அத்திக்காய் காய்காய்  ஆலங்காய் வெண்ணிலவே

இலக்கியச் சோலையிலே (தொடர் 4)


இளைப்பாறுங்கள்


 


அத்திக்காய் காய்காய் 
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ


கன்னிக்காய் ஆசைக்காய் 
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய் 
மங்கை எந்தன் கோவைக்காய்


மாதுளங்காய் ஆனாலும் 
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ


இரவுக்காய் உறவுக்காய் 
எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய் 
நேரில் நிற்கும் இவளைக்காய்


உருவங்காய் ஆனாலும் 
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே 
என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ


(அத்திக்காய்)


ஏலக்காய் வாசனைபோல் 
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல் 
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ 
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ


(அத்திக்காய்)


உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் 
வெண்ணிலவே நீ சிரிக்காயோ
கோதை எனைக் காயாதே 
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே 
தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)


 எத்தனை காய்கள் பாடலிலே…


அத்திக்காய்
ஆலங்காய்
இத்திக்காய்
கன்னிக்காய்
ஆசைக்காய்
பாவைக்காய்
அங்கேகாய்
அவரைக்காய்
கோவைக்காய்
மாதுளங்காய்
என்னுளங்காய்
இரவுக்காய்
உறவுக்காய்
ஏழைக்காய்
நீயும்காய்
நிதமுங்காய்
இவளைக்காய்
உருவங்காய்
பருவங்காய்
ஏலக்காய்
வாழக்காய்
ஜாதிக்காய்
கனியக்காய்
விளங்காய்
தூதுவழங்காய்
மிளகாய்
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
சிரிக்காய்
கொற்றவரைக்காய்
தனிமையிலேங்காய்


அப்பப்பா… எத்தனை காய்..  எவ்வளவு சுவை.. சிலேடை மிகுந்த தேன் கதலிப் பாடல்.. கண்ணதாசா,   மீண்டும் நீ வந்தால் தவிர வேறெவராலும் இவ்வாறு எழுத இயலாது, 


கொஞ்சம் பிரித்து ஆராயலாம்.


அத்திக்காய் காய்காய் 


அத்+திக்காய் (அந்த திக்காய்அந்தப் பக்கமாய் எனவும் கொள்ளலாம்) காய்.. 
ஆலங்காய் வெண்ணிலவே


ஆலம் (ஆகாயம்) காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே 


இத் திக்காய் (இந்தப் பக்கமாய்) காயாதே
என்னுயிரும் நீயல்லவோ


ஆகாயத்தில் எறிக்கின்ற வெண்ணிலவே இந்தப்பகம் காயாமல் அந்தப்பக்கமாகக் காய்


 கன்னிக்காய் ஆசைக்காய் 


இந்தக் கன்னிக்காக கன்னியின் ஆசைக்காக
காதல்கொண்ட பாவைக்காய்


காதல் கொண்ட பாவை (பெண்ணுக்காக) காய்
அங்கே காய் அவரைக்காய் 


அங்கே காய்.. அவரை (கணவனைக்) காய்


மங்கை எந்தன் கோவைக்காய்.


மங்கை எந்தன் கோ (கணவனைக்) காய்…


 மாதுளங்காய் ஆனாலும் 


மாது உளம் (பெண்ணின் மனம்) காய் ஆனாலும் (கனியாவிட்டாலும்)
என்னுளங்காய் ஆகுமோ


என் உள்ளம் காய் ஆகுமோ (என் உள்ளம் கனிந்து விட்டது)
என்னை நீ காயாதே 


என்னுயிரும் நீயல்லவோ


 


இரவுக்காய் உறவுக்காய் 
எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய் 
நேரில் நிற்கும் இவளைக்காய்


இரவுக்காக உறவுக்காக ஏங்கும் இந்த ஏழைக்காக நீயும் காய் நிதமும் (ஒவ்வொரு நாளும்) காய்.. முன்னால் நிற்கும் இவளைக் காய்… (சிலேடை… சிலேடை…)


 உருவங்காய் ஆனாலும் 
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே 
என்னைப்போல் பெண்ணல்லவோ


உருவம் காய் போல் கடினமாகக் காட்சி தந்தாலும் பருவம் காயில்லை.. கனிந்து விட்டது. அதனால என்னைக் காயாதே, நீயும் பெண் தானே.. புரிந்து கொண்டாய்தானே.. (புரிந்து கொண்டீர்களா)


 ஏலக்காய் வாசனைபோல் 
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல் 
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ 
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ


 


ஏலக்காய் வாசம் போல் வாழக் காய் நிலவே..


ஜாதிக்காய் அடுக்குப் போல தனிமை இன்பம் காணக் காய் நிலவே..


சொன்னதெல்லாம் விளங்க்கிச்சா…ஆச்சா… அச்சா தூது வழங்க இனி நீ தேவை இல்லை.. என்னை விட்டு விலகிப் போ நிலவே..


உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் 
வெண்ணிலவே நீ சிரிக்காயோ
கோதை எனைக் காயாதே 
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே 
தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)


 


உள்ளம் இளக மாட்டாயோ நிலவே..


ஒவ்வொரு பேச்சு உரைக்காதே நிலவே..


வெள்ளரிக் காய் உடைச்சு முத்து சிந்துவது போல் சிரிச்சுட்டு..


என்னைக் காயாமல் என் மன்னனை காய்…


 


வேண்டாம் வேண்டாம்..


 


இருவரையும் விட்டுட்டு தனியாப் போய்க் காய் நிலவே..


இப்படிச் சொல்லில் தோரணம் கட்டி, சிலேடையை தோரணத்தில் சொருகி வைக்க கவியரசை விட வேறெவரால் முடியும்?


காட்சியோடு பாடலையும் பிரித்து வைத்ததையும் பொருத்தினால், பல காட்சி்களைக் காணலாம்.


 


செஏ துரைபாண்டியன்


ஒலி ஒளி உணர



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி