ரமணமகரிஷி (11)
ரமணமகரிஷி (11)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 11
: பத்து மாத பந்தம் என்னும் உறவு, அதில் காணும் நிறைவு சுகம் என்பார்கள்.
தாய் என்பவள் பிள்ளையை மட்டுமா பெற்றாள். அதை வளர்ப்பதற்கான பாசத்தை பெற்றாள். அது வளரும் அழகைக் காண்பதற்கு பெருமிதம் அல்லவா பெற்றாள்.வளர்த்து ஆளாக்கிய பிள்ளையை வாழ்விக்கும் நல்லுணர்வையும் பெற்றாள்.அதன் வாழ்வைக் கண்டு மகிழும் ஆசையைப் பெற்றாள். இதனால் என்றென்றும் மாறாத பந்தம் பெற்றாள்.
பிள்ளை எதை பெற்றது.?பிறந்தவுடன் மறந்துவிடும் பெருமையைத் தான் பெற்றதா, உறவு என்பது தொடர்கதை இல்லையா திடீரென்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தால், ஏக்கத்தில் தாய் மனது அல்லல் படாதா.
தாய் அழகம்மாள், மகனைத் தேடி, ஏற்கனவே திருவண்ணாமலை வந்து சென்றார்..
தற்போது மீண்டும், உயிருக்குள் உறவான, மகனைப் பார்க்க ஆசைப்பட்டார். திருப்பதி சென்று திரும்பும் வழியில் அம்மா திருவண்ணாமலை வந்தார். இம்முறை டைபாய்டு சுரத்தில் விழுந்து ஆசிரமத்திலேயே தங்கி விட்டார்.
முன்பு மௌன நிலையிலே இருந்த மகான் எதற்கும் அசையாதவராக இருந்தார். நாளாவட்டத்தில் தம்முடைய ஆன்மிக முன்னேற்றத்தை விட, தம்மை நாடி வருவோர்களின் மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டியவரானார். அவர் ஓரிடத்தில் அடங்கிக் கிடந்து விடாது மலை மீதும், மலை அடிவாரத்திலும் சுற்றிக் கொண்டிருந்தார். எல்லோரிடமும் பேசுகிறவரானார். அவரவர் ஐயத்தை தீர்த்து வைப்பார்.
அந்நிலையில் அந்த மனப் பிணி மருத்துவர், தம்முடைய தாயின் உடற்பிணியையும் கவனிக்க வேண்டிய தாயிற்று.
தாயிடம் மிகவே பரிவு காட்டினார் அவரது பிணி நீக்கக்கோரி ஆண்டவனிடம் வேண்டினார்.
பிறவிப் பிணிகளை நீக்கும் பெருமானே, என் தாயின் உடல் பிணி நீக்குவாயாக!
உன் திருவடித் தாமரையில் நான் புகலிடம் பெற்றேன் எனில் அவள் என்னை பெற்றதனாலன்றோ!
உன்னிடம் அடைக்கலம் என்று வந்தவரை காப்பவனே, உன் பேரொளியில் அவளுக்கு கவசமிடு.
துறவியின் மனம் பந்தங்களை அறுக்க முயல்கிறதே தவிர பந்தம் என்பது எப்போதும் அப்படியே தான் இருக்கிறது.பாசி விலக்கி நீர் எடுக்கிறோம். திரும்பவும் அந்த பாசி நீரை மூடிக் கொண்டு விடுகிறது, காரணம் அது குளத்தை விட்டுப் போவதில்லை. நினைவை தொலைக்கலாம், மனதை தொலைக்க முடியுமா? ஆத்மாவைக் காணவும் பரமாத்மாவைக் காணவும் மனம் இல்லாமல் ஆகுமா?
பகவான் ஸ்ரீ ரமணரின் வேண்டுதல் பலித்தது. பகவானுக்கு என்றென்றும் பக்க பலமாய் இருப்பது பரம்பொருளே.
தொழுவார் மனதில் வருவார், துணை நின்று நலம் புரிவார்.
பகவான் ஸ்ரீ ரமணரின் மனதிலே, அருணாச்சலர் இரண்டறக் கலந்தவர் அல்லவா.
பகவானின் தாயார் அழகம்மாள் உடல் ஆரோக்கியம் கொண்டவள் ஆனார்.
மீண்டும் பகவானின் தாயார் அழகம்மாள் மானாமதுரை சென்றார். திருச்சுழியில் அந்த குடும்பத்துக்கு சொந்தமான ஒரு வீடு இருந்தது. பல கடன்களை அடைக்க வேண்டி அதனை விற்றார்.ஆனால் மீண்டும் திருவண்ணாமலை யை நினைவாலே ஈர்க்கப்பட்டார்.
உலகியல் வாழ்க்கையில் இருந்து ஆசிரம வாழ்க்கைக்கு அவர் தயாரானார்.
திருவண்ணாமலை வந்த அழகம்மாள் முதலில் கொஞ்ச நாட்கள் எச்சம்மாளோடு தங்கியிருந்தார் தாயார் வந்ததும் பகவான் எங்கே குடும்பத்தில் சிக்கி விடுவாரோ என்ற அச்சம் இருந்தது பக்தர்களுக்கு.
பகவான் ஸ்ரீரமணருக்கு, தனது தாய் பாசத்தின் விளைவால் ஏதேனும் மாற்றம் இருந்ததா நாளைய பதிவில்
முருக.சண்முகம்
Comments