சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்






ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

 



தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் pசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

நமக்கு எழுத்தறிவித்த ஆசான்களை வணங்கிப் பணிவோம்.

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 ம் நாளை 'ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.

சாதாரணமாக ஒவ்வொரு வருடவும் பள்ளிகளில் ஆசிரியர் தினத்தன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துவார்கள். அனால் இந்த கொரோனா காலத்தில் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆசிரியர்களை வாழ்த்தக்கூட முடியாமல் மாணவர்கள் கவலையில் உள்ளார்கள். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களை நாளைய வரலாறு சார்பாக நாமும் போற்றுவோம்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு:

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, 'உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி' என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.










 










 












 

 











 






 

 













 





 


 





Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி