உலகப் பாரம்பரிய நாள்

 யுனெஸ்கோ  பாரம்பரிய  இடம்


 


                உலகப்  பாரம்பரியச்  சின்னம் என்பது என்ன?   யுனெஸ்கோவால் பட்டியலில் சேர்க்கப்படும் இடம் ‘உலகின் சிறந்த மதிப்பீடு’ என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. உலகப் பாரம்பரிய அமைப்பின் வழிகாட்டுதல்படி, உலகின் சிறந்த மதிப்பீடு என்பது கலாச்சாரம் / இயற்கைப் பின்னணி கொண்ட  இடங்களைக்  குறிக்கிறது. இதில் 3 பிரிவுகளை  யுனெஸ்கோ  வைத்துள்ளது. அதன் அடிப்படையில்தான் உலகப் பாரம்பரிய இடங்கள் / சின்னங்களை அறிவிக்கிறது.  கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கைப் பாரம்பரியம், கலாச்சாரமும் இயற்கையும் கலந்த பாரம்பரியம் என 3 பிரிவுகளில்  யுனெஸ்கோ  இடங்களைத் தேர்வு செய்கிறது.


யுனெஸ்கோ பிரிவுகள்


கலாச்சாரப் பாரம்பரியப் பிரிவில்  வரலாறு,  கலை,  அறிவியல்,  நினைவுச்  சின்னங்கள்,  கட்டிடங்கள்,  இயற்கையாகவும்  மனிதர்களாலும் அமைக்கப்பட்ட  வேலைப்பாடுகள்  ஆகியவை  வருகின்றன.  இதற்கு   எடுத்துக் காட்டாக  தாஜ்மஹால்,  ஜெய்ப்பூர் நகரம்,   அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலை  போன்றவற்றைக்  குறிப்பிடலாம்.


இயற்கைப் பாரம்பரியப் பிரிவில் அறிவியல், பாதுகாக்கப்பட்ட பகுதி அல்லது அழகிய இயற்கைப் பகுதிகள் வருகின்றன. இதற்கு எடுத்துக் காட்டாக  விக்டோரியா நீர்வீழ்ச்சி, மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனம் உயிர்கோளக் காப்பகம் ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.


தேர்வு முறை


யுனெஸ்கோவால் உலகில் அறிவிக்கப்பட்ட 1,121 உலகப் பாரம்பரிய இடங்களில்  869  இடங்கள் கலாச்சாரப் பிரிவில் இடம்பெற்றுள்ளன. 213 இயற்கை சார்ந்த இடங்கள், 39 இடங்கள் கலப்பு இடங்களாகவும் இடம் பெற்றுள்ளன.


ஒரு குறிப்பிட்ட இடத்தை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக எப்படி  அறிவிக்கிறது? யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் இடம்பிடிக்க ஒவ்வொரு நாடும் உத்தேசப் பட்டியலைத் தயார் செய்து அதற்கான ஆவணங்களை  யுனெஸ்கோ   குழுவுக்கு   அனுப்புவார்கள். இந்த ஆவணங்களை  குழு ஆய்வு செய்யும்.


இந்தியாவில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ‘யுனெஸ்கோ ஒத்துழைப்புக்கான இந்தியத் தேசிய ஆணையம்’ என்ற அமைப்பும் இந்தியத்  தொல்லியல் துறையும் இந்தப் பட்டியல்களைத் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவ்வாறு பல்வேறு நாடுகளிடமிருந்து பெறும் பரிந்துரைகளை  யுனெஸ்கோ குழுவில் உள்ள 21 உறுப்பினர்கள் தீவிரமாகப் பரிசீலித்துக் கள ஆய்வு மேற்கொள்வார்கள். பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே உலகப் பாரம்பரியச் சின்னமாக  அறிவிப்பார்கள்.


என்ன பயன்?


ஓரிடத்தை  உலகப் பாரம்பரியச் சின்னம் / இடமாக அறிவிப்பதால்  என்ன பயன்?  யுனெஸ்கோ  அறிவிக்கும்  பாரம்பரிய  இடங்கள் உள்ள மாநிலத்திற்கு, நாட்டிற்கு   ‘மிகவும் விரும்பத் தக்க இடம்’ என்ற  பெருமையைத் தரும்.  இதனால்,  அந்தப்  பகுதியில்  சுற்றுலா  பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதே நேரத்தில் உலகப் பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளச் சம்பந்தப்பட்ட நாடுகள்,  அந்த இடங்கலில்  சிறந்த பராமரிப்பை  மேற்கொள்ள  வேண்டும்.   


 யுனெஸ்கோ அந்த இடங்களைத் தொடர்ந்து தணிக்கை செய்யும். உலகப் பாரம்பரியச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தாலோ, பராமரிக் காமல் விடப்பட்டிருந்தாலோ,  பட்டியலிலிருந்து     நீக்கமும் செய்யலாம்.


இன்று உலகப் பாரம்பரிய நாள்  - கொண்டாடப்பட வேண்டிய  நாள்.  உலகம் ஊரடங்கில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொண்டாட முடியுமா என்ன?


 


செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்