சுவயம்பு லிங்கங்கள்

 


இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்.


இது உண்மையா? பூமியிலிருந்து தானாக லிங்கங்கள் தோன்றுமா? இதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறதா? என்று கேட்டால் விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது என்றே சொல்லுவேன். இதற்கு லண்டன் டைம்ஸ் நாளேட்டில் நீண்டகாலத்துக்கு முன் வந்த ஒரு ஆசிரியருக்குக் கடிதமே சான்று (இந்த பேப்பர் கட்டிங் என் அலமாரியில் இத்தனை நாளும் தூங்கிக் கொண்டிருந்தது.)


ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்.


சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் கடவுளைக் பார்ப்பார்கள். உண்ணும் உணவு, பெரியோர்கள் காலில் அணியும் செருப்பு (பாதுகை), அவர்களின் பாதச் சுவடுகள், இசை, நாட்டியம், வீட்டுக்கு முன் போடும் கோலங்கள், பறவைகள், மிருகங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் இந்துக்களுக்கு பெரிய கற்களும் சிறிய கற்களும் தெய்வம்தான்!


இமயத்திலுள்ள புனித கயிலாய மலை, திருவண்ணாமலை ஆகியன லிங்க வடிவத்திலுள்ள புனித அமைப்புகள். காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கம் ஒரு புனிதத்தலம் ஆகும். இவைகளுக்கு விஞ்ஞான விளக்கம் உண்டு. மலை இடுக்கு வழியாக சொட்டுச் சொட்டாக விழும் நீர் லிங்கமாக உருவாகிறது. இது மிகப் பெரிய இயற்கை அதிசயம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுதோறும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்க வடிவத்தில் தோன்றுவதும் அற்புதமே.


ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!


பஞ்சாயதன பூஜை


காஞ்சி மகா சுவாமிகள் அவரது சொற்பொழிவு ஒன்றில் பஞ்சாயதன பூஜை பற்றி விளக்கி இருக்கிறார். சில இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கற்களை சாலக்ராமம் என்றும் விஷ்ணுவின் சக்கரம் தாங்கிய அம்சம் என்றும் சொல்லுவர். தஞ்சாவூர் அருகில் வல்லத்தில் கிடைக்கும் சூரியாகாந்தக் கற்களை சூரியன் வடிவமாகக் கருதி பூஜை செய்வர். இதே போல பீஹாரில் சோனபத்ராவில் கிடைக்கும் சிவப்பு நிறக் கற்களை விநாயகராகவும் நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும், ஆந்திரத்தில் சுவர்ணமுகி நதியில் கிடைக்கும் கற்களை அம்பாளாகவும் வைத்து பூஜை செய்வார்கள். ஐந்து கற்களை வைத்து செய்யப்படும் இந்த பூஜை பஞ்சாயதன பூஜை ஆகும்.


இதில் சாலக்ராமம் எனப்படுபவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூச்சிகளின் படிம அச்சு என்று உயிரியல் படித்தோர் கூறுவர். இந்துக்களுக்கு இதில் எல்லாம் வியப்பு ஒன்றும் இல்லை. வெள்ளை உவர் மண் பூசி வந்த வண்ணானைக் கூட விபூதி பூசிய சிவனடியார் என்று எண்ணி பூசித்தவரை நாம் 63 நாயன்மர்களில் ஒருவராக வைத்து குரு பூஜை செய்யவில்லையா? மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரும் ஈந்த பாரியையும் நாம் கடை எழு வள்ளல் என்று புகழ்வில்லையா? பாதி ராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கையில் ராமபிரானுக்கு மேலும் படைகள் தேவை என்று எண்ணி படை அனுப்ப உத்தரவிட்ட குலசேகர ஆழ்வாரை நாம் பூஜிக்கவில்லையா?


இறைவன் எங்கும் இருப்பான் என்பதே நம் கொள்கை.


 


மஞ்சுளா யுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,