ஏப்ரல் முட்டாள்கள் நாள்
ஏப்ரல் முட்டாள்கள் நாள் (April Fools' Day or All Fools' Day) என்பது ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் நிர்வாகரீதியற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாளில் ஒருவரை நகைச்சுவையாக ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள்.. இந்த நாள் 19 ஆம் நூற்றாண்டு முதல் பிரபலமாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் இந்த நாள் பொது விடுமுறை அல்ல.
இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562 ஆம் ஆண்டளவில், அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி என்பவர் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி, புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் ஆனது. பிரான்ஸ் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும் ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும் , இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை நிர்வாகரீதியாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே 1508 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியிருப்பினும், உலகம் இன்றிருக்கும் ஊரடங்கில், யாரும் விளையாட்டாகவோ, நகைச்சுவையாகவோ, முட்டாளாக்க முயற்சிக்காமல் கொரொனா என்ற தொற்றை எதிர்த்து ஒன்றுகூடி போராடுவோம், வெற்றி பெறுவோம். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
செ ஏ துரைபாண்டியன்
Comments