ரேஷன் பொருட்கள் இம்மாதமும் இலவசம்
6 முதல் டோக்கன் விநியோகம் ரேஷன் பொருட்கள் இம்மாதமும் இலவசம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஜூலை மாதமும் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அவ்வப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு, நிவாரணம் வழங்குவதற்காக ரூ.3,280 கோடியில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்க உதவித்தொகையுடன் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இதேபோல் மே, ஜூன் மாதங்களைத் தொடர்ந்து தற்போது ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்கு, ஜூலை 6 (திங்கள்) முதல் 9-ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அதில் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன்படி, ஜூலை 10-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இதற்கிடையே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், மதுரை மாவட்ட பகுதிகளில் ஜூன் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை வாங்க முடியாதவர்கள் ஜூலை 10-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments