ஆடிமாத அம்மன் சிறப்புகள்

ஆனி முடிந்து ஆடி பிறந்தது.

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் இன்னும் என்னென்ன விஷேசம்


ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்து மக்களால் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப் பெறும் ஒரு திருநாளாகும். ஆடி மாதம்.தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்படுகின்றது. ஆடி மாதத்தில் பூதேவி பூமியில் அம்மனாக அவதரித்தார் என்றும், பார்வதி மேற்கொண்ட தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. ஆடி பிறப்பு தொடங்கி

ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது.

மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும், எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

ஆடி புண்ணியகாலம்
இந்து மக்கள் ஒரு வருடத்தை இரு அயனங்களாக வகுத்து கணக்கிடுகின்றனர். ஒருமுறை சூரியன் வடதிசை நோக்கி நகர ஆரம்பிக்கும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயணம் என்றும் சூரியன் தென் திசை நோக்கி சஞ்சரிக்க ஆரம்பிக்கும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயணம் என்றும் அழைக்கின்றார்கள்.

ஆடி விருந்து
உத்தராயண காலம் தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகவும்; தட்சணாயண காலம் இராப்பொழுதாகவும் கணிக்கப் பெறுகின்றது. உத்தராயண காலம் சூடான காலமாகவும் தட்சணாயண காலம் குளிரான காலமாகவும் இருப்பதனால் உத்தராயண கால ஆரம்ப தினமான தை முதலாம் நாள் தைப்பொங்கல் பொங்கி சூரியனுக்கு விருந்து படைக்கின்றோம். தட்சணாயண காலம் தேவர்களுக்கு இராப்பொழுது ஆரம்பமாகின்றது. அது ஆடி முதலாம் நாள் அவர்களுக்கு மாலைநேரமாக அமைவதால் அவர்களுடன் நாமும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை போன்றவைகளை செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்கின்றோம்.

புதுமணத்தம்பதியர் சீர்
ஆடி மாதம் முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து; பெண்ணின் தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து மாப்பிளையை மட்டும் மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி மாதம் முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

தெய்வீக வழிபாடு
பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த இந்த ஆடி மாதம், பெண்கள் வழிபட்டுப் பலன் பெறுகிற மாதமாகவும் சிறப்புறச் சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார்கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியைத் தவிர, பெண்ணை மற்றும் பொருநை எனப்படும் தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

குல தெய்வ வழிபாடு
ஆடி 1 ஆடி முதல் நாள் தாய் வீட்டு சீர் வீடு தேடி வரும். திருமணமான பெண்கள் அம்மா வீட்டு குல தெய்வத்தை நினைத்து வழிபடுங்கள். ஆடி 3ஆம் தேதி ஜூலை 18 சனிக்கிழமை சனிப்பிரதோஷம் வருகிறது. சிவபெருமானை நினைத்து வணங்குங்கள் அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று வரலாம்.

முன்னோர்களுக்கு திதி
ஆடி 5ஆம் தேதி ஜூலை 20 சோமாவதி அமாவாசை ரொம்ப நன்மையை கொடுக்கும். தாய்க்கு திதி முறையாக கொடுப்பது நல்லது. திங்கள் சந்திரன் தாய்க்கு உரிய நாள். தாயின் ஆசி கிடைக்கும். மறக்காமல் முன்னோர்களுக்கு திதி கொடுங்க. ஆடி 9 ஆம் தேதி ஜூலை 24 திருவாடிப்பூரம் ஆண்டாள் ஜெயந்தி. ஆண்டாளை வணங்க திருமண தடை நீங்கும்.

ஆடிக்கிருத்திகை
ஆடி 17ஆம் தேதி ஆகஸ்ட் 1ஆம் தேதி மகா சனிப்பிரதோஷம், ஆடி 18 ஆகஸ்ட் 02ஆம் தேதி ஆடிப்பெருக்கு அற்புதமான நாள் காவிரியை வணங்க புனித நீராட நல்ல நாள். ஆடி 23 ஆகஸ்ட் 07ஆம் தேதி மகா சங்கடஹர சதுர்த்தி. ஆடி 28 ஆகஸ்ட் 12ஆம் தேடி ஆடிக்கிருத்திகை. ஆடி 29ஆம் தேதி ஆகஸ்ட் 13 சனி ஜெயந்தி சனி பகவான் பிறந்தநாள். ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டமத்து சனி, என அனைத்து சனி தோஷங்களும் நீங்க சனி பகவானை வணங்கலாம். ஆடி மாதத்தில் நம்முடைய கஷ்டங்கள் தீரும் கவலைகள் மறையும் என்ற நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்வோம்.Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,