உலக மருத்துவர்கள் தினம்
இன்று உலக மருத்துவர்கள் தினம்ஜூலை 01, 2020
டாக்டர் பிதான் சந்திரா ராய் சேவையை பாராட்டி ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு 1948-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்தவர் டாக்டர் பிதான் சந்திரா ராய் (பி.சி.ராய்.) 1882-ம் ஆண்டு பீகார் மாநிலம் பான்கிபூரில் ஜூலை 1-ந்தேதி பிறந்த இவர், பாட்னா கல்லூரியில் பி.ஏ., முடித்துவிட்டு கொல்கத்தா மற்றும் இங்கிலாந்திலும் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இந்தியாவுக்குத் திரும்பியதும் ஏழைகளுக்காக மருத்துவமனைகளைத் தொடங்கி சிறந்த மருத்துவராக பணியாற்றினார். அத்துடன் காந்தியடிகளுடன் இணைந்து சுதந்திர போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். சுதந்திரம் என்ற கனவு நிறைவேற இந்தியர்களுக்கு வலிமையான உடலும், மனமும் தேவை என்பதை கருத்தில் கொண்டு அயராது உழைத்தார். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். இவரது பணிகளைப் பாராட்டும் வகையில் 1961-ம் ஆண்டு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்தது. 1962-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பி.சி.ராய் மறைந்தார். இவருடைய சேவையை பாராட்டி இவர் பிறந்தது மற்றும் இறந்த தேதியான ஜூலை 1-ந்தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ‘டாக்டர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்’ என இந்த தினம் வலியுறுத்துகிறது. இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம், அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு கடந்த 1976-ம் ஆண்டு முதல் ‘பி.சி.ராய் தேசிய விருது’ வழங்கப்படுகிறது.
இந்திய மருத்துவ கவுன்சிலில் 2019 டிசம்பர் மாத நிலவரப்படி 9.26 லட்சம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். ‘ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும்’ என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. ஆனால், இந்தியாவில் சராசரியாக 1,500 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலை உள்ளது. இந்நிலை மாறவேண்டும். அப்போதுதான் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி தடையில்லாமல் கிடைக்கும். அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த வாழ்க்கை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது என்று இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோயாளிகளின் உயிரை காப்பாற்ற நம் டாக்டர்கள் நேரம், காலம் பார்க்காமல் குடும்பத்தையே மறந்து, வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் எல்லையில் நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள் போன்று நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போர்க்களத்தில் போர் வீரன் போல் பணியாற்றி வருகின்றனர். இந்த மகத்தான பணியில் ஈடுபட்டுவரும் பால டாக்டர்கள் இராணுவ வீரர்கள் போர்க்களத்திர்ல உயிரை விடுவது போல் இப்பணியின்போதும் உயிரை விட்டு வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களுக்கு தேசிய மருத்துவர் தினமான இன்று (புதன்கிழமை) நாம் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்போம். . |
Comments