நாளை சமூகம் மன அமைதியுடன் பயணிக்க வழி செய்யுங்கள்.

"உயிர்களிடத்து அன்பு வேணும்" என்னும் தும்பி சிறுவர் மாத இதழின் வாக்கியம் தான் இன்று ஏராளமான சிறுவர்களின் வாழ்க்கையை, வளர்ச்சியை அழகுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.


ஆமாம், உண்மை தான்.


தோசி மாருதி எழுதி தமிழில் கொ.மா.கோ.இளங்கோ அவர்களால் மொழிப்பெயர்த்த மாயி-சான்(ஹிரோஷிமாவின் வானம் பாடி) என்ற புத்தகத்தின் பின்புற அட்டைப்படத்தில்


"உலகிலுள்ள அனைத்துப் 
பேரன் பேத்திகளுக்காக 
இக்கதையை எழுதியுள்ளேன்.
ஹிரோஷிமாவில் நடந்த 
அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை,
மாபெரும் துயரக் காட்சிகளை
குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது 
அவ்வளவு எளிதல்ல.
"மாயிசான்" கதையை படித்து முடிக்கின்ற சிறுவர்கள்,
நாளை ஒரு வேளை, இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாமல் தடுப்பார்கள்.உலக அமைதிக்காக உறுதிமொழி எடுப்பார்கள் என்று தோசி மாருதி குறிப்பிட்டு இருப்பார்.


இப்புத்தகத்தின் பின்புற அட்டைப்படத்தில் உள்ள வரிகள் போதும் புத்தகத்தின் ஆழத்தை குழந்தைகளுக்கு சுட்டிக் காட்டுவதற்கு என்றொரு நம்பிக்கையில் குழந்தைகளிடம் பேச வாய்ப்பு அமையும் போதெல்லாம் இப்புத்தகத்தை பற்றி நிறைய பேசியுள்ளேன்.


அப்படி தான் ஒருநாள் நீண்டநேர மழையைத் தொடர்ந்து மின்சாரமின்றி குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருக்க ஏதாவது கதைச் சொல்லுங்கள் என்று கேட்கும் குழந்தைகளுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருக்க தும்பி சிறுவர் மாத இதழின் அறிமுகம் கிடைத்தது.


"மாயிசான்" புத்தகம் முழுக்க முழுக்க அமைதியை தழுவி நகர்வது போலான உணர்வு எப்போதும் எனக்கு உண்டு.


ஆனால்,


அதை விட ஆகச் சிறந்த வடிவமைப்பு தான் தும்பி சிறுவர் மாத இதழ்.
அன்பு, நன்றியுணர்வு,மன்னிப்பு,அமைதி, நம்பிக்கை இவையனைத்தும் குழந்தைகளுக்கு புத்தகத்தில் உள்ள கதைகளின் வாயிலாக எடுத்துச் சொல்கிறது.அது மட்டுமின்றி புத்தக வாசிப்பின் ஆரம்பநிலை சுவாரஸ்யத்தையும் தும்பி சிறுவர் மாத இதழ் அளிக்கிறது. 


பொதுவாகவே குழந்தைகள் புத்தகங்களில் விரும்புவது வண்ணங்கள் அந்த வண்ணங்களில் விலங்குகள் பறவைகள் மனிதர்கள் மற்றும் கற்பனை கதாபாத்திரங்களை அடையாளப்படுத்தும் விதமாக கதையின் தொடக்கமும் முடிவும் இருக்க வேண்டும் என்பது குழந்தைகளின் மனநிலை.குழந்தையின் எண்ணம் போல் மனசு போல் அமைந்துள்ளது தும்பி.


 குழந்தைகளின் ஆரம்பக்காலத்து புத்தக வாசிப்பு என்பது அவர்களே அறியாது வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.அந்த வகையில் நண்பர்கள் பலர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள் சிறந்த சிறுவர் மாத இதழ் பெயர் சொல்லுங்கள் என்று.


தற்போதும் இனிவரும் காலங்களிலும் தும்பி சிறுவர் மாத இதழ் தான் ஒரு குழந்தையின் தேடலை பூர்த்தி செய்யும்.யாரோ ஒருவரின் தேடல் தான் நம் அனைவரின் செயல்கள்.அதற்கிணங்க தும்பியை ஒவ்வொரு குழந்தையின் கரங்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் நாம் கடமைப்பட்டுள்ளோம்.


தும்பி சிறுவர் மாத இதழின் ஆசிரியரான சிவராஜ் அவர்களின் நேர்மறை எண்ணங்கள் தான் குழந்தைகளுக்கான மாத இதழ் வெளிவருவதற்கு முழு காரணம்.


ஒவ்வொரு மாதமும் வீடு தேடிவரும் புத்தகங்களில் எந்த பக்கத்தை திருப்பினாலும்  சக மனிதனை எவ்வாறு நேசிப்பது என்பதும் சக உயிர்களிடத்து எவ்வாறு அன்பை செலுத்த வேண்டும் என்பதை பற்றியும் தான் உள்ளது.


ஆகவே, பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறு வேண்டுகோள் தும்பி சிறுவர் மாத இதழை குழந்தைகளிடம் எடுத்துச் செல்லுங்கள்.நாளை சமூகம் மன அமைதியுடன் பயணிக்க வழி செய்யுங்கள்.


- கீர்த்தனா பிருத்விராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,