல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.


---நிர்மலாராஜவேல்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி