உலக அமைதி தின வாழ்த்துகள்
உலக அமைதி தின வாழ்த்துகள்
. ஓ என் இனிய குழந்தைகளே ! ஞானத்தின் சொற்களை கேளுங்கள். நான் உங்களுக்கென பரிசளித்திருக்கிறேன்... உயிர்ப்பூட்டும் காற்றை மீனோடும் குளங்களை நறுமணப் பூக்களை தாங்கும் நிலங்களை நிழல் சிந்தும் மரங்களை குளுமையூட்டும் ஆறுகளை வானுரசும் மலைகளை கீதமிசைக்கும் பறவைகளை கலைமானும் கானக்குயிலும் ஆனையும் புலியும் ஒன்றாய் வாழும் காடுகளை நெல்லும் கம்பும் சோளமும் விளையும் நல்பூமியை இன்னும் பட்டியலிட முடியா வளங்களை சுகங்களை அள்ளி வழங்கியிருக்கிறேன்... குழந்தைகளே ! நீங்களோ திருப்தியுறாது ஒருவருக்கொருவர் வேட்டையாடுகிறீர்கள்.
உங்களின் சண்டைகளால் சோர்வுற்று இருக்கிறேன். பழிவாங்குவதற்காக செய்யும் உங்களின் பிரார்த்தனைகளால் சோர்வுற்று இருக்கிறேன். நீங்கள் சிந்தும் ரத்தத் துளிகளின் நாற்றத்தில் சோர்வுற்று இருக்கிறேன். என் குழந்தைகளே ! ஆயுத போர்களினால் நீங்கள் போடும் குப்பைகளால் சோர்வுற்று இருக்கிறேன். என் மார்பெங்கும் உன் கழிவுகள் நிரம்ப சோர்வுற்று இருக்கிறேன்
எனினும் குழந்தைகளே ! உங்களின் விரல் பிடித்து என் நதிக்கு அழைத்து செல்வேன். அமைதியில் நீராடி பலம் ஒற்றுமை என்றுணர்ந்து அமைதியாய் வாழுங்கள் என் இனிய குழந்தைகளே.
#மஞ்சுளா யுகேஷ்
. Henry Wadsworth long fellow என்பவரின் The Peace - Pipe என்ற ஆங்கில கவிதையை தழுவி உலக அமைதி தினத்தை முன்னிட்டு நான் எழுதியது
Comments