தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்

தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் -  தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்புதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தெளிவுப்படுத்தியும், தீர்ப்பில் திருத்தம் செய்தும் சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.


30-05-2020   05:30 


 


சென்னை


 


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன் இல்லம் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


 


அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் விசாரித்து கடந்த 27-ந்தேதி தீர்ப்பு அளித்தனர். அதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று கூறப்பட்டு இருந்தது.


 


இந்தநிலையில், இந்து வாரிசு முறைச் சட்டத்தின்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தீபாவும், தீபக்கும் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.


 


இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


 


கடந்த 27-ந்தேதி பிறப்பித்த தீர்ப்பில், ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் தீபா, தீபக் என்றும் ஜெயலலிதா தன் தாயாரிடம் இருந்து பெற்ற பரம்பரை சொத்துக்களும், அவர் வாங்கிய சொத்துக்களுக்கும் இவர்கள்தான் வாரிசுகள் என்றும் கூறப்பட்டு இருந்தது.


 


இந்து வாரிசு முறை சட்டப்பிரிவுகளின்படி, திருமணம் ஆகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதால், தீபாவும், தீபக்கும் அவரது வாரிசுகள் என்று அறிவிக்கிறோம். தீர்ப்பில் இவர்களை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்குகிறோம். அதற்கு பதில் இவர்கள் நேரடி வாரிசுகள் என்று தீர்ப்பில் திருத்தம் செய்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 


வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளிடம் அட்வகேட் ஜெனரல், ‘போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்துவது தொடர்பாக அறிவித்துள்ள நிலையில், கடந்த 27-ந்தேதி ஐகோர்ட்டு தீர்ப்பு வந்ததும், ‘தீபா தன் கணவருடன் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று அங்கு பிரச்சினை செய்தார்‘ என்று கூறினார்.


 


இதுகுறித்து தீபாவின் வக்கீல் சாய்குமரனிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், ‘தீபா அங்கு சென்று இருக்கலாம். ஆனால், சட்டவிரோதமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை. பிரச்சினை செய்யவில்லை. வீட்டை பார்க்க சென்று இருக்கலாம்‘ என்று பதில் அளித்தார்.


 


இதையடுத்து நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக்கை இந்த ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நிவாரணம் பெறவேண்டும்‘ என்று அறிவுரை வழங்கினர்.


 Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,