நான் ரசித்த இலக்கியச்சுவையில்


நான் ரசித்த இலக்கியச்சுவையில் 

 

சிலப்பதிகாரத்திலிருந்து



தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,

‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட

யனோ அரசன்? யானே கள்வன்;

மன்பதை காக்கும் தென் புலம் காவல்

என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே- தென்னவன்

தே மொழி உரைத்தது செவ்வை நன்மொழி - \\\

இக் கண்ணகி கூறியது

 



             செவ்விதாய நல்ல மொழியே யாகும், யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே என - எம்முடைச் சிலம்பினது பரல் முத்தே எனத் தம்முட் கருதி, தருகெனத் தந்து தான் முன் வைப்ப-அச் சிலம்பினைக் கொண்டு வருகவென ஏவலரிடைக் கூறி வருவித்துத் தானே அதனைக் கண்ணகியின் முன்பு வைத்த னனாக, கண்ணகி அணி மணிக் காற்சிலம்பு உடைப்ப - கண்ணகி தான் அணியும் அழகிய அச் சிலம்பினை உடைத்த காலை, மன்னவன் வாய் முதல் தெறித்தது மணியே - அதனினின்றும் எழுந்த மாணிக்கப் பரல் பாண்டியனது முகத்திடத்துத் தெறித்து வீழ்ந்தது ;



(தேமொழி - தேன் போலும் மொழியினையுடையாள் ; அன் மொழித்தொகை. செவ்வைமொழி - நீதிமொழி. சிலம்புடை அரி முத்தென்க. தருகென வென்றது முன்னர்க் கோவல னிடத்துப் பெற்ற சிலம்பினைக் கொண்டு வருக என்று கூறி என்றவாறு. முன் வைப்ப - கண்ணகி முன் அரசன் வைக்க. வாய் - முகம். முதல், ஏழனுருபு.)



மணி கண்டு - அங்ஙனந் தெறித்த மாணிக்கப் பரலைப் பார்த்து, தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் - தாழ்வுற்ற குடையனாய்ச் சோர்வுற்ற செங்கோலனாய், பொன் செய் கொல்லன்தன் சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - பொற்றொழில் செய்யும் கொல்லனுடைய பொய்யுரை கேட்டு முறை பிழைத்த யான் ஓர் அரசனாவேனோ, ஆகேன், கள்வனென்று யான் துணிந்த அக் கோவலன் கள்வனல்லன் யானே கள்வன் , மன்பதை காக்கும் தென்புலங் காவல் என் முதற் பிழைத்தது - மக்கட் கூட்டத்தினைப் புரக்கின்ற பாண்டி நாட்டு ஆட்சி என்னை முதலாகக் கொண்டு தவறுற்றது, கெடுக என் ஆயுள் என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே - என் வாழ்நாள் அழிவுறுவதாகவெனச் சொல்லி அரசன் மயக்கமுற்று வீழ்ந்தான் ;

அமைச்சரொடு சூழ்ந்து அவர் கூறியது நோக்கி முறைசெயற் குரியான் கொல்லன் சொற்கேட்டுக் கொடுமை செய்தான் ஆகலான் "யானோ அரசன்" எனவும், கோவலன் சிலம்பினைத் தம்முடையதாகக் கொண்டமையான் "யானே கள்வன்" எனவும் கூறினான் ; முன்னர், 1தேரா மன்னா' என்றதும், 2"என் காற் சிலம்பு கொள்ளும் விலைப் பொருட்டாற் கொன்றாரே" என்றதும் இக் கருத்தினை வலியுறுத்துவனவே. தமக்கு முன்னர் இந் நில மாண்ட தம் முன்னோர் இங்ஙனம் கோல் கோடிற்றிலர் ஆகலானும், இவ்வாறு தான் கோல் கோடிய குற்றம் தன் வழி வருவார்க்கும் எய்தும் ஆகலானும் "தென் புலங் காவல் என்முதற் பிழைத்தது" என்றான். தென் புலங் காவலர் கோல் கோடாமையைக் கட்டுரை காதைக்கண் மதுரைமா தெய்வம் உரைத்தது கொண்டு உணர்க. வீழ்ந்தான் - துஞ்சினான்

 

உமாதமிழ்

 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,