ராம் ராம்
ஸ்ரீ ராமர்
நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்
விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்
என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!
ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்
கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்
இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்
உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்
மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்
எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்
ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்
வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்
சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்
மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்
சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்
கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்
முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்
ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்
ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்
ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்
ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்
ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
ஸ்ரீராமபுண்யஜெயம்
மஞ்சுளாயுகேஷ்..
Comments