ரமணமகரிஷி (4)

  ரமணமகரிஷி 

தொடர்

பகுதி (4)



திருவண்ணாமலை இன்னும் 20 மைல் தூரம் தானே உள்ளது. வேங்கடராமன் நடக்க ஆரம்பித்தார். அதே சமயம் பசியில் களைத்துப் போனார்.


 தற்செயலாக ஒரு வீட்டின் எதிரில் நின்றார். முத்துகிருஷ்ண பாகவதருடைய வீடு.  அங்கே சாப்பாடு கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி அவரை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.


 கோகுலாஷ்டமி தினமான அந்நாளில்  பளிச்சிடும் கண்களோடு ஒரு அந்தண இளைஞர் வாசலில் நின்று சாப்பாடு கேட்கிறானே! அந்த அம்மையார் பரிவோடு தன் வீட்டிலிருந்த பழைய சாதத்தை அவருக்குப்  படைத்தாள்


 வேங்கடராமன் தனது காது கடுக்கன்களை கழற்றி பாகவதரிடம் கொடுத்தார். "இதை வைத்துக்கொண்டு நான்கு ரூபாய் கொடுங்கள் "என்றார்.  தான் யாத்திரை புறப்பட்டதாகவும். செலவுக்கு எடுத்து வந்த பணம் தீர்ந்து விட்டது என்றார்.


 பாகவதர் காது கடுக்கன்களைப் பார்த்தார்.எப்படியும் இருபது ரூபாய் பெறும்.  உம்முடைய விலாசம் சொல்லு முகவரி எழுதிக்  கொண்டு  ரசீதுடன் ரூபாயைக்  கொடுத்தார்.அந்த தம்பதிகள் ரொம்ப நல்லவர்களாக இருந்திருக்க வேண்டும். மதியம் தங்கள் வீட்டிலேயே வைத்திருந்து சாப்பாடு போட்டார்கள். கிருஷ்ண பரமாத்மாவுக்கு நிவேதனம் செய்வதற்காக வைத்திருந்த இனிப்புகளில் கொஞ்சத்தை  பொட்டலமாகக்  கட்டி கையில் கொடுத்தனுப் பினார்கள்.



வேங்கடராமனுக்கு அடகு வைத்த நகையை மீட்க உத்தேசம் இல்லை. அந்த ரசீதைக்  கிழித்து காற்றில் வீசினார். மறுநாள் காலை வரை திருவண்ணாமலை ரயில் இல்லையெனத்  தெரிந்தது. இரயில் நிலையத்தில் படுத்து  இரவைக் கழித்தார்.


 இறைவன் கருணையே வடிவானவர் தான். ஆனாலும் தனக்கு பிரியமானவர்களிடம் சமயத்தில்  விளையாடிப்  பார்ப்பதுண்டு. அப்படித்தான்  தனது சன்னிதானத்துக்கு வரவழைத்த வேங்கடராமனையும் இங்கும் அங்குமாய் அலையவிட்டது.


1896 செப்டம்பர் 1, காலை திருவண்ணாமலை சென்றடைந்தார். தான் மதுரையிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள் தான் தன்னுடைய இலக்கை அவர் எட்டினார்.


 கால்கள் கோயிலை நோக்கி விரைந்தன. இதயம் மகிழ்ச்சியில் படபடத்தது.நேராக பெரிய கோவிலில் நுழைந்தார்.  அவரை  வரவேற்க மூன்று மதில் சுவர்களும் விரியத் திறந்திருந்தன. கர்ப்பக்கிரகம்  உள்பட எல்லாக் கதவுகளும் தான். அவர்  தனியே மூலஸ்தானத்தில் நுழைந்தார்.  தனது  பயண முடிவில் குறிக்கோள் நிறைவேறியது. பரவசமாய் ஒரு ஐக்கியம்.


அண்ணாமலையார் மீது வேங்கடராமனுக்கு  இருந்த அன்பு எல்லையற்றது. கிட்டத்தட்ட அருணாச்சலேஸ்வரப் பித்தராகி விட்டார் எனலாம்.


 அண்ணாமலை வந்தடைந்த பின்னர் பெற்றோரிட்ட வேங்கடராமன் என்ற பெயர் மறைந்தது. பகவான் ரமணரிஷி என்றானது.அதுவே என்றைக்குமே நிலைத்தது.


ரமணர்  அண்ணாமலைக்குச்  சொந்தம். அண்ணாமலை ரமணருக்கு சொந்தம் என்ற நிலை ஏற்பட்டது. இரண்டற கலந்த நிலை அதுவே.


 அன்று முதல் ரமணரின் எண்ணமும் செயலும் அருணாசலனை  மையமாகக்  கொண்டு அமைந்தது.


 கோயிலில் இருந்து வெளிப்பட்ட ரமணன் இங்குமங்குமாய் சுற்றிக்கொண்டிருந்த போது "முடி எடுக்கவா" என்றக்  குரலைக் கேட்டார். யாரோ ஒரு நாவிதர் தான் அழைத்தது.


" நீ உலகைத் துறந்ததையோ, துறக்கப் போவதையோ அறிவிக்கிற  மாதிரி.

 அடையாளம் ஏதும் இல்லையே என்று கேட்கிற மாதிரி இருந்தது.


அய்யன்குளம் குளத்தடியில் இருந்த நாவிதர்களில் ஒரு வரிடம் தலையை மழித்துக் கொண்டார். தன் மடியிலிருந்த மிச்ச சில்லறை  உறுத்தியது.  பாகவதரிடம் பெற்ற நான்கு ரூபாயில்  மிச்சப்பட்டிருந்த மூன்று ரூபாய், கொத்தாக அள்ளி வீசி எறிந்தார். இனி அவர் பணத்தை கையாளப்  போவதில்லை. பாகவதரின் மனைவி கொடுத்த இனிப்புப் பொட்டலத்தையும்  அவ்வாறே எறிந்து விட்டார்.குல அடையாளமாக தாம் தரித்திருந்த முப்புரி நூலையும் கழற்றிப்   போட்டார். உலகையே துறக்கிறவன் வீட்டையும் சொத்துக்களை மட்டும் துறக்கிறான். குலம் உள்பட அனைத்தையும் தானே.


அதுவரை தாம்  உடுத்தியிருந்த  வேட்டியின் ஒரு பகுதியை கிழித்து அரையில்  கோவணமாக அணிந்துகொண்டு எஞ்சியதை தூர எறிந்தார்.


 துறவுக்கான செயல்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குத் திரும்பினார்.


முடி வெட்டிக் கொண்டால் குளிக்க வேண்டும் என்று வேதங்களில் சொல்லப்பட்டிருந்தது அவர் நினைவுக்கு  வந்தது. ஆனால் இந்த கட்டைக்கு குளியல் ஒரு கேடா என்று தமக்குள் அவர் சொல்லிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு மழை பொழிந்தது.அவரது உடம்பைக்  கழுவி விட்டது. கோயிலில் நுழையும் முன்  அவர் குளித்தாகிவிட்டது.


அவருக்கென ஒரு இடம் தந்தது  ஆயிரங்கால்  மண்டபம், இத்தொடரின் அடுத்த  பகுதி நாளைய பதிவில்.


முருக  .சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி