அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்திய முக்கிய காரணிகளாக சசிகலாவும் ரஜினிகாந்துமே இருப்பதாக தகவல்

 அதிமுக - பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமா என்ற விவாதம் முடிவுக்கு வந்துள்ளது. அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வரும், முதல்வரும் போட்டி போட்டுக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அறிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரும் என அமித் ஷாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகளின் கூட்டணி குறித்த முன்னுக்குப் பின் முரணான


பேச்சு, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிருப்தி, ரஜினியின் வருகையை எதிர்பார்த்திருந்தது உள்ளிட்ட ஏராளமான காரணங்கள் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வியை பலமாக எழுப்பின. ஆனால் அமித் ஷாவின் வருகை இதை உறுதிப்படுத்தி பல கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தாலும் ரஜினிகாந்தை கட்சி தொடங்கச் செய்து அவரோடு இணைந்து மூன்றாவது அணியை அமைக்க பாஜக திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரஜினிகாந்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்றதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் ரஜினிகாந்த் பல்வேறு காரணங்களைச் சொல்லி சமாளித்து வந்தார். கொரோனா பரவல், தனது உடல்நிலை ஆகியவையும் ரஜினி தரப்பில் காரணங்களாக சொல்லப்பட்டு வந்தன. அமித் ஷாவுக்கும் ரஜினிக்கும் மீடியேட்டராக செயல்பட்டு வரும் துக்ளக் குருமூர்த்தி அண்மையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசினார்.

 இதற்கிடையே அதிமுக - பாஜக கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்று கூறுகின்றனர் ஒரு தரப்பினர். அதேசமயம் அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாளுக்கு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சசிகலாவின் விடுதலை விவகாரம். சசிகலாவை வெளியே கொண்டு வந்து தற்போதைய அதிமுக தலைமைக்கு பாஜக செக் வைக்க முகாந்திரம் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அமித் ஷாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டதால் சசிகலாவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது

சசிகலாவுடனான பேரம் முடியாமல் போனது, ரஜினிகாந்த் தொடர்ந்து தயக்கம் காட்டுவது ஆகியவை பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தியுள்ளது. தற்போது எத்தனை தொகுதிகளை அதிமுகவிடமிருந்து கேட்டுப் பெறலாம், என்னென்ன தொகுதிகளைப் பெறலாம் என்று அமித் ஷா நிர்வாகிகளிடம் கேட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேண்டும் என்று கூறப்படுவதால் 60 தொகுதிகளிலிருந்து பேரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,