மருதாணி சிவப்பு..

 #வாழ்தல்_இனிது

 தொடர்   


-சங்கீதா ராமசாமி.

மருதாணி சிவப்பு..



எனக்கெல்லாம் திருவிழா, நாளு, கெழமைல கிடைக்கிற உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறைஞ்சதில்லை மருதாணி அரைக்கிற வைபவம். 


விரல்களில் ஆங்கங்கே மூடி போட்ட வாக்கில் அடர்த்தியாக வெச்சும், நடுவில் அழகான ஒரு பெரிய வட்டமாக வைக்கிறது மட்டுமே எனக்கான நிரந்தர வடிவமாக நான் நினைச்சிருந்தேன். ஆனா இதுதான் மருதாணி விரும்பிகளின் வடிவம்னு பிறகுதான் தெரிஞ்சது. நடுவே சில பல குட்டி வட்டங்களும் விரும்பியபடி இட்டுக்கலாம். குறிப்பிட்ட நாளுக்கு முன்கூட்டியே பச்சை மருதாணி பறிக்கிற வைபவம் தொடங்கிடும் வீட்டுல.


 நல்ல முத்தின இலைகளை முள் குத்தாமல், காம்பு கையோட வராமல் பறிக்கணும். ஒரே அடுக்கில் துளிர்த்து வரும் இலைகளை அழகாக, நாசூக்காக உருவி எடுக்கணும். இல்லன்னா பூக்களோ, காய்களோ இடைப்பட்டு காரியத்தை தாமதப்படுத்தும்.


 அதோட மருதாணி பூக்கள் வேறு கொத்து கொத்தாக பூத்து அவ்விடத்தில் வாசனையை பரப்பும். அது இன்னும் கிறக்கத்தை உண்டு பண்ணி இலைகளையும் பறிக்கவிடாமல் அலைகழிப்பதாக எனக்கு தோணும். எதிர்படும் மருதாணி பூக்களை பறிச்சி தலையில் வெச்சிக்கிட்டா தூக்கம் நிறைவாக வரும். 


இப்படி பறிச்ச இலைகளோட கொஞ்சமாக புளி, எலுமிச்சை சாறு, சர்க்கரைக் கரைசல் கலந்து அரைச்சா நல்லா பிடிக்கும் னு சொல்வாங்க. எனக்கு இந்த கலவை கவலையை கொடுக்கும். எனக்கு எப்போதும் எலுமிச்சை சாறு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனாலும் நாட்டு மருதாணியில் அதற்கான நிறம்  நிறையவே இருக்கும்.


மருதாணி செவக்குதோ இல்லையோ அம்மியில் வழவழ'னு நாலா பக்கமும் பரப்பி பரப்பி, இழுத்து வெச்சி அரைக்கணும். கூடவே கை விரல்களை மட்டும் பயன்படுத்தி வழிச்சி வழிச்சி மையத்துல வைக்கும் போது அரைச்ச மருதாணி படும் இடமெங்கும் இளஞ்சிவப்பாக  இருக்கும்.  கூடவே கை சும்மா இருக்காமல் எல்லா பக்கமும் படுவது போல் பிரட்டி எடுத்து, வேணும்னே தடவி, பச்சையென பூக்கத் தொடங்கியிருங்கும் அதை பார்க்கறதே  எதிர்வரும் விழாவை வரவேற்கிறது போல் இருக்கும்.



எனக்கெப்போதும் இந்த கோன் மருதாணிகளில் பெரிய ஆர்வமெல்லாம் இருந்ததில்ல. பிடிச்ச வடிவங்களை வரைய முடியுங்கறது உண்மைதான். ஆனாலும் பல வண்ணங்களில், தோலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் கலப்படங்களோட கிடைக்கும் அதை வைக்கிறது சில நேரங்களில் பயத்தை மூட்டுவதாக இருக்கும். எல்லா இடங்களிலும் கோன் மருதாணிக்கான தயாரிப்பு முறை ஒரே மாதிரியாகத்தான் இருக்குதான்னு நினைச்சா அதுவும் கிடையாது. வியாபார நோக்கில் எல்லா நிறமூட்டிகளையும் கலந்துதான் அவங்க விற்பனைக்கு வைக்கிறாங்க'னு தெரியும். 


நிழலில் உலர்த்திய மருதாணி இலையை நல்லா அரைச்சி மெல்லிய ஷாலில் சலிச்சிச்செடுத்து, தேவைப்படும் போது டீகாஷன், எலுமிச்சை சாறு, யூக்கலிப்டஸ் தைலம் கலந்து ஒரு கவரில் இட்டு கோன் போலாக்கி தேவையான‌ வடிவங்களை வரைஞ்சிக்கலாம்.

இது நம்ம கைப்பட தயாரிச்சதுன்னு ஒரு மன நிறைவும் கூடவே கிடைக்கும். இம்முறையில் பண்ண கலவையை தலைக்கு தடவியும் குளிக்கலாம். இது கூந்தலுக்கு பளபளப்பைக் கொடுக்கும். 


சரி இந்த பச்சை மருதாணியை கைகளில் வைக்கிறதுக்கு சரியான நேரம்னு பார்த்தால் இரவு தான். அதுக்கான‌ முன்வேலைகளும் அதிகம். சாப்பிட்டு முடிச்சி, எண்ணெய் போக கைகளை துடைச்சி, போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் போயிட்டு வந்துட்டு பாயை விரிச்சி, பழைய போர்வையை காலுக்கிட்ட ரெடியாக வெச்சிட்டு, தலைமாட்டுல தண்ணி சொம்பு, எலுமிச்சை சாறு, முதுகு சொறிய ஏதேனும் சீப்போ, இல்ல சுருட்டி வெச்ச நோட்டு பேப்பரோ, விசிறியோ தயாரா இருக்கணும். ஏன்னா இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தான் நடுமுதுகில்  நடுநாயகமாக அரிக்கும்.


இதைவிட நினைச்சவங்க யாரும் வெச்சிட முடியாது. இதுல கலைநயத்தை விட பொறுமை ரொம்ப முக்கியம். வைக்கிறவங்களும், வெச்சி விடறவங்களும் ஒரே அலைவரிசையில் ஒத்துப் போனால் மட்டுமே இந்த வைபவம் சிறப்பாக முடியும். இல்லைன்னால் பேசாமலாவது இருக்க பழகியிருக்கணும். இல்லன்னா கை பழுக்குதோ இல்லையோ கன்னம் பழுத்திடும்.


மருதாணியில் சிவப்பு நிறத்தைக் கொடுக்கக் கூடிய நிறமிக்கு 'லாசோன்' னு பெயர். இது தெரியாத கிராமத்து மக்கள் பிடிச்சவங்களை நினைச்சிட்டே கைகளில் வைக்கும் போது செவப்பா பிடிக்கும்னு சொல்வாங்க. இதை இப்பொழுதெல்லாம் திருமண நிகழ்வில் பெரிய விழாவாகவே நடத்தறாங்க. மணமக்களின் பெயரை ஒவ்வொருவரின் கையிலும் எழுதி கண்டுபிடிக்க சொல்வது இன்னும் காதலைக் கூட்டும்னு நம்பறாங்க.  இப்படியொரு சாய்ஸ் எனக்கெல்லாம் இருக்கும் போது தலயே சரணம்னு ஆசையோடு ஐக்கியமாகி இருந்த நேரமது.  இதுபோல் நிறைய சுவாரசியமான சம்பவங்களோட அவ்விரவு பொழுது கழியும்.


நேற்று இதே போல் பச்சை மருதாணியை சூழ்நிலை காரணமாக அம்மியில் அரைப்பதை விடுத்து, மிக்ஸியில் சின்ன ஜாரில் தண்ணி அதிகம் கலக்காமல், வெளியே தெரிச்சி வராமல் கவனமாக திறந்து மூடி அரைக்கையில் வெளி வந்த அந்த பச்சை வாசம் என்னை பால்யம் அழைத்துப் போனது. எதில் அரைத்தாலென்ன. இன்னமும் தன்  இயல்பு மாறாமல், அதே வாசனையுடன் இருப்பதில் மருதாணி மறக்க முடியாத மையலை எனக்குள்  கொடுத்துட்டே இருக்குன்'னு சொல்லலாம். 


இப்படியான இரவுக்குப் பின் குட்டி மகளின் சின்னஞ்சிறு கைகளின் வழியே என் மனசோட எண்ணங்களையும் வழித்து கவனமாக இட்டேன். அவளின் கை நல்லா சிவக்கணும்னு நினைச்சிட்டே தூங்கிட்டேன். காலையில விழிக்கையில் முகத்துக்கு நேராக சிரித்தபடியே கோவைப்பழ விரல்களை நீட்டி புன்னகைத்த மகள் அழகாக சிவந்திருக்கு என்றாள். மனசெல்லாம் நிறைஞ்சபடி அந்த சிவப்பெல்லாம் நான்தானே மகளே என புன்னகைத்தேன்.


#வாழ்தல்_இனிது





--சங்கீதா ராமசாமி.

Comments

Unknown said…
இளமைக்காலத்தின் பல நினைவுகளை எனக்கும் கொண்டுவத்தது... மகிழ்ச்சி சங்கீதா வாழ்தல் இனிது.

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,