மனித நேயம்

என்னே மனித நேயம்?



இறந்துகொண்டிருந்த தாயைப் பார்த்து வழியனுப்புவதற்காக விதிகளை எல்லாம்  தூக்கியெறிந்துவிட்டு மகனையும் மகளையும் அனுமதித்திருக்கிறார் அமெரிக்காவில் ஒரு டாக்டர்.


அமெரிக்காவில் நியு யார்க்கில் புரூக்ளினில் இருக்கும் மைமானைட்ஸ் மருத்துவ மையத்தில்தான்  இந்தப் பெருந்துயரச் சம்பவம் நடந்திருக்கிறது.


இந்த மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.


கரோனா நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவருடைய உடல்நிலை மிகவும் சீர்குலைந்த நிலையில் மயக்க மருந்து செலுத்தப்பட்டிருந்தது. அவருடைய இறுதி நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், கடைசி முறையாக தங்களுடைய தாயை ஒருமுறை சந்தித்துவிட வேண்டும் என்று அவருடைய மகளும் மகனும் பெரிதும் ஆசைப்பட்டனர்.


ஆனால், அந்த மருத்துவமனையின் விதிகளின்படி இத்தகைய நிலையிலுள்ள கரோனா நோயாளி ஒருவரை உறவினர்கள் உள்பட யாருமே சந்திக்க முடியாது. எப்படியும் தங்களுடைய தாயை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று அவருடைய மகனும் மகளும் மிகவும் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டபோது, அவர்களை அனுமதிப்பதென்றும் வரக்கூடிய விளைவுகளைச் சந்திப்பது என்றும் முடிவு செய்தார் டாக்டர் ரொனால்ட் சைமன்.


இவ்வாறு அந்தப் பெண்மணியைப் பார்க்க அனுமதித்ததை அவர் இறப்பதற்குச் சற்றுமுன் சமூக ஊடகத்திலும் வெளியிட்டார் ரொனால்ட் சைமன்.  இப்போது அந்த டாக்டருக்குப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.


அந்தப் பெண்ணின் மகளையும் மகனையும் மிகுந்த பாதுகாப்பு சாதனங்களை அணிந்த நிலையில் கடைசியாக ஒரு முறை அன்னையைச் சந்தித்து அன்பைச் சொல்ல அனுமதித்துள்ளார் அந்த டாக்டர். அவ்வாறு அவர்களை அனுமதித்ததன் மூலம், மனச் சுமை நீங்கி, என்ன வந்தாலும் எதிர்கொள்ளலாம் என்ற நிலையில் மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடர்வது எளிதாக இருந்தது என்கிறார் அவர்.


தனிப்பட்ட முறையில் ஒருவர் தனித்துச் சாவதை நினைத்து அஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ள டாக்டர், என்னைப் பொருத்தவரையில் சாவதைவிடவும் யாருமில்லாமல் அநாதையாகத் தனித்துச் சாவது மிகவும் அச்சமூட்டக் கூடியது என்கிறார். ஏன் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார்  ரொனால்ட் சைமன்.


"ஒரு நடுத்தர வயதுப் பெண், மிகவும் மோசமான கரோனா நிமோனியாவில் இறந்துகொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற நாங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டன. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர் உயிர் பிரிந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும்.


"ஆனால், எங்களுடைய மருத்துவமனையிலோ இருதரப்பினரின் பாதுகாப்பு கருதி, நோயாளிகள் மற்றும்  பணியாளர்களைப்  பார்வையாளர்கள் சந்திப்பதை விதிகள் அனுமதிப்பதில்லை. ஆனாலும், விதிவிலக்காக இதைச் செய்வதென முடிவெடுத்தோம்.


"அவருக்கு இரு பிள்ளைகள். அவர் உயிருடன் இருக்கும்போதே தாயைச் சந்திக்க இருவரையும் அனுமதிப்பதென முடிவு எடுத்தோம்.


"அவருடைய மகள் வந்தபோது தனக்கு இரு சிறு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, அவரை முழு அளவிலான பாதுகாப்பு சாதனங்களை அணியச் செய்து தாயைச் சந்திக்க அனுமதித்தோம்.


"மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அந்த மகள், தான் சொல்வதைத் தாயால் கேட்க முடியுமா, நான் அவரைப் பெரிதும் நேசிக்கிறேன் என்று ஒரு முறை அவரிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டார்.


"பேசுங்கள், அவர் மயக்க நிலையில் இருந்தாலும் நீங்கள் பேசுவது அவருக்குக் கேட்கும் என்று தெரிவித்தேன்.


"முதலில் அவர் உள்ளே சென்று இறந்துகொண்டிருக்கும் தாயைச் சந்தித்து விடையளித்துவிட்டுத் திரும்பினார். அடுத்து சில நிமிஷங்கள் கழித்து அவருடைய மகனும் அதேபோல சென்று தாயைச் சந்தித்து அன்பைத் தெரிவித்துத் திரும்பினார்.


இந்த விடைபெறுதலுக்காகவே காத்திருந்ததைப் போல அடுத்த சில நிமிஷங்களில் அந்தத் தாயின் உயிர் பிரிந்துவிட்டது.


"தங்களுடைய தாய் இறப்பதற்கு முன் அவரைச் சந்தித்துத் தங்கள் அன்பைத் தெரிவித்துவிட்டோம் என்ற நிம்மதியில் அவருடைய இரு பிள்ளைகளும் இருப்பார்கள் என்பதை நினைக்க மிகவும் திருப்தியாக இருக்கிறது" என்கிறார் டாக்டர் ரொனால்ட் சைமன்.


அமெரிக்காவில் இறந்த ஒற்றைத் தாயின் மரணத்துக்குப் பின்னால் இத்தனை துயரம். உலகம் முழுவதும் எத்தனை உயிர்கள் இறந்துகொண்டிருக்கின்றன, எத்தனை துயரக் கதைகள் பதியப்படாமல் அலைந்துகொண்டிருக்கும்?


 


நன்றி  :     தினமணி


தகவல்  செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,