உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே
உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே! - உலக புகையிலை எதிர்ப்பு தினப் பகிர்வு
உலகப் புகையிலையற்ற தினம், 31 மே 2020 புகை நமக்குப் பகை, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குத் தீங்கானது... பீடி, சிகரெட் அட்டைகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் இத்தகைய வாசகங்கள் புகைப்பழக்கத்துக்கு ஆளான எத்தனைபேரை மனம் மாறச் செய்திருக்கும்? இது... சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். புகைப்பழக்கம் இன்றைக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புகையால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உலகளவில் உயிரை விடுகிறார்கள் என்றால் நிச்சயம் வருத்தப்பட வேண்டிய செய்தியே. இந்தியாவில் மட்டும், ஏறத்தாழ 80 லட்சம் பேர் புகையால் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த புகையிலை பாதிப்புக்கு ஆளானவர்களில், பலர் புகைபிடிப்பவர்களின் அருகே இருந்து அதை சுவாசித்ததன்மூலம் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவர்களைப் போன்றே புகையிலையால் பாதிக்கப்படுபவர்கள், தங்களது வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழக்கிறார்களாம். 1) புகையிலையைச் சுவாசிப்பதால், அதனுள்ளே இருக்கும் நிகோட்டின், உடலுக்குள் செல்கிறது. ரத்தத்துக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யக்கூடிய நுரையீரலில் நிகோட்டின் கலந்து ரத்தத்தை மாசுபடுத்துகிறது. அது நுரையீரல் புற்றுநோய்க்கும், ரத்தப் புற்றுநோய்க்கும் வழிவகை செய்கிறது. 2) புகையிலையில் இருக்கும் நிகோட்டின், ஒருவரது டி.என்.ஏ-வில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. அந்த வகையில், அவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு ஆஸ்துமா, மூச்சுக்குழாய் பாதிப்பு, கண் தெரியாமல் போவது போன்ற தீராத பிரச்னைகளால் பாதிப்பு ஏற்படலாம். 3) புகையில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு, ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அழித்துவிடுகிறது. ஆக்சிஜன் உள்ளிழுக்க உதவியாக இருக்கும் ஹீமோகுளோபின் பாதிப்படைவதால், மூச்சுவிடுவதில் சிரமம் வருகிறது. இது, மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பு போன்ற இதயக்கோளாறுகளுக்கு வழிவகை செய்யும். 4) புகைபிடிப்பது, நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடும். செயற்கையாகத் தூண்டப்படும் நரம்பு மண்டலம், மிகவும் அதிக சக்தி பெற்றிருக்கும். நாளடைவில், புகைபிடிக்காமல் இருக்கும்போது, நரம்பு மண்டலம் மந்தமாகச் செயல்படுவதுபோலத் தோன்றும். இதன் கடைசி கட்டமாக, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். 5) செகண்ட்-ஹேண்ட்-ஸ்மோக்கிங்க் (SECOND HAND SMOKING) மிகவும் ஆபத்தானது. அதாவது, ஒருவர் புகைபிடித்து வெளிவிடும் புகையை மற்றொருவர் உள்ளிழுப்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்படுவர். இது, பெண்களது இனப்பெருக்க உற்பத்தி செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். என்னதான் எல்லா பாதிப்புகளும் தெரிந்திருந்தாலும், புகைப் பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாகத் தெரியவில்லை. 1987-ல் தொடங்கப்பட்ட இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை, ஆண்டுதோறும் ஏதாவதொரு 'தீம்' கொண்டுதான் உலகச் சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது.
புகையிலைப் பாதிப்பையும் அதனால் ஏற்படும் தவிர்க்கக் கூடிய நோயையும் மரணத்தையும் பற்றி உலகக் கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினம் உலக சுகாதார நிறுவனத்தால் 1987-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உலக அளவில் மரணத்துக்கான முக்கிய காரணம் பக்கவாதத்தை உள்ளடக்கிய இதய நோய்கள் ஆகும். மிகை இரத்த அழுத்தத்தை அடுத்து இதய நோய்களுக்கு புகையிலையே முக்கிய காரணம். புகைத்தல் மற்றும் மறைமுகப் புகை இதய நோய் மரணத்தில் 12 % பங்கு வகிக்கிறது. முக்கிய உண்மைகள்: · புகையிலையைப் பயன்படுத்துவர்களில் பாதிப் பேர் அதன் பாதிப்பால் மரணம் அடைகின்றனர். · புகையிலைப் பாதிப்பு உலக நலப் பிரச்சினைகளில் ஒரு நோயெழுச்சி போல் காணப்படுகிறது. 70 லட்சம் மக்களைப் புகையிலை கொல்லுகிறது. இதில் 60 லட்சம் பேர் நேரடி பாதிப்பாலும், 8 90 000 பேர் மறைமுகப் பாதிப்பாலும் மரணம் அடைகின்றனர். உலக அளவில் புகையிலைப் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. புகையிலை தொடர்பான மரணங்களில் ஆறில் ஒரு பகுதி இந்தியாவில் நிகழ்கிறது. புகையுடன் மற்றும் புகையற்ற பல வகைகளில் புகை பயன்படுத்தப் படுவதாலும் இதில் பல்வேறு சமூகக் கலாச்சார வேறுபாடுகள் கலந்திருப்பதாலும் இந்தியாவின் புகையிலைப் பிரச்சினை மிகவும் வேறுபட்ட தன்மை கொண்டதாகும். உலக வயதுவந்தோர் புகையிலை மதிப்பாய்வு-2ன் (GATS-2) படி 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 26.7 கோடி மக்கள் (29% வயதுவந்தோர்) புகையிலையைப் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதன் முதல் மதிப்பாய்வில் இருந்து தற்போது 6% குறைந்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்க உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டு இந்தியாவில் செயல்படுத்தப்படும் MPOWER நடவடிக்கைகள்: · புகையிலைப் பொதிகளின் 85% பகுதிகளில் படத்தோடு கூடிய எச்சரிக்கை. 1 செப்டம்பர் 2018 ல் இருந்து புதிய வடிவிலான நல எச்சரிக்கை பயன்படுத்தப்படும். · GATS-ன் இரண்டாவது சுற்றை மேற்கொள்ளுதல். · தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் போதிய முதலீடு செய்தல். · புகையற்ற புகையிலை வடிவங்களைத் தடை செய்தல். · புகையிலை அற்ற படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளை நடைமுறைப்படுத்தல். · இந்திய அரசின், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தேசிய புகையிலை விட்டொழித்தல் தொலைபேசி மற்றும் எம்-நிறுத்தம் சேவைகள் மூலம் தொடர் குறுஞ்செய்திகளை அலைபேசிகளில் அனுப்பிப் புகையிலைப் பயன்பாட்டளர்களை விட்டொழிக்க ஊக்குவிக்கும் எம்-சுகாதார முன்முயற்சிகள். Quitplan மூலம் புகையிலைப் பயன்பாட்டாளர்கள் இப்பழக்கத்தை விட்டொழிக்க உதவிகள் பெறலாம். மேலும் 011-22901701 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது www.nhp.gov.in/quit-tobacco என்ற முகவரியில் அலைபேசி எண்ணையும் மின் அஞ்சலையும் பதிவு செய்து இச்சேவைகளைப் பெறலாம். ஒவ்வொரு நாளையும் புகையிலையற்ற நாளாக மாற்றவும். |
Comments