இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள், வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள்
இந்தியாவிலும், ஏப்.,14 வரை இருந்த ஊரடங்கு, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மந்தன் அறக்கட்டளை சார்பில் நடந்த ‛கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
இணையவழியில் நடந்த இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ், முன்னாள் துணை கவர்னர் உஷா தோரத் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது சுப்பாராவ் பேசியதாவது: கொரோனா நெருக்கடி முடிந்ததும் இந்தியாவில் சில பொருளாதார மாற்றங்கள் வேகமாக இருக்கும்.
பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சியானது எதிர்மறையாகச் செல்லும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் என கருதுகிறார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நம்முடைய வளர்ச்சி சரிந்துவிட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது அது முற்றிலுமாக நின்றுவிட்டது. மற்ற நாடுகளை விட இந்த நெருக்கடியில் இந்தியா சிறப்பாக செயல்படப் போகிறது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஏழ்மையான நாடு என்பதால், அது ஆறுதல் அளிக்காது. ஊரடங்கு நடவடிக்கை விரைவில் நீக்கப்படாவிட்டால், தேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் : செஏ துரைபாண்டியன்
Comments