முடிவில் ஒரு கொலை சிறுகதை

                                      முடிவில் ஒரு கொலை


சிறுகதை


பிரேக்கிங் நியூஸ்


தொழிலதிபர் ஜெயபிரகாஷின் மகன் ஆளரவமற்ற சாலையில் கொலை சிறப்புச் செய்திகள்


        முகம் கொள்ளாத செயற்கை வருத்தத்துடன் அந்த பெண் வாசித்து கொண்டிருந்தார் அந்த பெண் செய்தியாளர் அதன் முடிவில் கெளசிக்கின் உடலின் அருகே சாக்பீஸால் அவுட்லைன் போடப்பட்டு இருந்தது இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படாத அந்த சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருக்க சிகப்பு கொண்டை வைத்த சைரன் ஒலியோடு வண்டியும் காக்க ிஉடை ஆசாமிகளும் தெரிந்தார்கள் ச்சே இதென்னடா மறுபடியும் ஒரு கொலையா ? இருக்கிறதையே கண்டுபிடிக்கலை என்று சக இந்தியனின் கமெண்டில் சற்று நெளிந்தார்கள்.


 


         நான் முகம் கொள்ளா புன்னகையுடன் சுவரில் தொங்கிக்கொண்டு இருந்த வினோதனின் படத்தில் காலையில் போட்ட ரோஜா மாலையில் இருந்து கீழே சிதறி இருந்த இதழ்களுக்கு நடுவில் பாத்திரத்தை வைத்தேன் அதிலிருந்து அல்வாவை சற்றே ருசித்தேன் அமிர்தமாய் இனித்தது. இன்றைக்கு வினோதனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.


 


           கொலை நேற்று இரவு நடந்திருக்கலாம் ஆள் நடமாட்டம் இல்லாத தெருங்கிறதால சாலைப் பணியாளர்கள் மூலமா இப்பத்தான் எங்களுக்கு தகவல் வந்தது, இறந்தவர் ஊரிலேயே மிகப்பெரிய தொழிலதிபர் ஜெயபிரகாஷின் மகன் யாரோ கத்தியால குத்தியிருக்காங்க உயிர் போய் பலமணி நேரத்திற்கும் மேலாகுதுன்னு உறைந்து போயிருக்கிற ரத்தம் சொல்லுது ஆள் நடமாட்டம் இல்லைங்கிறதால நாய்கள் கொஞ்சம் பாடியை சேதப்படுத்தியிருக்கு சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் தந்திருக்கோம் மேற்கொண்டு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தாத்தான் எதுவும் சொல்ல முடியும் இத்துடன் உரையை முடித்துக கொண்டேன் என்று மேடை பேச்சாளரைப் போல வருத்தப் புன்னகையோடு நகர்ந்தார் அந்த காவல்துறை அதிகாரி.



               அத்தனை கேமிராக்களும் இறந்தவனின் உடலையும், நாசூக்காக கர்சிப்பில் தன் வேதனையை அடக்கிய தொழிலதிபர் ஜெயப்பிரகாஷின் முகத்தையும் ஈக்களாய் மொய்க்க, செய்தி தொகுப்பாளர்கள் வருத்தம், கவலை, என உச்சுக் கொட்டல்களோடு மேற்கொண்டு ஏதாவது தகவல் தெரியுமா என்று மைக்கை நீட்டியபடி அலைந்து கொண்டு இருந்தார்கள்.


 


              நேற்றைக்கு இன்னேரம் இருந்த மனநிலையை நினைத்தபடியே பக்கத்து அறைக்குச் சென்றேன் நான் அருகில் நின்றதைக் கூட கவனியாதபடி அவள் ஜன்னலில் எதையோ வெறித்துக் கொண்டு இருந்தாள். விநோதனா இதைச் சாப்பிடுமா என்று கிண்ணத்தில் வைத்திருந்ததை அவளின் வாயருகே கொண்டு சென்ற போது ருசி கூட அறியாதபடி விழுங்கிவைத்தாள். மீண்டும் அதே வெறித்த பார்வை, மெல்ல கையைப் பற்றி அவளை அழைத்து வந்து டிவியின் முன் உட்கார வைத்தேன்.


 


             நேற்றைய நினைவுகள் ஊசலாடியது. ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில் இதுவரையில் என்ன கிழிச்சே என்று இடித்துரைத்த மனசாட்சியின் தேர்வில் தான் நான் வெற்றி பெற்ற மாணவனாகிவிட்டேனே. கெளசிக்கைக் கொன்று விட்டேனே, இதே கையால் எத்தனை முறை அவன் சாப்பிட்டு இருப்பான் அப்பா சாப்பாடு பிரமாதம். தாயில்லா பிள்ளை விநோதனுக்கும் அவனுக்கும் அது ஒன்றுதான் ஒற்றுமை அன்னையின் அன்பை பறிகொடுத்தவர்கள்.


 


         அப்பா இவன் பேரு கெளசிக் பெரிய இடத்துப் பையன் என்னுடைய தோழன் என்று முதன் முதலில் அறிமுகப்படுத்தும் போதே தம்பி பெரிய இடத்து பழக்கம் எல்லாம் நமக்கு ஒத்துவராதுடா என்று கண்டித்திருக்க வேண்டும் அவனுக்கும் அம்மா இல்லை, அப்பாவும் அருகில் இருப்பதில்லை என்ற வார்த்தையில் விழுந்து அவனையும் இன்னொரு விநோதனாய் நினைத்திருந்ததுதான் இமாலயத் தவறு


 


             அந்தத் தவறுக்கு தண்டனையைத்தான் சென்ற வருடம் இதே நாளிற்கு முந்தைய இரவு கிட்டத்தட்ட நேற்று கெளசிக் இறந்ததாக கருதப்படும் அதே நேரத்தில் அனுபவித்தேனே.


 


        வழக்கம் போல் அப்பா எனக்காக சமைக்காதே நான் கெளசிக் கூட வெளியே போறேன். ஒரு பிறந்தநாள் விருந்து என்றபோது குட்டிப் பரிசோடு சந்தோஷமாக காரில் ஏறிச் சென்றவனை அன்றைய இரவு காவல்நிலையத்தில் சந்திக்க நேர்ந்ததே, குற்றுயிரும் கொலையுயிருமாய் அவன் வெறும் ஜட்டியுடன் ஆங்காங்கே ரத்தத் திட்டுகளோடு விநோதா...


 


        வாய்யா நீதான் இவனுக்கு அப்பாவா ? பிள்ளையா பெத்து வச்சிருக்கே ? வாயில்லாத பச்சப்பிள்ளை அதுவும் மனநிலை சரியாத பொண்ணு அதைப்  போயி....ச்சே...


 


         அய்யா விநோதனுக்கு அதெல்லாம் தெரியாதுய்யா அவனை நான் அப்படி வளர்க்கலை என்று எத்தனை கெஞ்சியும் மனம் இறங்கவில்லை அவர்கள். கெஞ்சிக் கதறி அனுமதியோடு அவனின் முன்னால் என்னடா விநோதா இதெல்லாம்........?


 


         அப்பா நானில்லைப்பா....கெள...கெளசிக்...நான் எத்தனையோ முறை சொன்னேன்பா... அந்த பொண்ணு பாவம்ன்னு ஆனா...


 


சரி இப்போ அவன் எங்கே ? உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு ?! நீ அவங்ககிட்டே சொல்லலையா ? என்றேன் பரிதவிக்க...


 


          அந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்னரே நான் நெட்டித் தள்ளப்பட்டேன் ரொம்ப உத்தம பிள்ளையைப் பெத்துட்டே கொஞ்சிகிட்டு திரியுறே போய்யா அந்த ஈவு இரக்கமற்ற காவல் அதிகாரி நாயை விரட்டுவதைப் போல விரட்டினார். அருகில் உள்ளவர் அய்யா முதல்ல இங்கன வாங்க, நடந்ததை நான் சொல்றேன்.


 


           நான் இந்த ஸ்டேஷன்ல ஒரு கடைநிலை அதிகாரி. நாங்க வழக்கமா ரோந்து போற நேரம் அந்த ஜனநடமாட்டம் இல்லாத சாலையில் ஏதோ கசமுசன்னு ஒரே சப்தம் ஒரு சின்ன பெண்ணை இரண்டு பேர் சேர்ந்து கிட்ட போய் பார்த்தா ஒருத்தன் மூர்க்கத்தனாக நடந்துக்க இன்னொருத்தன் அதை தடுக்க போராடிக்கிட்டு இருந்தான். போராடினதுதான் உங்கபிள்ளை ஆனா அந்த இன்னொரு மிருகம் யாரோ பணக்காரனோட பிள்ளையாம். அதனால சம்பந்தப்பட்ட இடத்திலேயே கேஸை மாத்தி ஜோடிச்சி உங்க பிள்ளையை பலியாக்கிட்டாங்க எனக்கென்னவோ இந்த கேஸீலே இருந்து அவன் வெளியே வர்றது கஷ்டம்தான் பொண்ணு இப்போ அரசு காப்பகத்திலே இருக்குது. ஆனா அந்தப் பிள்ளையை பரிசோதித்தால் எல்லா உண்மையும் தெரிந்துவிடும். எனக்கு தெரிந்த ஒரு வக்கீல் முகவரி தர்றேன் நேர்மையானவர் நீங்க போய் பாருங்க நாளைக்கு வெள்ளிக்கிழமை அதுக்குள்ளே உங்க பையனை பெயில்ல எடுத்திடுங்க ஏன்னா தன் பிள்ளையைக் காப்பாத்த அந்த பணக்காரன் என்னவேணாலும் செய்வான். எனக்கு இலேசாய் புரிந்துபோனது.


 


             நான் சொன்னேன்னு தெரியவேண்டாம் என்ற அவரின் கைகளைப் பற்றி நன்றி சொல்லிவிட்டு நான் வக்கீல் வீட்டை நோக்கி ஓடினேன். நாளைக்குத்தான் பெயில் எடுக்க முடியும் இருந்தாலும் இப்போதைக்கு நான் நிலைமையைத் தெரிந்து கொள்கிறேன் என்று காவல் நிலையத்திற்குள் அவருடன் நுழையும் போதே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தேன் நான்.


 


         பாவம் சின்னப்பையன் பா.... என்னாச்சு ? பூதாகரமாக என் மனதில் முளைத்த கேள்விக்கு பதில் வக்கீலிடம்


 


           அந்த ரேப் கேஸில் கைதான பையன் அவமானம் தாங்காம கரண்டு ஒயரைக் கடிச்சிட்டான் ஸ்பாட் அவுட் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடினேன்.


 


              எனக்கு உதவிய அதிகாரியின் முகத்திலும் கண்ணீர் சார் நான்தான் அவனுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரப்போனேன் இவனுங்க என்ன பண்ணினாங்களோ தெரியலை நான் எந்தத்தப்பும் பண்ணலை ஸார் அந்தப்பொண்ணு பாவம் ஸார் அது எனக்கு தங்கச்சி மாதிரின்னு சொல்லிட்டே இருந்தான் அதற்கு மேல் என்ன செய்ய அதிகாரம் பணம் எல்லா ஓட்டைகளையும் அடைத்து விட்டிருக்கவேண்டும் என்று புரிந்தது. நான் விநோதனை பெற்றுக்கொண்டேன். புன்னகை புரியும் இதழ்களின் ஓரம் ரத்தக்கோடு. ஆயிற்று ஒருவருடம் நாளையோடு என் மகன் இறந்து என்ன செய்யலாம் கையாலாக தந்தையான என்னால் ச்சீ இப்படியொரு பிள்ளையா பெத்துருக்கே என்ற ஏச்சும், பாவம் அந்த பிள்ளை நல்லவன்யா என்ற உச்சுக் கொட்டலும் மட்டுமே துணையாய் பெற முடிந்தது. சில மாதங்களில் என்னவோ மனதின் வெறுமையைப் போக்க நான் விநோதனால் தாக்கப்பட்டாள் என்று சொன்ன சிறுமியை அந்த காப்பகத்தில் இருந்து தத்து எடுத்துக் கொண்டேன் முறைப்படி, அவனே அவளைத் தங்கையென்று சொல்லியிருக்கானே கடைசியாய் ! அன்று முதல் லூசி விநோதனா என்ற பெயரில் எனக்கு மகளானாள்.


 


              நீரு பூத்த நெருப்பாய் கோபம் விசிறிக்கொண்டே இருக்க கெளசிக் மேல் கொலைவெறி அவனைக் கொல்லவேண்டும் என்ன செய்யலாம் கூலிப்படையை ஏவலாமா ? ஆனால் அவர்கள் மாட்டிக்கொண்டால் நானும் அல்லவா மாட்டிக்கொள்ள வேண்டும். அப்பறம் விநோதனாவிற்கு யார் இருக்கிறார்கள். அதனால் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.


 


            அதுவுமின்றி அவன் இறக்கும்போது எதற்காக சாகிறோம் என்று அவன் உணரவேண்டும். அதனால் நான் தான் அவனைக் கொல்லவேண்டும் என்று முடிவு செய்து அதே ஆளவரமற்ற சாலையைத் தேர்ந்தெடுத்தேன். பர்மா பஜாரில் நன்கு ஷார்ப்பாக இருந்த கத்தியை வாங்கிக்கொண்டேன் இன்னும் இன்னும் அதற்கு பட்டை தீட்டினேன் துணி துவைக்கும் கல்லில் !


 


           அன்றைய கருப்புதினம் இன்றும். கெளசிக் விநோதனுக்குப் பிறகு என்னை மறந்திட்டியாப்பா என்று தொலைபேசியில் கதறினேன் பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து !


 


            அப்பிடியெல்லாம் இல்லைப்பா நான் அங்கே வந்தால் அந்த கேஸிலே உன்னையும் சம்பந்தப்படுத்திடுவாங்கன்னு அப்பா சொன்னார் அதுவுமில்லாம விநோதன் அப்படி செய்திருக்கக் கூடாதுப்பா என்று பசப்பினான்.


 


         விடுப்பா பழசை ஏன் பேசணும். நான் இந்த ஊரை விட்டே போறேன் ஒருவருஷம் ஆயிடுச்சே அதனால இடம் மாறலான்னு ஒரு எண்ணம். என்னவோ உன்கிட்டே மட்டும் சொல்லிட்டு போகணுன்னு தோணுச்சி ! ஆயிரம் தப்பு பண்ணாலும் விநோதன் என் மகன்தானேப்பா எத்தனையோ கனவுகளோட வளர்த்தவன்.


 


           சரிப்பா உங்களுக்கு என்ன உதவிவேணுன்னாலும் கேளுங்கப்பா அது பண உதவின்னாலும் சரி


 


        இனிமே எனக்கு அதெல்லாம் தேவையில்லை நான் ஊருக்குப்போறேன் உன்னைப் பார்க்கணும் போல இருக்கு ஒரு இடத்தின் முகவரி சொல்லி வரச்சொன்னேன் வருவதாக ஒப்புக்கொண்டான். அதே போல் ஒரு ஆளரவமற்ற சாலை,


 


           ஏன்ப்பா வீட்டுக்கே வந்திருக்கலாமே இல்லைன்னா நானே வந்து இருப்பேனே காரில் இருந்து இறங்கி அலட்சியமாய் பேசியபடியே வந்தான் கெளசிக் இந்தக் கிழவனால் என்ன செய்ய முடியும் என்று யோசித்திருப்பான் நான் அமைதியாய் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவனேயே பார்த்தேன் என்னுடலில் போர்த்தியிருந்த காஷ்மீர் சால்வையில் கத்தியை மறைத்திருந்தேன் குளிருக்குக்காக போர்த்தியிருக்கிறேன் என்று நினைத்து அருகே வந்தான் அவன்.


 


             அப்படி நீ வந்தாலும், மறுபடியும் உன் பெயர் கெடத்தானே செய்யும் கெளசிக் அவன் செய்த தப்புக்கு நீ என்ன செய்வாய் இனி உன்னால் எனக்கும் என்னால் உனக்கும் எந்த பிரச்சனையும் வராது விநோதன் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ஒரு விநாடி கண்களை மூடிவிட்டு சட்டென அவனை நோக்கி கத்தியை வீசினேன் இது எதையும் எதிர்பார்க்காததால் இலகுவாகவே கத்தியை தன் உடலில் உள்வாங்கிக் கொண்டான் கெளசிக் மரண வலியை அவனின் கண்களில் கண்டபோது, விநோதனின் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது கெளசிக் என்று மீண்டும் ஒருமுறை ,,,,,?! கத்தியோடு அந்த இடத்தை விட்டு மறைந்தேன்.


 


         தெய்வம் நின்று கொல்லுமா என்று எனக்குத் தெரியவில்லை கெளசிக்கின் பணம் இன்று கைகளைக் கட்டிக்கொண்டு தன் எஜமானின் ஜீவன் போவதை வேடிக்கைப் பார்த்தது. இரவு தெரு நாய்கள் உண்டது போக மீதம் காலையில் காவலர்களுக்கு கிடைத்தது.


 


           சார் வாசலில் சப்தம் எட்டிப்பார்த்தேன் வீடு மாத்தணுன்னு சொல்லி டிராவல்ஸ்லே வண்டி கேட்டீங்களாம். சாமான் தூக்க ஆட்களையும் கூட்டி வந்திருக்கேன்


 


           ஆமாம்பா எல்லாம் பேக் பண்ணிட்டேன் எடுத்து வைச்சிடுங்க பிரேக்கிங் நியூஸ் போகுது டிவியை மட்டும் கடைசியிலே எடுத்துக்கலாம் என்று டிவியின் பக்கம் நடந்த என்னை பைத்தியத்தைப் போல பார்த்துவிட்டு தோளைக் குலுக்கியபடி நகர்ந்தான் அந்த டிராவல்ஸ்காரன்.


 


--லதா சரவணன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,