தன்  கண்ணீரை  மறைத்து  உலகிற்கு  புன்னகையைப் பரிசாக  அளித்த  சார்லி  சாப்ளின்

தன்  கண்ணீரை  மறைத்து  உலகிற்கு  புன்னகையைப்


பரிசாக  அளித்த  சார்லி  சாப்ளின்


உலக புகழ்பெற்ற திரைப்பட கலைஞர். இளமையில் வறுமையின் பிடியில் சிக்கியவர்,  நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் என பலவற்றில் சாதித்துக் காட்டியவர் சார்லி சாப்ளின். தனது நடிப்பின் மூலம் மட்டுமே உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் என்ற பெருமையும் இவரையே சேரும்.


 


சர்  சார்லஸ்  ஸ்பென்ஸர்  சாப்ளின் (Sir Charles Spencer Chaplin)  என்ற முழு  பெயர்  கொண்ட  சார்லி  சாப்ளின், 1889  ஆம்  ஆண்டு  ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் சார்லஸ் சாப்ளின் மற்றும் ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதியினருக்கு பிறந்தார். இவரது பெற்றோர் இசை அரங்குகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததால் நல்ல வருமானம் இல்லாமல் ஏழ்மையில் தவித்தது இவரது குடும்பம். இவரது தந்தையின் குடிப்பழக்கத்தால் சாப்ளின் பிறந்த சில  நாட்கள்  கழித்து  இவரது  பெற்றோர்  பிரிந்தனர். அதன் பிறகு  சாப்ளின்  அவருடைய  தாயிடம்  வளர்ந்தார்.


 தாயாருக்கும்  அடிக்கடி  உடல்  நலமின்றி  போனது. வாடகை தர முடியாத அளவு குடும்பம் வறுமையில் இருந்ததால் சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் “ஹான்வெல்” என்ற  ஆதரவற்றோருக்கான பள்ளியில்  சேர்க்கப்பட்டனர். சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் அவருடைய  தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி இறந்தார். தொடர் குடும்பப் பிரச்சினைகளால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான இவர் தாய்,  மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில்  சேர்க்கப்பட்டார்.


உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது   என்றவர் சார்லி சாப்ளின்


 


முதன் முதலில் 1984 ஆம் ஆண்டில் சாப்ளின் அவருடைய ஐந்து வயதில் மியூசிக் ஹாலில் அவரது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சாப்ளினுக்குப் பத்து வயதாக இருந்தபோது, ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை சீனியர் ஒருவர் வாங்கித் தந்தார். 1903 ஆம் ஆண்டு Jim, A Romance of Cockayne என்ற நாடகத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு செர்லாக் ஹோம்ஸ் என்ற  நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம் நிரந்தரமாக கிடைத்தது.  இதனைத்  தொடர்ந்து  கேசீஸ்  கோர்ட்  சர்க்கஸ் (Casey’s Court Circus)  நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno’s Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார்.


 


1912 ஆம் ஆண்டு கார்னோ என்ற குழுவுடனான அமெரிக்கப் பயணம் திருப்புமுனையாக அமைந்தது. இவரது அபாரத் திறமையை உணர்ந்த கீஸ்டோன் (Keystone Film Company) என்ற சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சாப்ளினை சேர்த்துக்கொண்டார். முதலில் சாப்ளினுக்கு  கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார்.


இவர் நடித்த முதல் திரைப்படம் “மேக்கிங் ஏ லிவிங்” 1914 ஆம் ஆண்டு வெளிவந்தது. “கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்” இவரது இரண்டாவது படம்.


சிரிக்காத நாட்களெல்லாம் வீணான நாட்கள்தான் என்ற சார்லி சாப்ளின்  படங்களில் தொள தொள கால் சட்டை, சிறிய கோட், ஹிட்லர் மீசை, தலைக்குப் பொருந்தாத தொப்பி, சிறு தடி, வித்தியாசமான நடை என வித்தியாசமான கெட்டப்பில் வந்தார். இவரைப் பார்த்த உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. படங்களும் வெற்றி பெற்றன. இதுவே பின்னர் இவரது அடையாளமானது. நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் முழு உரிமை கொடுக்கப்பட்டது. ஒரே வருடத்தில்  36 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே ஹிட் அடித்தன. நடிப்பு மட்டும் இல்லாமல், கதை, வசனம், இயக்கம், என அனைத்துத் துறைகளிலும் தன் தனி முத்திரையைப் பாதிக்க ஆரம்பித்தார். நடன அமைப்பையும், இசை அமைப்பையும் கூட விட்டுவைக்கவில்லை. 1919 ஆம் ஆண்டு யுனைடட் ஆர்டிஸ்ட் என்ற ஸ்டுடியோவைத் தொடங்கினார்.


 


1921 ஆம்  ஆண்டு  இவர்  தயாரித்த  திரைப்படமான  “தி  கிட்” (The Kid) படத்தில் இவரது ஆரம்ப வாழ்கையை சித்தரித்திருந்தார். படமும்  மகத்தான  வெற்றி  பெற்றது.  அதன்  பிறகு  இவருக்குத் தொடர்ந்து  வெற்றி  மேல்  வெற்றி  மட்டுமே கிடைத்தது. 1925 ஆம் ஆண்டு “தி கோல்ட் ரஷ்” என்ற  அவரது  படம்  சாப்ளினின்  புகழை  புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது.  1927 ஆம்  ஆண்டில்  ஓசையுடன்  கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930 ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களை எடுக்கவில்லை. 1936-ல் “மாடர்ன் டைம்ஸ்” என்ற ஒலி படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் ஒலிகள் இருந்தாலும் இவர் பேசாமல்தான் நடித்தார். இந்தப் படமும் மகத்தான வெற்றி பெற்றது.

1940ம் ஆண்டு, சாப்ளின் தனது முதல் பேசும் படமான “தி கிரேட் டிக்டேட்டர்” ஐ ( The Great Dictator) வெளியிட்டார். உலகையே தன் அடிமையாக்கும் நோக்கத்தோடு சர்வாதிகாரியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் விமர்சித்து அப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. உலகம் ஒரு சர்வாதிகாரியின் கையில் சிக்கினால் மக்களின் நிலை என்னவாகும் என்பதே அப்படத்தின் கருவாக இருந்தது. உலகமே பயந்த  ஒரு மனிதனைப் பற்றி  எவ்வித  தயக்கமோ, பயமோ இல்லாமல் தைரியமாக விமர்சித்திருந்தார் சாப்ளின்.


இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல, நமக்கு வரும் துன்பங்கள் உள்பட! – சார்லி சாப்ளின்


 


1951 ஆம் ஆண்டு “தி லைம் லைட்” என்ற புகழ்பெற்ற படத்திற்கு பிறகு சாப்ளின் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார். இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகப்பட்ட அமெரிக்க அரசாங்கம்,  அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது. Hollywood walk of fame என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்சர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படங்களை தயாரித்தார். சாப்ளினின் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்கா  1972 ஆம் ஆண்டு மீண்டும்  சாப்ளினை வரவேற்றது. அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து ‘Hollywood walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது.


 


சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவரது எண்பத்திஎட்டாவது வயதில் வேவே என்ற இடத்தில் காலமானார். எப்போதும் அவரைப் பார்த்து சிரித்த உலகம் அன்று அவரைப் பார்த்து முதன் முறையாக அழுதது. 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்று அமைக்கப்பட்டது.


 


1975  ஆம்  ஆண்டு  இங்கிலாந்து அரசு இவருக்கு “சர்” பட்டம் வழங்கியது. இதனை இரண்டாம் எலிசபெத் அரசி அளித்தார். இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை பெற்றுள்ளார். இவரது தி இம்மிகிரன்ட், தி கிட், தி கோல்ட் ரஷ், சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ், தி கிரேட் டிக்டேடர்  ஆகிய  ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவின் நேஷனல் ஃபிலிம் ரெஜிட்ரி அமைப்பில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


இங்கிலாந்து அரசு 1985 ஆம் ஆண்டு இவரது உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை வெளியிட்டது.  இவர் மறைவுக்குப் பிறகு, அவரது மிகப்பெரிய ரகிகையான யுக்ரெய்ன் நாட்டு விண்வெளி வீராங்கனை லியூட்மீலா கரச்கினா (Lyudmila Karachkina), ஒரு எரிகல்லுக்கு 3623 சாப்ளின் என்று பெயர் சூட்டினார்.


பேச்சில்லா படங்கள் வந்த காலத்திலேயே உலகம் முழுவதும் பிரபலமான இவர் நடித்த படங்கள் இன்றும் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.


எல்லா தரப்பு மக்களையும் தன் படங்கள் மூலமாக இன்றும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்த சார்லி சாப்ளினைப் போல் சிரிப்பு நடிகர்கள் அனைவரும் பேரும் புகழோடும் வாழ வாழ்த்துகள்.  


செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,