பெருங்குடல் கேன்சரால், இளம் வயதினரே அதிக அளவில் பாதிக்

பெருங்குடல் கேன்சரால், இளம் வயதினரே அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 50 வயதிற்கு கீழ், குறிப்பாக, 40 - 50 வயதிற்குள், அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.


 இதுவே, மேற்கத்திய நாடுகளில், 70 வயதிற்கு மேல் தான் பெருங்குடல் கேன்சர் வருகிறது. மதுப் பழக்கம், சிகரெட், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் உட்பட, பலவற்றை பாதிப்பிற்கு காரணங்களாக சொன்னாலும், உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே, இளம் வயதினருக்கு பெருங்குடல், மலக்குடல் கேன்சர் அதிக அளவில் வருவதற்கான காரணமாக இருக்கிறது.

'டயட்'
பொதுவாக, இந்த வகை கேன்சர் பாதிப்பிற்கு உணவுப் பழக்கம் தான் முக்கிய காரணம். கடந்த, 20 ஆண்டுகளில் நம்முடைய உணவுப் பழக்கத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களில் கல்லீரல், பெருங்கடல் உட்பட, செரிமான மண்டல கேன்சர் பாதிப்பு அதிகரிக்க காரணமே, உணவுப் பழக்கத்தில் வந்துள்ள மாற்றம் தான்.
தென் மாநில உணவுகளில், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மஞ்சள், சீரகம், மிளகு, பூண்டு போன்ற பொருட்களில், உடல் நலத்திற்கு தீங்கு செய்யாத, இயற்கையான மூலப் பொருட்கள் உள்ளன. குறிப்பாக, மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற இயற்கையான மூலப் பொருள், உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக் கூடியது.
சிறு தானியங்கள் அனைத்திலும், உடலுக்குத் தேவையான நுண்ணுாட்டச் சத்துக்கள் அடங்கி உள்ளன. நம் பாரம்பரிய மசாலாக்களைத் தவிர்த்து, சுவைக்காக சேர்க்கப்படும், அஜினோமோட்டோ, செயற்கை நிறமிகள், பதப்படுத்த பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்ற அனைத்துமே, கேன்சரைத் துாண்டக் கூடியவை.
ருசிக்காக, தேவைக்கு அதிகமாக காரம், உப்பு, கொழுப்பு உள்ள உணவுகளையே, தினமும் சாப்பிடுகிறோம். அதிகப்படியான கொழுப்பு உள்ள, 'சிப்ஸ், பாப்கார்ன், கேக், குக்கீஸ், பிரஞ்ச் பிரை, பர்கர்' போன்றவற்றில், வேதிப் பொருட்கள் கலந்த, கரையும் தன்மையற்ற, 'டிரான்ஸ்பேட்' எனப்படும் கொழுப்பு, மிக அதிகமாக உள்ளது.
இதை தயாரிக்கும் போது, சேர்க்கப்படும் செயற்கையான நிறமிகள், வேதிப் பொருட்கள், உணவு செரிமானம் ஆகும் போது, மொத்த செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். குறிப்பாக, உணவில் உள்ள நுண்ணுாட்டச் சத்துக்களை மட்டும் உறிஞ்சும் சிறுகுடல், மற்றதை பெருங்குடலுக்கு அனுப்பி விடும்.
இங்கு, உணவில் உள்ள நீர்ச்சத்து, பிற தேவையான பொருட்களை உறிஞ்சிய பின், கழிவுகளை, மலக்குடலுக்கு அனுப்பி விடும். செரிமானம் ஆகும்போது, உணவில் உள்ள வேதிப் பொருட்கள், செல்களை பாதித்து, கேன்சரை உருவாக்குகிறது.

எண்ணெய்
தெருவோரக் கடைகளில், பக்கோடா, சிக்கன், பஜ்ஜி, வடை, சமோசா போன்றவற்றை, பெரும்பாலும் அனைவருமே விரும்பி சாப்பிடுகிறோம். இவற்றை பொரிப்பதற்கு, ஒரே எண்ணெயை, மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். இவற்றிலும் கரையாத கொழுப்பு அதிகம் உள்ளது.
வீட்டில், சமையலுக்கு பயன்படும் சுத்தமான தேங்காய் எண்ணெய், நெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில், எந்தப் பிரச்னையும் இல்லை. எண்ணெயைப் பலமுறை சூடு செய்யும் போது, அவற்றில் பல வேதி மாற்றங்களும், கரையாத கெட்டக் கொழுப்பும் அதிகரித்து விடுகின்றன.
சில வறுத்த, பொரித்த உணவுகளை, 'ஆர்டர்' செய்யும் போது, சூடாக இருப்பதால், நாம் கேட்டவுடன் செய்து தருவதாக நினைக்கிறோம்; இது தவறு. உதாரணமாக, பிரஞ்ச் பிரை ஆர்டர் செய்தால், ஏற்கனவே நறுக்கி, பதப்படுத்தப்பட்ட உருளைக் கிழங்கில் தான் செய்து தருவர். இப்படித் தான் நம்மையும் அறியாமல் பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளைச் சாப்பிடுகிறோம்.

இறைச்சி
மாட்டுக் கறி, பன்றிக் கறி, ஆட்டுக் கறி என்று கரும் சிவந்த நிறத்தில் உள்ள மாமிசங்களைச் சாப்பிட்டால், அவை செரிமானம் ஆகி, பெருங்குடல், மலக்குடலில் தங்கும் போது, அவற்றில் உள்ள கொழுப்பும், பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில், சிக்கன், மீன் போன்ற வெள்ளை நிற மாமிசத்தில், புரதம் உட்பட தேவையான சத்துக்களே உள்ளன.

உடல் பருமன்
கடந்த, 20 ஆண்டுகளில், அதிகப்படியான தொழில்நுட்ப வசதியால், உடலுழைப்பு இல்லை. அலுவலகத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறோம். நிறைய கொழுப்பு உள்ள, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு, அதிகப்படியான கலோரி கரைய, போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை.
உடல் பருமன் இருந்தால், மற்றவர்களைக் காட்டிலும், பெருங்குடல் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு, இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. தவிர, மார்பக கேன்சர், கருப்பை கேன்சரும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஹார்மோன்
பெண்களின் உடலில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தால், 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் சுரப்பு வழக்கத்தை விட, அதிகம் சுரக்கும்; இதனால் மார்பக, கர்ப்பப்பை கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம்.
ஆண்களுக்கு இது போல ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதில்லை; ஆனால், பெருங்குடல் கேன்சர் பாதிப்பு இருக்கும். ஆண்கள், உடல் பருமன் அதிகம் இருப்பவர்களாக இருக்கின்றனர். இதற்கான நேரடி தொடர்பு என்ன என்பது, இதுவரை தெளிவாக தெரியவில்லை.

நிறங்களின் சங்கமம்
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், தினமும் குறைந்தது, நான்கு நிறங்களில் உணவு வகைகள் நம் தட்டில் இருக்க வேண்டும். பச்சை நிறத்தில் உள்ள, குடை மிளகாய், கீரை வகைகள், மஞ்சள் நிறத்தில், பப்பாளி, மாம்பழம், அடர் சிவப்பு நிறத்தில் உள்ள பீட்ரூட், சிவப்பு நிறத்தில் உள்ள கேரட்.
மஞ்சள், ஆரஞ்சு, வெளிர் பச்சை, அடர் சிவப்பு, வெளிர் மஞ்சள் என்று, வரகு, சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, தீட்டப்படாத அரிசி, கோதுமை என்று, நம் பாரம்பரிய உணவுப் பொருட்களில் இல்லாத நிறமே இல்லை. இவற்றில் இருந்து, தினமும் நான்கு நிறங்களில் உணவு தயாரித்து சாப்பிடுவது, கடினமான வேலை இல்லை.
செரிமான மண்டலத்தின் மேல் அக்கறையும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் போதும். உணவுப் பழக்கம் சரியாக இருந்தால், பெருங்குடல் கேன்சர் என்றில்லை, செரிமான மண்டலம் தொடர்பான, அனைத்து கேன்சர் பாதிப்புகளும், கணிசமான சதவீதம் குறையும்.

நிலைகள்
பெருங்குடல் கேன்சர் உட்பட அனைத்து கேன்சர்களிலும், அதன் பாதிப்பு, நான்கு நிலைகளாக உள்ளது. எந்த நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர் என்பதைப் பொருத்தே, குணமடைவதற்கான வாய்ப்பு இருக்கும்.
நிலை என்பது, கேன்சர் கட்டி உடலில் எந்த அளவு பரவியிருக்கிறது என்பதை பொருத்தது. பெருங்குடல் கேன்சரில், முதல் இரண்டு நிலைகளில் பாதிப்பு இருந்தால், குடலுக்கு உள்ளே மட்டும் பாதிப்பு இருக்கிறது, வெளியில் பரவவில்லை என்று அர்த்தம்; இதை, எளிதாக சரி செய்ய முடியும்.
மூன்றாவது நிலையில் இருந்தால், குடலுக்கு அருகில் உள்ள, நிணநீர் கட்டிகளிலும் பரவி இருக்கும்; இதில், முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்பு, 70 சதவீதம் உள்ளது. நான்காவது நிலை என்பது, உடலின் உள்ளுறுப்புகளிலும் பரவி இருக்கும்; இதில், சரியாவதற்கான வாய்ப்பு, வெறும், 20 சதவீதம் மட்டுமே.
முதல் இரண்டு நிலைகளில், பெரிதாக எந்த அறிகுறியும், வெளியில் தெரியாது. அதனால் தான், ஆரோக்கியமாக இருந்தாலும், 40 வயதிற்கு மேல், ஆண்டிற்கு ஒரு முறையாவது, முழு ரத்த பரிசோதனை, கல்லீரல், சிறுநீரக செயல்பாடு இவற்றை தெரிந்து கொள்வது அவசியம். இதன் அடிப்படையில், டாக்டர் கையை வைத்து பரிசோதித்து, ஆரம்பக் கட்டத்தில் தெரியும் சிறு அறிகுறிகளை வைத்தே கண்டுபிடிப்பது ஆகும்.
பெருங்குடல் கேன்சரைப் பொருத்தவரை, மலம் கழிக்கும் போது, ரத்தம் வரும். பெரும்பாலும் இதை, மூலம் என நினைத்து, அலட்சியமாக இருந்து விடுகின்றனர்; பலர், அவர்களாகவே மருந்து சாப்பிடவும் செய்கின்றனர்.
ரத்தம் கசிவது தவிர, நம் ரத்த சொந்தங்களில் யாருக்காவது பெருங்குடல் கேன்சர் இருப்பது, காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது, மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். வழக்கமாக போவதை விட, பல முறை மலம் கழிக்க வேண்டிய நிலை, மலத்தில் சளி போவது, வலியுடன், சிரமப்பட்டு போவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயிற்று வலி, வலியுடன் மலம் கழிப்பது, மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவை, பெருங்குடல், மலக்குடல் கேன்சர் இருப்பதற்கான பொதுவான அறிகுறிகள்.

சிகிச்சை முறைகள்
பெருங்குடல் கேன்சர் உறுதியாகி விட்டால், அதன் நிலையை தெரிந்து கொள்ள, 'சிடி ஸ்கேன்' செய்து பார்க்க வேண்டும். சிலருக்கு, 'பெட் ஸ்கேன்' செய்ய வேண்டியிருக்கும்.
இரண்டுமே முழு உடலையும் பார்க்க வசதியான பரிசோதனை. கேன்சர், எந்த அளவு பரவியிருக்கிறது, எவ்வளவு துாரம் வெளியில் பரவியிருக்கிறது என்பதை பார்த்து, எந்த நிலை என்று உறுதி செய்வோம்.
பெருங்குடல் கேன்சரை பொருத்தவரை, அறுவைச் சிகிச்சை நிரந்தர தீர்வாக இருக்கும்; 'கீமோதெரபி', கதிரியக்கம் கொடுத்தால், சில காலத்தற்கு பின், மீண்டும் கேன்சர் செல்கள் வளர வாய்ப்பு உள்ளது.

அறுவைச் சிகிச்சை
பாதித்த வயிற்றுப் பகுதியை முழுவதுமாக திறந்து, திறந்த நிலை அறுவைச் சிகிச்சை செய்வது, அதன்பின், நவீன முறையில் நுண்துளை வழியே செய்யும், 'லேப்ராஸ்கோபிக்.' தற்போது, இதற்கு அடுத்த நிலையில் மேம்பட்ட தொழில்நுட்பமாக, 'கிளைவ் ரோபோ' முறையில் துல்லியமாக அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

'ஹைபெக்'
அறுவைச் சிகிச்சை செய்து, கீமோ உட்பட சிகிச்சைகள் செய்தாலும், சிலருக்கு, கேன்சர் செல்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, செரிமான மண்டலத்தின் மேல் பகுதியில் உள்ள தசைகளுக்கு கீழ், 'பெரிடோனியம்' எனப்படும், பாதுகாப்பு வளையம் உள்ளது; இந்த இடத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்படும்.
கீமோதெரபியில் செலுத்தப்படும் மருந்துகள், இந்த பகுதிக்குள் செல்லாது. அறுவைச் சிகிச்சை செய்யும் போது, சில சமயம், கேன்சர் செல்கள் வெளிப்பட்டு, இந்த இடத்தில் சென்று, தங்கி விடுவதும் உண்டு.
எனவே, அறுவைச் சிகிச்சை செய்யும் போதே, கீமோ மருந்துகளை, 90 நிமிடங்களுக்கு உள்ளே செலுத்துவோம். மருந்து சுழற்சியில் உள்ளேயும், வெளியேயும் சென்று, கேன்சர் செல்கள் இருந்தால் அழித்து விடும். இது தவிர, ஆரோக்கியமான செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், கேன்சர் செல்களை மட்டுமே அழிக்கும், 'டார்கெட்டட்'தெரபி, குமட்டல், வாந்தி, அயர்ச்சி போன்ற, பக்க விளைவுகள் அதிகம் இல்லாத, கீமோ மருந்துகள் வந்து விட்டன. மரபியல் ரீதியாக பெருங்குடல் கேன்சர் வரும் வாய்ப்பு, 5 சதவீதம் உள்ளது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,