தேசிய மருத்துவர்கள் நாள்
தேசிய மருத்துவர்கள் நாள்
சமூகம் மற்றும் தனி மனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் மகத்தான சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும். இந்த நாள் கொண்டாடப்படும் தேதி பல்வேறு காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவித்துள்ளன. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.
சில நாடுகளில் கொண்டாடப்படும் மருத்துவர்கள் நாள் வருமாறு
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மார்ச் 30 அன்று கொண்டாடப்படுகின்றது.
வியட்நாமில் பிப்ரவரி 28 அன்றும் குவைத்தில் மார்ச் 3 அன்றும் நேபாளத்தில் மார்ச் 4 அன்றும் கனடாவில் மே 1 அன்றும் மலேசியாவில் அக்டோபர் 10 அன்றும் பிரேசில் நாட்டில் அக்டோபர் 18 அன்றும் க்யூபாவில் டிசம்பர் 3 அன்றும் தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதி தேசிய மருத்துவர்கள் நாளாக 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படுகின்றது.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்ற இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் உலகமே நினைவு கூர்கிறதோ, கொண்டாடுகிறதோ, இல்லையோ, அறிந்தோ அறியாமலோ மருத்துவர்களை உயிர்காக்கும் தெய்வங்களாக அனைத்து அரசுகள், மக்கள் பாவிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. காரணம், கொடுமையான கொரோனா தொற்று. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்துக் கடை பிடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வழக்கமாக, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும்போது தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்தாகிவிட்டது. இனி ஆண்டவனை பிரார்தித்துக் கொள்ளுங்கள் என்றுதான் நோயாளிகளின் உறவினர்களிடம் கூறுவது என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால், ஆலயத்திற்குச் சென்று தெய்வத்திடம் முறையிட முடியாத நிலையில் மத வேறுபாடற்று உலகம் முழுவதும் சிறியது, பெரியது, சக்தி வாய்ந்தது என்ற நிலைமை இல்லாமல் அனைத்து மத ஆலயங்களும் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,
ஊர் கூடி தேர் இழுப்பார்கள். இப்பொது சந்து, பொந்து, கிராமம், சிற்றூர், பேரூர், நகரம், தலைநகரம் என்றில்லாமல் கரொனா என்ற கொடி தொற்று அரக்கனை எதிர்க்க, தனிமைப்படுத்துவோம், ஒற்றுமையை காட்டுவோம் என்று உலகிலுள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களும் குரல் கொடுக்கும் அளவு ஆட்டிப்படைக்கிறது மக்களை. அத்தொற்று உயர்ந்தவன், தாழ்ந்தவன் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன், மருத்துவர், செவிலியர், தூய்மைத் தொழிலாளி, உயர் அதிகாரி, கடைநிலை ஊழியர், முதலாளி, தொழிலாளி, இந்த மதத்தவன், இந்த இனத்தவன் என்றெல்லாம் பாராமல், அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. சிகிச்சை பலனில்லாமல், தொற்றுக்கு மருந்து இல்லாமையால், மக்கள் கொத்து, கொத்தாக மரணத்தைத் தழுவுகின்றனர் எடனறு மனத்தை உலுக்கும் செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. மருத்துவர்களது மகத்தான சேவையை அங்கீரியுங்கள். அவர்களுடன் சேர்ந்து இத்தொற்றை எதிர்க்கப் போராடும் அனைத்துத் தரப்பினருக்கும் இந்த நாளில் ஒத்துழைப்பு கொடுப்போம், நன்றி தெரிவிப்போம், தொற்றை விரட்ட மவுனமாகப் போராடுவோம், மனம் தளராமல் இருப்போம், மன உளைச்சலைப் போக்குவோம், நம்பிக்கையுடன் இருப்போம், மிகப் பெரிய கொடிய நோயை விரட்டுவோம்.
வாழ்க நலமுடன்.
செ ஏ துரைபாண்டியன்
Comments