அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். துக்கம் என்பதே தன்னைத்தொடாமல் எவன் ஒருவன் இருக்கிறானோ அவன் யோகி, பாபம் அதாவது மனத்தின் அசுத்தந்தான் துக்கத்திற்குக் காரணம். மனதில் உள்ளஅசுத்தங்கள் எல்லாம் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பி விடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் தான் மனத்தின் அசுத்தங்களை அகற்றமுடியும். இந்தச் சரீரக்கூட்டிவிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு, சரியான கல்வியின் மூலமும் அப்பியாசத்தின் மூலமும் கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து அசுத்தங்களைப்போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படி செய்து ஜயித்தால் கடைசியில் தேக வியோகமே பரமாத்மாவுடன் சேர்ந்து விடுகிற யோகமாகி விடும்


இ. யோகிக்கு அடையாளம் என்ன? பரமாத்மாவைச் சேர்ந்து விட்ட அவனது மனசு, வேறு எதையுமே சேர்த்துக்கொள்ள நினைக்காது. மனசு அதற்கப்புறம் ஓடவே கூடாது.அப்படி ஆகிவிட்டால் தான் அதற்கப்பறம் இப்போது இந்த மனசினால் நமக்கு உண்டாகி இருக்கிற அத்தனை தொந்தரவுகளும் தொலைந்துபோகும். அந்த நிலையைப்பெறுவதற்கு எதைச்சேர வேண்டும்? மனது எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேர வேண்டும். மனது அதன் மூலத்தில் சேர்ந்து விட்டால் அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஒட்டாது.அதுவே சகல தொந்தரவுகளிலிருந்தும் விடுபட்ட நிலை. நதி இருக்கிறது, அதன் மூலம் உண்டான இடம்என்ன?சமுத்திரம். சமுத்திர ஜலம் தான் ஆவியாக வேறொரு இடத்திலிருந்து நதியாக ரூபம் எடுக்கிறது. அந்த ஆறு ஓடாத ஓட்டமில்லை. இப்படி ஓடி ஓடிக் கடைசியில் தன் மூலமான சமுத்திரத்தில் வந்து விழுகிறது? அப்புறம்? அதற்குத் தனி ரூபம் உண்டா? ஓட்டம் உண்டா? ஒன்றும் இல்லை


 . இப்படி நதிகளுக்கெல்லாம் மூலமாக இருந்து, முடிவில் அவற்றைத் தன்னிலே சேர்த்துக்கொள்கிற சமுத்திரம், மாதிரி தம் மக்களை எல்லாம் முடிவான சேர்க்கையில் யோகத்தில் தன்னோடு கரைத்துக்கொள்கிற ஒன்று இருக்கிறதா என்றால் இருக்கிறது. சமாதி நிலையில் ஞானிகள்,யோகிகள் தங்கள் தனி மனசைக் கரைத்து விட்டு, வெளிப்பிரக்ஞையே இல்லாமல் இருக்கும் போது அந்த வஸ்துவை விட்டு விட்ட மாதிரி நமக்குத்தோன்றினால் கூட உண்மையில் இது நீங்காத சேர்க்கை தான். உள்ளுர அந்தச் சேர்க்கையின் அனுபவமே தான். அவர் வெளிப் பிரக்ஞையோடு இருப்பது மாதிரி நமக்குத்தோன்றுகிற போது கூட, அதை அடைய வேண்டும் என்ற ஆசை எதுவுமே அவருக்கு இல்லை. ஏதாவது ஒன்று தனக்கு வேண்டுமென்று கொஞ்சம் கொஞ்சம் ஒருவனுக்குத்தோன்றி விட்டால் கூட அவன் யோகியில்லை.அவன் ஸ்வாமியைச்சேரவில்லை என்று அர்த்தம். யோகியின் அடையாளத்தை வேறு விதமாகவும் சொல்லலாம். அவனுடைய சித்தம் பரமாத்மாவிடமே நிலைத்து விட்டது என்றால் அதற்கப்புறம் எந்தப்பெரிய துக்கம் வந்தாலும் அது துளி கூட ஆடக்கூடாது, அசையக்கூடாது.அழக்கூடாது. இப்படியெல்லாம் சித்தம் கொஞ்சம் சலித்து விட்டால் கூட, அவன் பரமாத்மாவை அடையவில்லை என்றே அர்த்தம். யோகிக்கு அநேக துக்கம் வரும். அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாத்தோன்றும்.ஆனால் அவனுக்குத்துக்கம் லவலேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பது கூடச்சரியல்ல அது உணர்ச்சியே இல்லாத நிலையல்லவா?


          யோகி ஒருத்தன் தான் பூரண பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸ்தானந்தனாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதே இல்லாமல் சதா ஆனந்தமாக ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அது தான்யோகம். அவனுக்கு ஸ்வபாவமாகவே கருணை மாத்திரம் சுரந்து கொண்டிருக்கும், யாரிடத்திலும் கோபம் வெறுப்பு வராது. இன்னொரு பிராணிக்குத் தன்னால் இம்மியும் ஹிம்சை வரக்கூடாது என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும். வெளி உலகத்தின் பார்வைக்கு அவன் என்னென்ன காரியம், செய்தாலும் அதிலெல்லாம் அவனுக்குத் தான் செய்கிறோம் என்ற அகங்கார எண்ணமே இராது. சொந்தப் பற்றே இல்லாமல் பரம காருண்யம் மட்டுமே அவனுடைய காரியங்களில் இருக்கும். வெளியே பார்க்கிற காரியம் கடுமையாக இருந்தாலும் கூட, உள்ளுக்குள்ளே அதுவும் பரம காருண்யம் தவிர வேறாக இராது


        . மகா யோகியான பரமேஸ்வரன் இப்படித்தான் சம்ஹாரம் செய்கிறார். நமக்கு அது கொடுமையாகத் தெரியலாம்.ஒவ்வொரு ஜீவனும் எத்தனை பாப ஜீவனாயிருந்தாலும் சிறிது காலமாவது கர்ம கதியிலிருந்து விடுதலை அடைந்து தன்னிடம் லயித்திருப்பதற்கு அவர் சம்ஹாரம் செய்கிறார். தினமும் நமக்கு தூக்கத்தைக் கொடுத்து அந்த நேரங்களில் சுக துக்கங்களிலிருந்து நமக்கு விடுதலை தருகிற மாதிரி, இந்த சரீரம் விழுந்த பின்னும் கொஞ்ச காலம் சிரம பரிகாரம் தருகிறார். தினமும் தூங்கிவிட்டு மறுநாள் விழித்துக்கொண்டு பழையபடி நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி. இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின் இன்னொரு சரீரத்தில் விழித்துக்கொள்கிறோம். இந்த அலைச்சல் புனரபி-மரணம் கூடாது, இந்த சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச்செய்து கொள்ளவேண்டும்.


         கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம் தானம் எல்லாம் அதற்குத்தான், குழந்தையாக இருக்கிற காலத்தில் இருந்தே இவற்றில் எல்லாம் பழகவேண்டும். அப்படிப்பழகினால் தான் . கோடானுகோடி ஜனங்களை இந்த மாதிரி படிப்படியாக உயர்த்துவதற்கு முயன்றால் தான் எங்கேயாகிலும், ஒரு யோகி ஒரு ஞானியாவது பூரணமாக உண்டாவார். அப்படி ஒருத்தர் உண்டாவது தான் இத்தனை மனுஷ்ய சிருஷ்டிக்கும் பலன். ஆகவே நிம்மதியற்ற, மனிதனாக நீங்கள் இல்லாமல் ஒரு யோகியாக ஞானியாக மாறுங்கள். கோடிக்கணக்கான மக்களைப் பழக்குவதற்குக் குருவாக மாறுங்கள்.


இந்திய சமுதாயத்தை ஆனந்த மயமான சமுதாயமாக்க ஒத்துழையுங்கள். உள்ளத்தில் உண்மை ஒளியைக் காண்பதற்கு உலகத்திற்கு வழிகாட்டுங்கள்


 Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,