ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல
ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல : ஆய்வு செய்ய உத்தரவு
மதுரை,:ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல. அரசுத்துறை அலுவலகங்கள், நீதித்துறை வளாகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தவர் உலகராஜ். லஞ்ச குற்றச்சாட்டு அடிப்படையில் அவரை கட்டாய ஓய்வில் அனுப்ப வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை செயலாளர் 2011ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து மீண்டும் பணித் தொடர்ச்சியுடன் வேலை மற்றும் அதற்குரிய பணப் பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி உலகராஜ் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு: அரசு ஊழியர்கள் கடமையாற்றுவதில் நேர்மை அவசியம். அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் எவ்விதத்திலும் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல் பணிபுரிய வேண்டும். ஊழல் சமூகத்திற்கு தீமையானது. நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது.லஞ்ச ஊழல்களால் மக்கள் அரசின் சேவைகள், திட்டங்கள், சட்டப்பூர்வ உரிமைகளைப் பெற பெரும் போராட்டம், சொல்ல முடியாத துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஊழல் என்பது லஞ்சமாக பணம் பெறுவது மட்டுமல்ல பல்வேறு வடிவங்களில் உள்ளது.ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கல்ல. இதை பல முன்னாள் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். நீதித்துறையில் ஊழல் செயல்பாடுகளை மனசாட்சிப்படி அனுமதிக்க முடியாது.தங்கள் பிரச்னைக்கு கடைசி தீர்வாக மக்கள் நீதித்துறையை நாடுகின்றனர்.
நீதிபரிபாலனத்தில் அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும். இதில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அரசியல் சட்டத்தின் மீது கொண்டுள்ள மதிப்பீடு தகர்க்கப்படும் நிலை ஏற்படும். நீதித்துறையில் ஊழல் செயல்பாடுகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ஆய்வு, சோதனைகள் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்களின் சொத்து விபரங்களையும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஊழலை ஒழிக்க நிபுணர்களிடம் ஆலோசனை கோரலாம். அதன்படி அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்க வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்.நீதித்துறையிலும் விஜிலன்ஸ் பிரிவை பலப்படுத்த வேண்டும். நீதித்துறை மற்றும் அதன் வளாகங்களில் விஜிலன்ஸ் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதை நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்ற பதிவுத்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவு நகலை அனுப்ப வேண்டும்.மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறேன், என்றார்.
Comments