ரமணமகரிஷி (23)

 ரமணமகரிஷி (23)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 23



முகவைக் கண்ண முருகனார்''

 பகவான் ஸ்ரீ ரமணரால் ஈர்க்கப்பட்டவர் முருகனார்  என்னும் தமிழ்க் கவிஞர்.

 இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். உற்றார் உறவினர்களால்  சாம்பமூர்த்தி என்றழைக்கப்பட்டார்.  கல்லூரி நாட்களில் அவருக்கிருந்த  தமிழ்ப்  பற்றின் காரணமாக தமது பெயரை முருகனார் என்று   தூய தமிழாக்கிக் கொண்டவர். தமிழ் பண்டிதர் வேலையில் இருந்தவர். வீடு வாசல் துறந்து தனியாக திருவண்ணாமலை சென்று ரமணரின் மனதில் இடம் பிடித்தார்.

 புற  வாழ்வை அறவே துறந்து கடைசிவரை துறவியாகவே வாழ்ந்தார்.  மகரிஷியை சந்தித்தது முதல் வேறு ஒருவர் பற்றியும் எதைப் பற்றியும் பாடாமல் இருந்தவர்.

குரு ரமணர், தனக்கும் பிற அடியார்களுக்கும் கூறிய கருத்துக்களையும், உபதேசங்களையும், ரமணர் குறித்து தாம் இயற்றிய தோத்திரங்கள், அவரால் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பற்றியும் கிட்டத்தட்ட 30,000 தமிழ்ப் பாக்களாக  இயற்றியுள்ளார்.

 ரமணர் பக்தர்களுக்கு அருளிய உபதேச வாசகங்களையும், எளியே ஆன்ம விசாரத்  தத்துவத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக் கொண்டு அவற்றை கருத்துச் செறிவான செந்தமிழ் செய்யுள்களாக திறம்பட எழுதினார். அவ்வப்போது ரமண மகரிஷியிடம் காண்பித்து அவரது ஆலோசனை மற்றும் அனுமதி பெற்று வந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களை புகுத்தி பாடலை தயார் செய்தார். இவ்வாறு தொகுத்த நூலே  குருவாசக்  கோவை என்பது. மொத்தம் 1282 நாலடி வெண்பாக்கள் கொண்டது.  அவற்றில் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை.  இக்கோவை குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது.

 ஸ்ரீ ரமணர் சித்தாந்தத்தை அதன் இயல் வடிவிலே  விரிவாக விளக்கம் செய்த நூல் என்று மகரிஷியே பாராட்டியிருக்கிறார். இதனால் மகரிஷியே  ஆசிரியர் என்று ரமணர் அடியார்களிடையே  பரவலாக கருதப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் பேராசிரியர் சுவாமிநாதன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.

1928 ல் தொடங்கி முருகனாரின வேண்டுதலால் ஸ்ரீ ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் (வெண்பாக்கள்) ஒன்று திரட்டப்பட்டு சீரமைத்து தொகுக்கப்பட்டன.  இவையே உள்ளது நாற்பது மட்டும் மற்றும் அனுபந்தம் என்ற தலைப்பில் நூலாக வெளியிடப் பட்டன. மேலும்  முருகனாரின் வேண்டுதலால் மகரிஷியே  இயற்றிய நூல் தான் உபதேச உந்தியார்.

 குரு வாசகக்  கோவை, உள்ளது நாற்பது,உபதேச உந்தியார் ஆகிய மூன்றும்  மதிப்புமிக்க பொக்கிஷங்களாய் ஸ்ரீரமணர்  அடியார்களின் சீடர்கள் கருதினர்.

 முருகனார் பின்னாளில் இயற்றிய ரமணி சந்ததி முறை எந்த நூலில் ரமண புராணம் என்ற பகுதியில்  ரமணர் இயற்றிய  வரிகளே உள்ளன. ரமணர் இயற்றிய பல்வேறு நூல்கள் அடங்கிய ரமணா நூற்றிரட்டு  என்ற தொகுப்பில் முருகனார் இயற்றிய சில பாடல்கள் ஸ்ரீ ரமணர் சேர்த்துள்ளார். இவ்வாறு ஆக்கியோன் தானே என்ற பாகுபாடில்லாமல்  குரு ரமணரும் முருனாரும்  கவிதைகள் புனைந்தனர்.

 கலங்கும் உள்ளங்களுக்கு கலங்கரை விளக்கமாய், ஆறாத ரணங்களுக்கு அருமருந்தாக விளங்குவது அருணாச்சலம் துதி  பஞ்சகம். இதன் விவரம் நாளைய பதிவில்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,