நான் ரசித்த சங்க இலக்கியம்


நான் ரசித்த சங்க இலக்கியம்‘

   

 பகுதி 1 

 

சங்க இலக்கியத்தில் கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி எனப்படும். அதில் ஒரு பாடலைப் பார்ப்போம். அற்புதமான காதல் காட்சி நம் கண் முன்னே தோன்றும்

 



சுடர்த் தொடா இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்

மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய

கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,

நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!

உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,

அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!

'உண்ணுநீர் ஊட்டிவா ' என்றாள் என யானும்

தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை

வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,

அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,

அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்

உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்

தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்

செய்தான் அக் கள்வன் மகன்.



தலைவி தன் தோழியிடம் கூறுவது போல அமைந்த பாடல் இது. சரி பாடல் காட்டும் காட்சியின்பம் என்ன ?

 



            சிறு வயது முதல் ஒன்றாகப் பழகி விளையாடிய அவள் மீது பருவ வயதில் காதல் கொண்ட இளைஞன் ஒருவன் நீண்ட நாட்களாகத் தன் அன்புக்குரியவளைச் சந்திக்க முடியாத நிலையில் மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. தன் உள்ளம் கவர்ந்த காரிகையைக் காண அவள் இல்லம் நோக்கி வேகமாகச் செல்லுகிறான். தன் காதல் உள்ளத்தை இன்று எப்படியும் அவளிடம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்புடன் சென்ற அவனுக்குப் பெரும் ஏமாற்றம். அங்கே வீட்டின் புறத்தே அன்பிற்குரியவளும் அவளுடைய அன்னையும் இருப்பதைக் காண்கின்றான். உடனே சூழலைப் புரிந்துகொண்டு, 'தாகமாக இருக்கிறது...தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் ' என்று கேட்கின்றான். அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள். அழகிய பொற்கிண்ணத்திலே தண்ணீர் தருகிறாள் தலைவி. தண்ணீரைப் பெறவது போல சட்டென்று அவளின் அழகியவளையல் அணிந்த கரத்தையும் பற்றிவிடுகிறான் தலைவன். இதைச் சற்றும் எதிர்பார்க்க அவள் தன்னை மறந்து நிலையில், 'அம்மா! இங்க வந்து பாரும்மா..இவன் செயலை ' என்று அலறிவிடுகிறாள். உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள். சட்டென்று தன் நிலையை உணர்ந்த தலைவி, 'தண்ணீர் குடிக்கும்போது அவருக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதுதான் உங்களைக் கூப்பிட்டேன் ' என்று கூறி உண்மை நிலையை மறைத்து விடுகிறாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா ? என்று கேட்டுக்கொண்டே விக்கலை நீக்க, தலைவனின் தலையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள். அந்தச்சமயத்தில் தலைவன் கடைக்கண்ணாலே தலைவியைப் பார்த்துப் புன்னகை பூக்கின்றான். கண்கள் அங்கே மனதைக் கொள்ளையடித்தன.

. இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு கற்பனை வளமா ? சங்க இலக்கியப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம் மனதைக் கவரும்படி மிகச்சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன.

 

 

ரசித்தவர்  உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,