காணக்கிடைக்காத பொக்கிஷத்தை கண்டெடுப்போம்

 

மகிழ்ச்சி... காணக்கிடைக்காத பொக்கிஷத்தை கண்டெடுப்போம்...


ஆகஸ்ட் 14, 2020


கானல் நீராகிகாணக்கிடைக்காத பொக்கிஷம்போல் மாறிக்கொண்டிருக்கும்மகிழ்ச்சியை மேம்படுத்துவது பற்றி படிப்போம்.மகிழ்ச்சி


பேனாவை எடு.. இன்று உங்களை சந்தோஷம் கொள்ளவைத்த பத்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுது.. சரியான நேரத்தில் விழித்தது, மனைவியிடம் இருந்து முத்தம் பெற்றது, தேவையான அளவு உடற்பயிற்சி செய்தது, நண்பர்களின் அரட்டை, வாட்ஸ் -அப் மற்றும் பேஸ்புக்கில் பார்த்தது, படித்தது.. இப்படி எதுவானாலும் இருக்கலாம். உங்களுக்கு எவை சந்தோஷம் தந்திருந்தாலும், அவற்றில் பத்து விஷயங்களை எழுது.


எழுதிவிட்டீர்களா? சரி.. எவ்வளவு நேரத்தில் அந்த பத்து விஷயங்களை எழுதினீர்கள்? அந்தக் கால அளவையும் குறித்துக்கொள். பேப்பரையும், பேனாவையும் ஐந்து நிமிடங்கள் அப்படியே தள்ளிவைத்துவிட்டு, அடுத்த கேள்விக்கு விடை எழுத நீங்கள் தயாராகு.


இன்று, மேலே எழுதிய அதே நேரத்திற்குள் நீங்கள் சந்தித்த பத்து எரிச்சல், வருத்தத்திற்குரிய விஷயங்களை எழுது. வாஷ்பேஷினை திறந்தபோது தண்ணீர் வராததோ, செல்போனில் தேவையற்ற அழைப்பு வந்ததோ, இட்லிக்கு சட்னி ருசியில்லை என்று கோபப்பட்டதோ, குழந்தைகளை திட்டியதோ.. எதுவாகவும் இருக்கலாம். அவற்றில் பத்து எதிர்மறையான விஷயங்களை எழுது.


இப்போது விஷயத்திற்கு வருவோம். இரண்டு கேள்விகளில், எந்த கேள்விக்குக் குறைந்த நேரத்தில் நீங்கள் விடை எழுதினீர்கள்?
            முதல் கேள்விக்கு நீங்கள் வேகமாக பதில் எழுதியிருந்தால் நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள். ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் அல்லது அந்த வாழ்க்கை வாழ விரும்புகிறவர்கள் என்ற வரிசையில் நிற்கிறீர்கள். அதாவது உங்கள் மனதில் மகிழ்ச்சியான விஷயங்களே பதிந்துபோய் இருக்கின்றன.
            இரண்டாவது கேள்விக்கு நீங்கள் விறுவிறுவென்று விரைவாக பதில் எழுதியிருந்தால், உங்கள் மனது முழுக்க காயங்களும், கசப்புகளும்தான் நிறைந்து கிடக்கின்றன. உங்களின் மகிழ்ச்சிக்கு அவை மாபெரும் தடையாக இருந்துகொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் உணரவேண்டும்.


மனம் ஒரு அழகான பாத்திரம். கோபதாபம், எரிச்சல், கவலைகளால் அந்தப் பாத்திரம் எப்போதும் நிரப்பப்பட்டிருந்தால், மகிழ்ச்சியை அங்கே வைக்க இடமிருக்காது. சோகங்கள், துக்கங்கள், எதிர்மறையான எண்ணங்கள் வெளியேற்றப்பட்டு, மனப்பாத்திரம் காலியாக இருந்தால்தான் மகிழ்ச்சியை நிரப்ப முடியும்.
            உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கவேண்டும் என்றால், நீங்கள் செய்யும் செயலில் மனம் முழுமையாக ஈடுபடவேண்டும். உங்கள் மனம் எதில் முழுமையாக ஈடுபடுகிறதோ அதில் எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.


உங்கள் குழந்தையிடம் காமெடி கதாபாத்திரம் நிறைந்த சித்திரக் கதை புத்தகம் ஒன்றை கொடுங்கள். உற்சாகமாக அதை பெற்று, படித்துக்கொண்டிருக்கும். அதை வாங்கிவிட்டு பள்ளிப்பாடப் புத்தகத்தை கொடு;   உடனே அதன் முகம் சோர்ந்துவிடும்.


உங்களையே எடுத்துக்கொள். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடுங்கள் என்றால் அதில் உற்சாகம் வந்துவிடும். அலுவலக வேலையை அதே உற்சாகத்துடன் உங்களால் செய்ய முடிவதில்லை. காரணம் என்ன, மன ஈடுபாடுதான்.


கதைப்புத்தகத்தில் ஈடுபாடு காட்டுவதுபோல் பாடப்புத்தகத்திலும் உங்கள் குழந்தை ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டால், அது பாடப்புத்தகத்தையும் உற்சாகமாக படிக்கத் தொடங்கிவிடும். அங்கே அது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக மாறிவிடும். நீங்கள் விளையாட்டில் காட்டும் ஈடுபாட்டை வேலையிலும் காட்டத்  தொடங்கினால், உங்களது அலுவலக வேலையும் மகிழ்ச்சிக்குரியதாகி விடும். அலுப்பு ஏற்படாது.
            ‘இதோ இந்த நிமிடம் உங்கள் கையில் இருக்கிறது. இதுதான் வாழ்க்கை’ என்பதை நம்பு. இது ஒரு தத்துவார்த்தமான விஷயம். இதை நீங்கள் நம்பும்போது நேற்று நடந்த சோகங்களும், கவலைகளும் உங்கள் மனதில் இருந்து மறைந்துவிடும். நாளை என்கிற எதிர்காலத்தை பற்றிய பயமும் போய்விடும். அப்போது இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் மனநிலை உருவாகும்.
            வாழ்க்கையில் சின்னச்சின்ன ஏமாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும். அவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணித்துக்கொண்டு வாழ்ந்தால்தான் மகிழ்ச்சியை வரவேற்கும் வாய்ப்பு உருவாகும். காலையில் சரியான நேரத்துக்குக் கிளம்பிவிட்டீர்கள். இரு சக்கர வாகனத்தில் ஏறுகிறீர்கள். அப்போது கிளம்பிச்சென்றால், பத்து நிமிடங்கள் முன்னதாகவே அலுவலகம் சென்றடைந்திட முடியும். ஆனால் போகிற வழியில் உங்கள் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆகிவிட்டால் என்ன செய்வது? எப்படியும் தாமதம்தான். அந்த நேரத்தில் பதட்டம் ஆகாமல் உங்களுக்குப் பிடித்த ஜாலியான பாட்டு ஒன்றை மனதுக்குள் முணுமுணுத்தபடி, அடுத்து ஆகவேண்டியதை பாருங்கள்.

வண்டியை சபித்தோ, நேரத்தை சபித்தோ எந்தப் பலனும் இல்லை. பஞ்சர் ஆனது ஆனதுதான். திரும்பவும் பஞ்சர் ஒட்டித்தான் ஆகவேண்டும். அதை நினைத்து வேதனைப்பட்டு என்ன நடந்துவிடப்போகிறது? அந்த இடரைத் தவிர்த்து மனதை இயல்பாக்க, பாட்டுப்பாடி மனதை உற்சாகப்படுத்து. வீடு மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாடு மகிழ்ச்சியுடையதாக மாறும். வீடு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால், கணவன்-மனைவி இருவரும் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள வேண்டும்.

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,