உயிர்ப்பு ஞாயிறு

உயிர்ப்பு ஞாயிறு


 


 


               ஈஸ்டர் திருவிழா' என்றவுடன் `ஈஸ்டர் முட்டை' நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், அந்த முட்டை உணர்த்தும் தத்துவம் தெரியுமா?


மூடிவைத்த கல்லறையின் முத்திரை தெறித்தது. மேகத் திரைகளை மின்னல் கிழிக்க, தாகம் தீர்க்கும் வான் மழை பொழிந்தது. இறந்த மானுடம் மறுபடி பிறந்தது. ஆம்... இன்று இயேசு கிறிஸ்து வெற்றி வீரராக உயிர்த்தெழுந்த புனித நாளாம் `ஈஸ்டர் திருநாள்' (Easter).


சாவை வீழ்த்தி, பாவத்தை அழித்து, இருளை வெற்றி கொண்ட இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்த நாள் `பாஸ்கா பண்டிகை' (Pascha) எனப்படும் `ஈஸ்டர் திருநாள்'.


`பாஸ்கா' என்றால் `கடந்து போதல்' என்று பொருள். சாவைக் கடந்து, இயேசு உயிர்ப்பு பெற்றதால் `பாஸ்கா பண்டிகை' எனக் கொண்டாடப்படுகிறது. 


அடிமை வாழ்விலிருந்து விடுதலையாகி, வாக்களிக்கப்பட்ட வளமான நாட்டுக்கு இஸ்ரேல் மக்கள் கடந்து சென்றதைப்போல நாமும் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு, நீதியான, சமத்துவமான, மனிதநேயமிக்க வாழ்வைத் தேர்ந்தெடுப்போம். இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் அவரோடு ஒன்றி உயிர்த்தெழுவோம்.


`ஞானஸ்நானம்' எனப்படும் திருமுழுக்கு வழியாக நாம் இயேசுவின் பாடுகளிலும் மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்குபெறுகிறோம். புனித பவுலடியார் பாவத்துக்காக இறக்கவும், இயேசுவில் வாழவும் நம்மை அழைக்கிறார்.


எவ்வளவுக்கு நம்மில் பாவமும் பாவநாட்டங்களும் சாகின்றனவோ அவ்வளவுக்கு இயேசு நம்மில் வாழ்ந்துவருகிறார். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உயர்ந்து செல்லும் வழியைச் சொன்ன இந்த உயிர்ப்பு நாளில் தீமையின் கரங்கள் ஓங்கி நின்றாலும், நன்மையே வெற்றி பெறும். `சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது' என்கிறார் புனித பவுலடியார் (1 கொரி. 15:54).


ஈஸ்டர் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி, இரவைப் பகலாக்கி, திறந்த கல்லறையின் முத்திரையை திருமுழுக்கில் பெற்றதைத் திரும்பிப் பார்ப்போம். உள்ளும் புறமும் பதுங்கி நிற்கும் தீமைகளின் சக்திகள் தலைதூக்காத வண்ணம் ஈஸ்டர் மெழுகுவத்தியை உயர்த்திப் பிடித்து `அல்லேலூயா'பாடுவோம்.


ஈஸ்டர் பெருநாளில் நம்மிடமும் நல்ல பல உயிர்ப்பு உணர்வுகள் புலப்பட வேண்டும், புறப்பட வேண்டும். தனிமனித வாழ்வில், சமூக வாழ்வில் மனித நேயம் உயிர்பெற வேண்டும்.


கடத்தல் - உயிர்ப்பு - மாற்றம் என ஈஸ்டர் பல்வேறு பொருள்களைக் கொண்டிருந்தாலும் `ஈஸ்டர் திருவிழா' என்றவுடன் `ஈஸ்டர் முட்டை' நமக்கு நினைவுக்கு வரும். மேலைநாடுகளில் `ஈஸ்டர் முட்டை' என்ற பெயரில் பல வண்ணங்களில் சாக்லேட், கேக் தயார் செய்யப்பட்டு, அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வார்கள். அதுமட்டுமல்லாமல், வீட்டில்  வளர்க்கும் விலங்குகளுக்கும் உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்களுக்கும்கூட ஈஸ்டர் முட்டையை உணவாகத் தருவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்கள். 


முட்டை வடிவில் கோழியிலிருந்து வெளிவரும் உயிர், பிறகு முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சாக வெளிவருகிறது. இரு பிறப்பு அல்லது மறுபிறப்பின் அடையாளமாக முட்டை இருக்கிறது. எனவேதான் நமது பழைய வாழ்க்கையில் இருந்து, புதிய வாழ்க்கைக்கு மாறுவது புதுப்பிறப்பின் ஈஸ்டர் திருநாளின் அர்த்தத்தைத் தரக்கூடியதாக அமைகிறது.


சாவை வென்று உயிர்த்தெழுந்து என்றும் வாழும் இயேசு பெருமான் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.                    உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும்  விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.


          இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டுதோறும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்


             பாஸ்கா என்ற அரமேய மொழிச் சொல்லுக்கு கடந்து போதல் என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றத்தன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். புதிய ஏற்பாட்டில் "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்" (1 கொரி 5 : 7 ) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பாஸ்கா பெருவிழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆகவே அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை புதிய பாஸ்கா பெருவிழாவாகக் கருதுகின்றனர்.


               உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில் எபிரேய நாட்காட்டியின் படி இயேசு, நிசான் மாதம் 14ஆம் நாளன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாளான நிசான் மாதம் 16ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும் உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும்


            . ஆகவே கி.பி. 325ம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், மார்ச் மாதம் வரும் சம இரவு நாளான 21ம் தேதிக்குப் பின் வரும் முழு நிலவு நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையே உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது.


 அதைப் பின்பற்றி மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்


 


 


 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,