வெறும் 24 மார்க் எடுத்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் வெறும் 24 மார்க் எடுத்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரியாகி சாதித்திருக்கிறார் நித்தின் சங்வான். தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், தான் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண்களை சமூக வலைதளமான டுவிட்டரில் பகிர்ந்து, மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைத்த அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாடு முழுவதும் சிபிஎஸ் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் சோர்வடையாமல் இருக்கவும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் நித்தின் சங்வான், பிளஸ் 2வில் தான் பெற்ற மதிப்பெண்களை பகிர்ந்திருக்கிறார். அதில், அனைத்து பாடங்களிலும் சுமாரான மார்க்குகளை வாங்கிய அவர், குறிப்பாக வேதியியல் பாடத்தில் 70க்கு 24 மார்க்குள் மட்டுமே பெற்றுள்ளார்.
தனது பிளஸ்2 மார்க் ஷீட்டுடன் டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: எனது நண்பர்கள், உறவினர்கள், அவர்களது பிள்ளைகளின் மார்க்குகள் குறித்து அதிகமாக பேசுகின்றனர். குறைவான மார்க்குகள் பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் பெற்ற மார்க்குகளை விட குறைவான மார்க்குகளையே நான் என் பள்ளி நாட்களில் பெற்றிருந்தேன். அவை எனது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதை நான் அனுமதிக்கவில்லை. தற்போது நான் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறேன்.
மார்க்குகளை விட வாழ்க்கை மிகப்பெரியது. இதனை உணர்த்தவே எனது பிளஸ் 2 மார்க்கை பகிர்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார். மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் அவரது பதிவு டுவிட்டரில் வைரலானது. பலரும் நித்தின் சங்வானை பாராட்டி வருகின்றனர்.
கடந்த 2015ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சங்வான், தற்போது ஆமதாபாத் நகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வருகிறார்.
Comments