ரமணமகரிஷி (20)
ரமணமகரிஷி (20)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி 20
பகவானிடம் நம்பிக்கை வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். தம்முடைய வடமொழிப் புலமையால் "காவிய கண்ட " என்னும் பட்டம் பெற்றிருந்தார். அவர் பேச்சே கவிதை மாதிரி இருக்குமாம். எவ்வித முன் யோசனை இல்லாமல் இயல்பாகவே சிறந்த கவிதையை பாடுவார்.
1878 ல் பிறந்த போது இவருடைய தந்தை காசியில் விநாயகக் கடவுள் முன் நின்று இருந்தார். அப்போது அந்த கடவுளிடம் இருந்து ஒரு குழந்தை தம்மை நோக்கி வருகிற மாதிரி காட்சியைக் கண்டார். அதனால் தான் தனது குழந்தைக்கு கணபதி என்று பெயர் வைத்தார்.
ஐந்து வயது வரை கணபதி பேசாமல் இருந்தார்.வலிப்பு நோயால் அவதிப்பட்டார். அதன்பிறகு அவருடைய திறமைகள் வெளிப்பட்டு, பத்து வயதிலேயே வடமொழியில் கவிதை புனைந்தார். சோடி பஞ்சாங்கம்(almanac ) ஒன்றையும் தயாரித்தார்.
சமஸ்கிருத காவியங்கள் பலவற்றையும் இலக்கணங்களையும் கற்றுத்தேர்ந்தார். தனது பதினான்காவது வயதில் காவியங்களையும் மகாபாரத, இராமாயண மற்றும் உரைநடை மட்டும் புராணங்களையும் அறிந்து படித்தார். வடமொழியில் நன்கு எழுதவும் பேசவும் கூடியவராகக் இருந்தார். புலமைமிக்கவர். பகவானை போலே வியக்கத்தக்க ஞாபகம் சக்தி உடையவர். எதைப் படித்தாலும் கேட்டாலும் அப்படியே மனதில் பதித்துக்கொண்டு விடுவார். மகத்தான திறமையும் அவருக்கு இருந்தது.
18 ஆவது வயதில் திருமணம்.மணமான கொஞ்ச நாளில் அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார். புனிதத் தலங்களுக்கு போவது, மந்திரசெபம்,தவம் செய்வதுமாக இருந்தார்.
1900 ல் வங்காளத்தில் உள்ள நாடியா பகுதியில் வடமொழி பண்டிதர்கள் கூட்டம் ஒன்று நடந்தது அங்கு தான் அவருடைய வடமொழி "காவிய கண்ட" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
1903 ல் திருவண்ணாமலை வந்த சாஸ்திரி பகவானை இரு முறை சந்தித்தார். கொஞ்ச காலம் வேலூரில் உபாத்தியாயர் வேலை பார்த்தார். சில வருடங்களிலேயே அந்த வேலையை விட்டுவிட்டார்.
1907 ல் மீண்டும் திருவண்ணாமலை வந்த போது ஐயப்பாடுகள் அவரை வருத்தின.எத்தனை படித்தென்ன, தவம் செய்தென்ன, ஒன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றோமா, இல்லை ஆன்மீகத்தில் வெற்றி பெற்றோமா என்ற ஐயம்.
ஒரு குழப்பமான நிலையில் தாம் இருப்பதாக உணர்ந்தார் கணபதி சாஸ்திரி.
அப்போது தான் மலைமீது உறையும் பகவான் நினைவு வந்தது.அவரிடம் கட்டாயம் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை.மாலை வெயிலைப் பொருட்படுத்தாமல் மலை ஏறினார். விருபாட்சி குகை அடைந்தார். அங்கே சுவாமி தாழ்வாரத்தில் தனியாக அமர்ந்து இருந்தார்.அவர் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரின் கால்களைப் பற்றிக் கொண்டு உரத்த குரலில் வேத சாஸ்திரம் யாவும் நான் கற்றேன் ஜெபித்தேன் ஆனால் "தபஸ் "னா என்னன்னு இந்த நிமிஷம் வரை தெளிவாகப் புரியலையா. அதுதான் உங்கள் பாதத்தை அடைக்கலமானது என்றார்.
பகவான் தன்னுடைய அமைதியான நோக்கை அவர் பக்கம் திருப்பினார். பதினைந்து நிமிடம் போல் அவரையே பார்த்தார். கவனித்தால் தெரியும் எந்த இடத்திலிருந்து நான் என்கிற சக்தி தோன்றுகிறதோ அதனுள் மனம் தன்னை மறக்கிற நிலை தான் தவம் என்பது.எது மந்திர ஒலியின் மூலமும் அதனுள் மனம் தன்னை மறப்பதே தவம் என்றார்.
கணபதி சாஸ்திரிக்கு தன்னை மகிழ்ச்சியில் ஆற்றியது பகவானின் வார்த்தைகளா அல்லது அவருடைய அருட்பார்வையா என்று புரியவில்லை. இருந்தாலும் அவரிடமிருந்து நல்லதொரு தெளிவைப் பெற்றார். தனக்கு கிடைத்த உபதேசம் பற்றி தனது நண்பர்களுக்கெல்லாம் கடிதங்கள் எழுதினார். பகவானை போற்றி சமஸ்கிருதத்தில் பாடல்களை இயற்றினார். பகவான் பெயர் வேங்கடராமன் என்று இருந்ததை அவர் பழனி சுவாமியிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.இனி அவரை "பகவான் ஸ்ரீ ரமணர் "என்று அழைக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்தவரும் கணபதி சாஸ்திரியே.
கணபதி சாஸ்திரி அவர்கள், பகவான் ஸ்ரீரமணரைப் பெருமைப்படுத்திய விவரம் நாளைய பதிவில்.
Comments