சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா
சொர்க்கம், நரகம் உண்மையிலேயே இருக்கிறதா? என்று ஜென் குருவிடம் கேள்வி எழுப்பப்பட, விரிவான விளக்கம் ஆழ்ந்த தெளிவினை ஏற்படுத்துகிறது...
ஒரு படைத் தளபதி, ஹக்குயின் என்ற ஜென் குருவைத் தேடி வந்தார்.
‘‘குருவே, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் உண்மையிலேயே இருக்கிறதா?’’ என்று வினவினார்.
‘’தளபதி என்கிறாய்? உன்னைப் பார்த்தால் இறைச்சி வெட்டுபவன் போல் அல்லவா இருக்கிறாய்?’’ என்று ஹக்குயின் வாய்விட்டுச் சிரித்தார்.
தளபதி ஆவேசமாகி, தன் வாளை உயர்த்தினார். ‘’உன்னை வெட்டிக் கூறு போடவா?’’
‘’நரகத்தின் கதவுகள் திறந்துவிட்டன!’’ என்றார் ஹக்குயின்.
தளபதி உடனே சினம் தணிந்தார். பணிந்து மன்னிப்புக் கேட்டார்.
‘’சொர்க்கத்தின் நுழைவாயில் தெரிகிறது...’’ என்றார் ஹக்குயின்.
விளக்கம்:
உங்கள் மனதில் எது நிரம்பி இருக்கிறதோ, அதுதான் உங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் நிர்மாணிக்கிறது. கோபம், பொறாமை, எரிச்சல், பதற்றம், ஆத்திரம், சந்தேகம், பயம் இவற்றால் ஆளப்படும்போது, நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். அன்பு, ஆனந்தம், பரவசம் இவற்றை அனுபவிக்கையில் நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்.
இரண்டையுமே நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள். எது வேண்டுமென்று நீங்களே தீர்மானியுங்கள். விழிப்பு உணர்வுடன் இருந்தால், சொர்க்கத்தைத்தானே விரும்புவீர்கள்? விழிப்பு உணர்வு இல்லாதபோது, வெளிச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, உங்களிடம் இருந்து அனிச்சையாக எதிர்ச் செயல் வெளிப்படுகிறது. நரகத்தை உருவாக்கியவர் ஆகிறீர்கள்.
தளபதிக்குக் கோபமூட்டியபோது, அவருடைய ஆத்திரம் நரகத்துக்கு வழிகாட்டியது. தன்னிலை உணர்ந்து மன்னிப்பு கேட்டபோது, சொர்க்கம் திறக்கப்பட்டது!’’
Comments