கருப்பை : ஐம்பது கிராம் அதிசயம்
கருப்பை : ஐம்பது கிராம் அதிசயம்
ஆகஸ்ட் 18, 2020
பெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத்தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம்.
கருப்பை
மனித உடலை இயற்கை மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறது. முக்கியமான உறுப்புகளை எல்லாம் கவசம் போன்று நேர்த்தியாக எலும்புக்கூடுகள் பாதுகாக்கும் அளவுக்கு உருவாக்கியிருக்கிறது. மூளையை மண்டை ஓடு, இதயத்தையும் - நுரையீரலையும் மார்புக்கூடு எலும்புகள் பாதுகாப்பதுபோல், மனித இனம் தழைப்பதற்காக பெண்ணுக்குள் இருக்கும் முக்கியமான பாலின உறுப்புகளை எல்லாம் பெல்விஸ் எனப்படும் ‘கூபகம்’ எலும்பு பாதுகாக்கிறது. இது மனிதர்களுக்கு உணர்ச்சிகளை உணர வைக்கும் முள்ளெலும்புக் கோர்வையின் கீழ்ப்பகுதியில் இரண்டு இடுப்பு எலும்பு களுடன் இணைந்து காணப்படுகிறது.இந்த ‘பெல்விஸ்’ தான் மனித இனத்தின் நுழைவாயில். தாயின் கருப்பையில் உருவாகி வளரும் குழந்தை, இந்த எலும்புக்கூட்டின் திறப்பு வழியாகத்தான் வெளியே வந்து உலகை எட்டிப் பார்க்கிறது. பிரசவத்தின்போது ‘பெல்விஸ்’ இணைப்பு எலும்புகள் சற்று விரிந்துகொடுக்கும் அளவுக்கு இயற்கை அதனை வடிவமைத்திருக்கிறது.
பெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத்தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம். நமது உறுப்புகள் ஒவ்வொன்றையும் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நம்மை குழந்தையாக்கி இந்த உலகிற்குத் தந்தது கருப்பைதான். அதன் செயல்பாடுகளை நினைத்துப்பார்க்கும்போதே வியப்பு ஏற்படும்.
பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்புக் கூட்டின் உள்ளே மிக பாதுகாப்பாக பேரிக்காய் அளவில் அமைந்திருக்கும் தசைப்பகுதிதான் கருப்பை. ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது அவளது கருப்பை 2.5 முதல் 3.5 செ.மீ. நீளமாக இருக்கும். பூப்படைந்து, திருமணமாகும் பருவத்தில் 6 செ.மீ. முதல் 8 செ.மீ. நீளம் வரை வளர்ந்திருக்கும். திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அது 9 முதல் 10 செ.மீ. அளவில் பெரிதாகிவிடும். பருவமடைந்த பெண்ணின் கருப்பை 50 முதல் 70 கிராம் எடையுடன் காணப்படும். அவள் கர்ப்பமடையும் காலத்தில் குழந்தையைத் தாங்கி வளர்ப்பதற்காக அது 1100 கிராம் அளவுக்கு எடை அதிகரித்து விடும். கர்ப்பகாலத்தில் அதன் கொள்ளளவும் 500 முதல் 1000 மடங்காகி விடும். பெண் களின் கருப்பை இந்த அளவுக்கு அதிசயங்கள் நிகழ்த்துவதற்கு அதன் தசைகளின் அமைப்பும், பெண்களுக்குள் சுரக்கும் பாலின ஹார்மோன்களின் செயல்பாடுகளும்தான் காரணம்.
Comments