புத்தர் பாதை காட்டுவோம்

சுதந்திர தினம் 


               புத்தர் பாதை காட்டுவோம்


                           ******


 




  1. காந்தி என்ற கருணை மூர்த்தி


 கண்ட கனவை எண்ணுவோம்


சாந்தி என்றும் சகத்தை ஆள


      சந்தை முறையைத் தள்ளுவோம்


ஏந்தி நின்று எடுத்த தல்ல


      எங்கள் வழியே சத்தியம்


பந்த பாசம் பகுத்த நாடு


 பக்தி மிகுந்த பாரதம்.



  1. அன்னை பூமி ஆளு வோர்கள்


                  அறத்தைப் போற்ற வேண்டுமே


            முன்னை  கண்ட மோகம் மாற்ற


                  முடிவும் செய்ய வேண்டுமே


            தன்னை எண்ணித் தாபம் நீக்கும்


                  தகைமை ஏற்க வேண்டுமே


            உன்னை மட்டும் எண்ணி டாமல்


                  உலகை எண்ணு மானிடா



  1. கண்ணை விற்றுக் காண எண்ணும்


                  கல்லின் சிற்பம் போலவே


            மண்ணை எண்ணி மாசு செய்தல்


                  மந்தை ஆட்டின் தன்மையே


            தண்டம் என்ற  தன்மை  மாற்றத்


                  தாகம் கொள்ளு மானிடா


            அண்டம் யாவும் அண்டி  வாழ


                  அன்பில் ஒன்று சேரடா.



  1. வீரம் போற்றி வென்ற நாடு


                  வேற்று மைகள் ஏனடா


            பாரம் யாவும் பார்த்துத் தாங்கிப்


                  பாதை ஏகிப் பாரடா


            தீரம் சொல்லித் தேடிப் பாரு


                  தீமை ஓடும் வேறடா


            தூரம் எல்லை தூர ஓடும்


                  தோது செய்யும் நாடடா !



  1. உற்ற வெற்றி உண்மை ஆகும்


                  உலகம் போற்றும் கூறவா


            நற்ற வத்தை நாளும் காக்க


                  நலங்கள் என்ன தூரமா


            முற்றும் விட்டு மூடி இட்டும்


                  முகத்தை மாற்றல் வேண்டுமா


            பெற்ற தாயைப் பேணி டாமல்


                  பெருமை பேசல் நீதியா?



  1.    சேர்ந்து வாழச் செம்மை வேண்டும்


                  செய்வ தென்ன கூறடா


            சார்ந்து நிற்கும் சார்பு யாவும்


                  சர்வ சாட்சி ஆகுமா


            கூர்ந்து நோக்க கூடி வாழும்


                  கொள்கை மாற்றம் செய்யுமா


            தேர்ந்து நீயும் தேர்வு செய்து


                  தேடி உண்மை காணடா! 



  1. மானம் போற்றி மனிதம் காத்து


                  மாற்றம் கண்ட பூமியில்


            ஈனம் கொண்ட இடியை ஒத்த


                  இன்னல் என்ன செய்யுமே


            ஊனம் நீக்கி உலகை மாற்ற


                  ஒன்று சேரும் வேளையில்


            தானம் தந்த தகைமை யாவும்


                  தாங்கிக் காக்கும் நம்மையே !



  1. போரைச் சொல்லிப் புவியை வீழ்த்த


                  பொய்யர் செய்யும் சூழ்ச்சியை


            நாரை போல நகர்வு செய்து


                  நாமும் நட்டம் நீக்குவோம்


            ஊரை யாரும் உருட்ட எண்ணி


                  ஊறு செய்யும் வேளையில்


            தேரின் தன்மை கொண்டு நாமும்


                  தேடும் வெற்றி வெல்லுவோம்.



  1. தொற்று நோய்கள் தொடரும் வேளை


                  தொடர்பைத் தள்ளி வைத்துமே


            உற்ற நன்மை உடலில் காண   


                  ஒருமைப் பட்டு வாழுவோம்


            மற்று முள்ள மனிதர் வாழ


                  மனத்தில் எண்ணிச் சேருவோம்


            நிற்க நாட்டில் நிதமும் நன்மை


                  நீதி காக்க வேண்டுமே



  1. மதங்கள் எல்லாம் மனிதர் வாழும்


                  மார்க்கம் சொல்லும் இடமாகும்


            இதங்கள் ஏற்றால் இதயம் யாவும்


                  ஏற்கும் வாழ்வில் சுகமாகும்


            தடங்கள் ஏனோ தனிமை நீக்க


                  தன்னில் மாற்றம் துணையாகும்


            விடங்கள் போலே விரியும் பேதம்


                  வீழ்த்த அன்பே செலவாகும்



  1. நாட்டு மக்கள் நன்மை காண


                  நல்ல றங்கள் போற்றுவோம்


            வீட்டை மட்டும் வேட்டும் தன்மை


                  மாற்றி நன்மைசெய்குவோம்


            ஏட்டில்  வைத்து எண்ணம் மூடும்


                  எத்தர் செய்கை நீக்குவோம்


            பூட்டை நெஞ்சில் பூட்டி டாமல்


                  புத்தர் பாதை காட்டுவோம்.



                                    --ச.பொன்மணி


                             


                              ******


             


 


 


                     


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி