ஆவணி அவிட்டத்தின் போது அனுசரிக்க வேண்டிய நெறிமுறைகள்!
இன்று ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும். இது ரிக்,யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.
சமசுகிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம்.
ஆவணி அவிட்டத்தின் போது அனுசரிக்க வேண்டிய நெறிமுறைகள்!
'இறைவன் நாம் இந்த பூமி சகல ஐஸ்வர்யங்களையும் பார்ப்பதற்கு நன்மை தீமைகளைப் பகுத்து அறிவதற்கு நமக்கு அளித்த கண்கள் இரண்டு. ஆனால், நாம் நம் புத்தக அறிவைத் தாண்டி இறைவனை அறியவும் இறை சிந்தனையுடன் திகழவும் நமக்கு ஞானக்கண் என்னும் இன்னுமொரு கண் தேவை. அந்தக் கண் கொண்டு பார்க்கத்தொடங்கும் வைபவமே 'உபநயனம்' எனப்படுகிறது. உபநயனம் என்றால் ’நமக்கு துணையாக வரும் இன்னுமொரு கண்’ என்று பொருள்.
உபநயனம் செய்வது என்பது ஒரு தொடக்க நிகழ்ச்சிதானே தவிர, அந்த நாள் முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம். ஒரு குருவின் துணையுடன் இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்வதுதான் இதன் நோக்கம். வீட்டுப் பெரியோர், தகப்பனார், ஆச்சார்யர் ஆகியோர் மூலமாகத்தான் உபநயனம் செய்விக்கப்படவேண்டும்.
இப்படி உபநயனம் செய்விக்கப்பட்டபின் தாங்கள் அணிந்த பூணூலை, ஆண்டுதோறும் ஆவணி அவிட்ட நாளில் மாற்றி புதிய பூணூல் அணிவார்கள். அதுவே ஆவணி அவிட்ட நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டத்தன்று என்னென்ன நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றி படவேடு லட்சுமி நரசிம்மர் கோயில் குருக்கள் பார்த்தசாரதி விவரிக்கிறார்.
``தமிழ் மாதங்களில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மற்றும் ஆனி ஆகியவை உத்தராயண காலத்தில் வருபவை. ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகியவை தக்ஷிணாயன காலத்தில் வருபவை. தக்ஷிணாயன காலத்தில் வரும் 'ஆவணி அவிட்டம்' என்பது ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம்.
வேத பாடங்களைப் பாராயணம் செய்து படிப்பதற்கு உத்தராயண காலத்தையும் அதன் உட்கருத்துக்களை, உப நூல்களையும் அறிந்து கொள்வதற்கு தக்ஷிணாயன காலத்தையும் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அப்படி ஆண்டு முழுவதும் படிக்கும்போது ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திட, ஆவணி அவிட்ட நாளில் வழக்கம்போல் காலையில் எழுந்ததும் இறைவனைத் துதி செய்யவேண்டும். பின்னர், நீராடி புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும்.
இதன் பிறகு எல்லா சேத்திரங்களில் உள்ள தெய்வங்கள் எல்லா நதிகளின் தேவியர்களையும் அழைத்து மகா சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். மீண்டும் ஆற்றில், குளத்தில், வீட்டில் என அவரவர் வசதிக்கேற்ப நீராடி புது ஆடைகள் அணியவேண்டும். இரண்டு முறை நீராட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
அதன் பிறகு, தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிக்கவேண்டும். திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று பூணூலையும் அணியவேண்டும். அதன் பிறகு காயத்ரீ ஜபம் சொல்ல வேண்டும். உலகம் சிறக்கவும் நாடு சிறக்கவும் தன் நகரம் சிறக்கவும், தனது கிராமம் சிறக்கவும் தனது வீடு சிறக்கவும் காயத்ரீ ஜபத்தைச் சொல்ல வேண்டும். காயத்ரீ மந்திரத்தை தினம்தோறும் சொல்வது மிகவும் முக்கியம். சொல்லாலும் மனதாலும் செயலாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும். வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும் வைராக்கியம் போனால் சகலமும்போய்விடும் என்பதை மனதில் இருத்தவேண்டும் என்பதே ஆவணி ஆவிட்டத்தின் நோக்கம்'' என்று கூறி விடை கொடுத்தார்.
Comments