ஸ்ரீஅமிர்தகலச தட்சிணாமூர்த்தி

🌹 ஸ்ரீஅமிர்தகலச தட்சிணாமூர்த்தி🌹


 
 கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)


கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்
"தட்சிணாமூர்த்தி பகவானின் மேலிரு கரங்களில் தீச்சுடரும் பாம்பும் இருக்கும். அந்த கரங்களில் அமுதகலசம் இருப்பதுபோல் படம் வரைந்து வழிபடுவது மன அமைதி, குடும்பச் செழிப்பு, காரிய வெற்றி, கல்வியில் தேர்ச்சி போன்ற நன்மைகளைப் பெறச்செய்யும்.. 


 பல அபூர்வ சக்திகள் நிறைந்த அமுதகலச தட்சிணா மூர்த்தியை
வணங்கி வாட்டம் தீர்க்கலாம்..


 தட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை 
மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். 


 அபஸ்மரா அறியாமையை - இருளை குறிக்கின்றது. 


 அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும்  -
ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். 


 அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அமிர்தகலச தட்சிணாமூர்த்தி நெருப்புக்குப்பதிலாக அமிர்தகலசங்களைக்கொண்டு
இடக்கரத்தில் உள்ள  அமிர்தகலசம் அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல் கொண்டு திகழ்கிறது.. வாட்டம் தீர்க்கிறது..


 அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை - ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக காட்டப்படுகிறது..


பளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.


 வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல் 
அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.
திருக்கரத்திலுள்ள நூல் சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.


திருக்கரத்தில் உருத்திராக்கமாலை 36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.


 


 இடக்கரத்தில் அமிர்தகலசம் அனைத்து உயிர்களுக்கும் 
பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.


சின்முத்திரை ஞானத்தின் அடையாளம், 


பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். 


 உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.


 புலித்தோல் தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்


 தாமரை மலர்மீது அமர்தல்  அன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.


நெற்றிக்கண்  காமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.ஆலமரமும் அதன் நிழலும் மாயையும் அதன் காரியமாகிய உலகமும்
தென்முகம் அவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.


 அணிந்துள்ள பாம்பு குண்டலினி சக்தியைக் குறிப்பது.
வெள்விடை - தருமம்


 சூழ்ந்துள்ள விலங்குகள் பசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.


 முயலகன் - முயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு. 


 படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்களான சநகர், சநந்தனர், சனத்குமாரர், சநாத்சுஜாதர் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். 
 
பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.


இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சத்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். 


 எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. 


 பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்பித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. 
அவர்கள் ஞானம் பெற்றனர்.


 குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேஸ்வர:


குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா:
தஸ்மை ஸ்ரீ குரவே நம சென்னை திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் -  வடிவுடையம்மன் ஆலய கோபுர வாசலுக்கு முன்னுள்ள மண்டபத்திற்கு அருகில் தட்சிணாமூர்த்திக்கென அமைந்த தனிக்கோயிலில் வடக்கு நோக்கி ஒன்பது அடி உயரமும் ஐந்தடி அகலம் கொண்ட பிரம்மாண்ட வடிவில்    சிம்மவாகனத்துடன்  வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். 


 பொதுவாக தட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். 
ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கும்  அபூர்வ அமைப்பை தரிசிக்கலாம்..!
Photo: வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி.தெட்சிணாமூர்த்திக்கென அமைந்த தனிக்கோயில் இது. வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.


 ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் 
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா |


 மஞ்சுளா யுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,