கியூபாவின் மினி செலிபிரிட்டி பெலிக்ஸும் அவரது சைக்கிளும்

y


கியூபாவின் ஒரு மினி செலிபிரிட்டி பெலிக்ஸும், அவரது சைக்கிளும். ஏனெனில் இவர் ஓட்டுவது 19 அடி உயர சைக்கிள். பெலிக்ஸின் சைக்கிளை ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்த சைக்கிள் மேல் இருக்கும் ஏணிகளில் ஏறிப் போகிறார் ‘பெலிக்ஸ் ரமோன் குய்ரொலா செபிரோ’.



ஒவ்வொரு படியாக ஏற, ஏற நாமும் நம் பார்வையை ஏற்றிக் கொண்டே போனால் 19 அடியில் போய் நிற்கிறது. கீழே இருப்பவர் சைக்கிளை விட்டுவிட, அதன் பெடல்களை மிதித்து ஓட்டத் தொடங்குகிறார் பெலிக்ஸ். கியூபாவின் கடற்கரைப் பகுதிகளில் பெலிக்ஸ் அந்த சைக்கிளை ஓட்டி வரும்போது ஊரே வேடிக்கைப் பார்க்கிறது. காரில் போவோரெல்லாம் நிறுத்தி போட்டோ எடுக்கிறார்கள்.


 


           சமீபத்தில் இவரைப் பற்றி செய்தித் தாள்களில் படித்த அமெரிக்கரான ரிச்சி ட்ரெம்பிள், உடனடியாக ‘பிளைட்’ பிடித்து பெலிக்ஸைப் பார்க்க கியூபா வந்துவிட்டார். காரணம்... ரிச்சியும் ஒரு ‘பெரிய சைக்கிள்’ காதலர்.


 


          20 அடி உயரத்துக்கு ஒரு சைக்கிளை செய்து ஓட்டி, கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கிறார். யாருடா இது தனக்குப் போட்டியா? என்ற ஆவலோடு வந்தவர், பெலிக்ஸைப் பார்த்ததும் பாராட்டித் தள்ளிவிட்டார்.


 


         ரிச்சி ஒரு அமெரிக்கப் பணக்காரர். பெலிக்ஸ் ஒரு கியூபா ஏழை. தனக்குக் கிடைத்த பழைய டின்கள், பிளாஸ்டிக் பைப்புகள், இரும்புக் கம்பிகள் என எல்லாவற்றையும் கொண்டு தான் பெலிக்ஸ் இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளார். மேலும், பெலிக்ஸிற்கு மட்டும் சரியான பொருளாதார வசதிகள் இருந்திருந்தால் ரிச்சியின் சாதனையை உடைத் திருக்கமுடியும். தற்போது அவர் ஓட்டிக் கொண்டிருக்கும் சைக்கிளே 19 அடி, அதாவது ரிச்சியின் கின்னஸ் ரெக்கார்ட் சைக்கிளுக்கு ஒரு அடிதான் குறைவு. ஆனால், அடுத்து பெலிக்ஸ் தயார் செய்துக் கொண்டிருக்கும் சைக்கிளின் உயரம் 30 அடிக்கும் மேல். அதை கிட்டத்தட்ட தயார் செய்துவிட்டார். கொஞ்சம் ஓட்டி மட்டும் பழக வேண்டும். பெரிய சைக்கிளை 100 மீட்டர் தூரத்திற்கு சரியாக ஓட்டினால் தான், கின்னஸில் அதை சாதனையாகப் பதிவார்கள்.


 


          பெலிக்ஸிற்கு இப்போது 53 வயதாகிறது. தன்னுடைய 17-வது வயதில், அவர் வீட்டருகில் இருந்த ஒரு வயதான மெக்கானிக், மூன்று பேர் ஒருசேர ஓட்டும் ஒரு சைக்கிளை உருவாக்கினார். அதைப் பார்த்ததும், இந்த உலகிலேயே ஒரு பெரிய சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அந்தக் கனவை மிக விரைவில் நிறைவேற்றியும் விடுவார். ஆனால், இந்த உயரத்தை எட்டிப் பிடிக்க பல தடை களைத் தாண்டி தான் வந்துள்ளார் பெலிக்ஸ்.


 


          கியூபாவிலிருந்து பிழைப்புத் தேடி அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக இதுவரை நான்கு முறை முயற்சித்துள்ளார். அதில் கடைசி முறை முயற்சிக்கும் போது, மாட்டிக் கொண்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தும் கூட , வார்டனிடம் அனுமதி வாங்கி சைக்கிள் தயாரிக்கும் மற்றும் ஓட்டும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். பெலிக்ஸ் தன்னுடைய மனைவியோடு சேர்ந்து வீட்டிலேயே சிறு மளிகைக் கடையொன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பல ரசிகர்கள் இருப்பதை உணர்ந்து, கியூபாவின் பிரபல குளிர்பான நிறுவனம் ‘டைம் ப்ளைஸ்’, தங்களின் பேனரை இவரின் சைக்கிளில் கட்டி விளம்பரம் செய்கின்றனர்.


 


இது போன்ற சைக்கிள்களைத் தயாரிப்பதைவிட, ஓட்டுவது ரொம்பவே கஷ்டம். எடை குறைவாக இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு எளிதாக ஓட்ட முடியும். ஆனால், பெலிக்ஸோ தனக்குக் கிடைக்கும் பழையப் பொருட்களைக் கொண்டு தான் இதை உருவாக்கு கிறார். இதனால், இதன் எடை கூடுதலாக இருக்கும். உலகின் மிகப் பிரபலமான சைக்கிளிஸ்டுகள் கூட இந்த சைக்கிளை ஓட்ட முடியாது, மிகவும் கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தும், அடிப்படையில் குத்துச் சண்டை வீரரான பெலிக்ஸ் இது போன்ற சைக்கிளை ஓட்டுவது தனக்கு கஷ்டமாக இல்லை என்று சொல்கிறார்.


 


சரி... இது போன்ற உயரமான சைக்கிள்களை உருவாக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, ‘எனக்கு உயரம் என்றால் ரொம்ப பிடிக்கும்... அதான்’ என்று சொல்லி சிரிக்கிறார் பெலிக்ஸ்.


தகவல்  செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,