உலக உணவு தினம் 

16.10. 2020  இன்று உலக உணவு தினம்


உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என உரக்கச் சொன்னான் மீசைக்கவிஞன் பாரதியும்


உலக உணவு தினம் உலகில் கொண்டாட்டம் உணவும் இன்று பலருக்கோ திண்டாட்டம் 


உணவுக்கு தடையில்லா காலம் வர வேண்டும் உயிர்கள் எல்லாம் உண்டு மகிழ வேண்டும் 


உள்ளோரை வேண்டுகிறேன் உணவளியுங்கள் உயிர்கள் வாழ்ந்திட கருணை காட்டிடுங்கள்


 


உணவு தினம்: புதிய உலகை உருவாக்குவோம்!


உலகில் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ‘உலக உணவு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.


1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் கனடாவில் உள்ள கியூபெக் நகரில், உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் (FAO) நிறுவப்பட்டது. அதன்பின், 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் உலக உணவு தினம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


‘நமது செயல்பாடு நமது எதிர்காலம், 2030ஆம் ஆண்டுக்குள் பட்டினி இல்லாத உலகம் சாத்தியம்’ என்பதே இந்தாண்டு உலக உணவு தினத்தின் மையக்கருத்தாக அமைந்துள்ளது. பசியில்லாத நாட்டை உருவாக்க, உலகத்திலுள்ள அனைவரும் முன்வந்து உதவ வேண்டும்.


உணவே மருந்து


 மனிதனுக்குத் தேவையான ஆற்றல் உணவிலிருந்து கிடைக்கிறது. அதிலும், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும்போதுதான் நோய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். 


தண்ணீர், கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள் போன்றவை நம் உடலுக்குத் தேவையானவை. இவையனைத்தும் தினமும் புதிதாகப் பெற வேண்டும். 


நாம் உண்ணும் உணவு எவ்வளவு முக்கியமானதாக உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.


ஆனால், இந்த உணவு அனைவருக்கும் கிடைக்கிறதா? இந்த கேள்விக்குப் பதில் இல்லை. உலகில் 80 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள்தொகையில் 11 சதவிகிதம் ஆகும். ஊட்டச்சத்துக் குறைவால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சம் குழந்தைகள், ஐந்து வயதுக்குள் உயிரிழக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாக்கப்படுகிறது. இதுபோன்ற பல தகவல்கள், உணவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. அது சரி, பட்டினியில்லாத நிலையை உருவாக்க என்ன செய்யலாம்?


பிறருக்கு உதவுதல்


முடிந்த அளவுக்கு தனி நபரோ அல்லது அனைவருமோ சேர்ந்து, அந்தப் பகுதியில் இருக்கும் உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்கலாம். சில பகுதிகளில் உணவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அனைவரும் இது மாதிரியான திட்டங்களை முன்னெடுக்கும்போது, பசியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.


விழிப்புணர்வு உருவாக்கம்


பசியில்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பது குறித்து குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணவு மற்றும் வேளாண் அமைப்பு வலியுறுத்துகிறது. இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, அவற்றில் ஏதேனும் ஒன்று பலனளிக்க வாய்ப்புள்ளது.


வீணாக்க வேண்டாம்


பசியில்லாத உலகத்தை உருவாக்குவதில், உணவு வீணாக்கப்படுவதைக் குறைத்தல் மிக இன்றியமையாதது. உணவு மற்றும் வேளாண் அமைப்பு இதனை வலியுறுத்துகிறது. தேவையான அளவுக்கு மட்டுமே உணவை வாங்க வேண்டும். அப்படியே, மீதமாகும் உணவை வீணாக்காமல் சாப்பிட வேண்டும். அதிகமாக வாங்கும்போது, அதை இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.


இது போன்று, நம்மால் என்ன முடிகிறதோ அதைச் செய்து நம்மைப் போன்று மற்றவர்களும் பசியின்றி வாழ வழி செய்வோம்! உலக உணவு தினத்தைக் கொண்டாடுவோம்!!



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,